பீஜிங், ஜூன் 20–
ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி, முதல்முறையாக வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டியானது, சீனாவில் கடந்த 17 ந் தேதி முதல் தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக சில போட்டிகள் இத்தாலியில் 22 ந் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறுகிறது.
முதல் முறையாக பதக்கம்
இந்த ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டியில் இந்தியாவிற்காக தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி பங்கேற்றார். காலிறுதி போட்டியில் உலக சாம்பியனான மிஸாகி யமுராவை இந்திய வீராங்கனை பவானி தேவி வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதனையடுத்து ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சுப் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையுடன் இந்தியாவின் பவானி தேவி மோதினார். இதில், 14க்கு-15 என்ற புள்ளிகள் கணக்கில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையை பவானி தேவி தோற்கடித்தார்.
இதனையடுத்து பவானி தேவிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீராங்கனை ஒருவர் ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.