செய்திகள்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடக்கம்

முதல் போட்டியில் நேபாள அணியை 238 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான்

கராச்சி, ஆக. 31–

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் நேபாள அணியை பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது.இதில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் அணிகள் ஒரு பிரிவிலும், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் மற்றொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- – நேபாளம் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக பகார் ஜமான், இமாம்-உல்-ஹக் களமிறங்கினர்.தொடக்கத்தில் பகார் ஜமான் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து இமாம்-உல்-ஹக் 4 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

343 ரன்கள் இலக்கு

பின்னர் கேப்டன் பாபர் அசாம் , முகமது ரிஸ்வான் இணைந்து சிறப்பாக ஆடினர். அணியின் ஸ்கோர் 111 ரன்னாக இருந்த போது முகமது ரிஸ்வான் 44 ரன்களில் (ரன் அவுட் ) ஆட்டமிழந்தார்.தொடர்ந்து வந்த சல்மான் ஆகா 5 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த இப்திகார் அகமது 43 பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய பாபர் அசாம் 109 பந்துகளில் சதம் அடித்தார். இதன் பின்னர் பாபர் அசாம் , இப்திகார் அகமது இருவரும் இணைந்து பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்டனர். இறுதியில் பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 6விக்கெட் இழப்பிற்கு 342ரன்கள் எடுத்தது. அந்த அணியில் பாபர் அசாம் 151ரன்கள் (14 பவுண்டரி, 4 சிக்சர்), இப்திகார் அகமது 109ரன்கள் (11 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். நேபாளம் சார்பில் சோம்பால் கமி 2 விக்கெட், கரண் கேசி, சந்தீப் லாமிச்சானே தலா 1விக்கெட் வீழ்த்தினர்.

104 ரன்களில்

ஆல் அவுட்

இதனை தொடர்ந்து 343 ரன்கள் இலக்குடன் நேபாளம் அணி விளையாடியது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அந்த அணி தொடக்கம் முதல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. குஷால் புர்டெல் 8 ரன்கள் , ரோஹித் பவுடல் ரன் எதுவும் எடுக்காமலும், ஆசிப் ஷேக் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து சிறிது நேரம் நிலைத்து ஆடிய ஆரிப் ஷேக் 26 ரன்களும் , சோம்பால் கமி 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.தொடர்ந்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 23.4 ஓவர்களில் 104 ரன்கள் எடுத்து நேபாளம் அணி ஆட்டமிழந்தது.

இதனால் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் சார்பில் ஷதாப் கான் 4 விக்கெட் , ஷாஹீன் ஷா அப்ரிடி , ஹரிப் ரவுப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பல்லகெலேயில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 2-வது லீக்கில் நடப்பு சாம்பியன் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேசத்தை சந்திக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *