நாடும் நடப்பும்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு அரசுமுறை பயணத்தை துவக்கி உள்ளார். சென்ற ஆண்டு துபாய் சென்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்களையும் முதலீடுகளுக்கு ஏற்ற களமாக இருக்கும் நிலையையும் விவரித்து பல்வேறு ஒப்பந்தங்களை தொழில்துறைகள், நிதி சேவை துறைகளிலும் ஏற்படுத்திய வெற்றியுடன் நாடு திரும்பினார்.
அந்த வரிசையில் இம்முறை பொருளாதார வெற்றிகளின் இலக்காக இருக்கும் சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் ஒன்பது நாட்கள் பயணத்தை மேற்கொள்கிறார்.
தமிழகத்துக்கு வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அரசு சார்பில் 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்குமாறு முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுக்கவும் புதிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாகவும் இந்த அரசுமுறைப் பயணம் மேற்கொள்வதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகளில் பெறப்பட்டுள்ள முதலீடுகளை பொறுத்தவரை கடந்த 2021 ஜூலை முதல் 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ரூ.2.95 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதை முழுமையாக செயல்படுத்தும்போது 4.12 லட்சம் பேருக்கு நிச்சயம் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சிங்கப்பூரில் முன்னணி நிறுவனங்களான டெமாசெக் ஹோல்டிங்ஸ், செம்கார்ப் மின்சார உற்பத்தி மற்றும் நீர் சுத்திகரிப்பு, கேப்பிட்டாலாண்ட் இன்வெஸ்ட்மென்ட் போன்ற பல முன்னணி நிறுவனங்களுடன் கலந்துரையாடி பல்வேறு திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வர இருக்கிறார்.
அவை தவிர ஸ்டாலின் சிங்கப்பூரின் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக் கழகத்துடன் புது ஒப்பந்தமும் செய்யத் திட்டமிட்டு இருக்கிறார்.
இதுபற்றிய உறுதிகளைப் பெறவும் இறுதி வடிவம் தந்து ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவும் சிப்காட், பேம் டி.என் (Fame TN), டான்சிம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக உயர் அதிகாரிகளும் உடன் சென்று இருக்கிறார்கள்.
அதன் பின் ஜப்பான் செல்லும் ஸ்டாலின் அங்குள்ள முன்னணி தொழில்துறை தலைவர்களையும் தொழில்நுட்ப வல்லுனர்களையும் பார்க்க சந்தர்ப்பத்தையும் பெறுவார்.
இதர முக்கியத் தலைவர்கள் தலைநகர் டோக்கியோ சென்று அரசு முறை செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்.
ஆனால் ஸ்டாலின் ஒசாகா நகருக்கும் சென்று அங்கு இந்திய வம்சாவளியினர் தர இருக்கும் வரவேற்பில் பங்கேற்க இருக்கிறார்.
மேலும் 200 முன்னணி ஜப்பானிய நிறுவனங்கள் கலந்து கொள்ளும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் ஸ்டாலின் உரையாற்றுவார்.
மொத்தத்தில் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற இருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆசிய தொழில் அதிபர்களின் பிரதிநிதித்துவம் மிக அதிகமாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
அரசியல் ரீதியாக முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் விமர்சிக்கப்படலாம். ஆனால் உண்மையில் இப்படிப்பட்ட மக்களின் ஆதரவைப் பெற்ற தலைவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வெற்றியுடன் வந்தால் அது வருங்கால தமிழகத்தின் வளர்ச்சியை உறுதி செய்யும் மகத்தான சாதனையாக அல்லவா இருக்கும்.