செய்திகள்

ஆசியாவிலேயே மிக நீளமான 7 அடி நீள தந்தங்களை கொண்ட போகேஸ்வரன் யானை இறந்தது

மைசூரு, ஜூன் 13–

ஆசியாவிலேயே மிக நீளமான 7 அடி தந்தங்களை கொண்ட 68 வயது போகேஸ்வரன் யானை இறந்து போனது.

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி பகுதியில் அமைந்துள்ள கபினி அணையை சுற்றி பந்திப்பூர், நாகரஒலே வனப்பகுதிகள் அமைந்துள்ளன. இந்த நிலையில், கபினி அணையின் பின்புறம் உள்ள நாகரஒலே, பந்திப்பூர் வனப்பகுதிகளில் காட்டு யானை ஒன்று சுற்றி வந்தது. அந்த யானை ‘போகேஸ்வரன்’ என பெயரிட்டு அழைக்கப்பட்டு வந்தது.

ஆண் யானையான போகேஸ்வரன் மிக நீளமான தந்தங்களை உடையது. அதன் தந்தங்கள் சுமார் 7 அடி நீளம் வளர்ந்து தும்பிக்கை போன்று தரையில் படும் அளவுக்கு இருக்கும். இது, ஆசியாவிலேயே மிக நீளமான தந்தம் உடைய காட்டு யானை ஆகும். இந்த நிலையில், வனத்துறை ஊழியர்கள் பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு சரணாலயத்திற்கு உட்பட்ட குன்றே வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.

68 வயதான யானை

அப்போது, அங்குள்ள போகேஸ்வரர் கோவில் அருகே ‘போகேஸ்வரன்’ யானை இறந்து கிடந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வன ஊழியர்கள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு, அது போகேஸ்வரன் யானைதான் என்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர், யானையின் 2 தந்தங்களை வனத்துறையினர் வெட்டி எடுத்தனர். தொடர்ந்து, கபினி அணை அருகே போகேஸ்வரன் உடலை அடக்கம் செய்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ’68 வயதான இந்த போகேஸ்வரன், நீளமான தந்தங்களைக் கொண்டிருந்ததால் உணவு எதுவும் சாப்பிட முடியாமல் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்துள்ளது. ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களைக் கொண்ட இந்த யானை இறந்தது வருத்தம் அளிக்கிறது என்று கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.