மக்கள் குரல் பார்வையில்

ஆங்கிலேயரை அலறவிட்ட நாயகர்கள்

Makkal Kural Official

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஜனவரி 3-ம் தேதிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து வீரப்போர் புரிந்த தமிழகத்தின் இரண்டு பெரும் ஆளுமைகளான ‘வீரமங்கை’ வேலு நாச்சியார் (பிறப்பு: 1730) மற்றும் ‘பாஞ்சாலங்குறிச்சி சிங்கம்’ வீரபாண்டிய கட்டபொம்மன் (பிறப்பு: 1760) ஆகிய இருவரும் பிறந்தது இதே நாளில்தான்! அரசியல் அறிவு, தைரியம், தியாகம் – இவை இருவரின் பொதுப் பண்புகள்)

ஆனால் ஆங்கிலேயரை எதிர்கொண்ட விதமும், இவர்களின் போர் முறைகளும் வெவ்வேறானவை.ஒரே எதிரி… வேறு காலம்… வேறு வழி… ஒரே இலக்கு – சுதந்திரம்!

ஆம், உலகமே நினைத்துப் பார்க்க வேண்டிய ஒரு வரலாற்று உண்மை, சுதந்திரம் பெற முதல் கிளர்ச்சி 1857ல் தொடங்கவில்லை, 70 ஆண்டுகளுக்கும் முன்பே 18-ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் துவங்கி விட்டது.

வீரமங்கை வேலு நாச்சியார் (1730–1796)

சிறப்பு:இந்தியாவின் முதல் பெண் சுதந்திரப் போராளி ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வென்ற முதல் இந்தியப் பெண் அரசியும் இவரே ஆவார். ஜான்சி ராணிக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே வாளேந்தியவர்.

களம்: சிவகங்கை சீமையில் கணவர் முத்துவடுகநாதர் கொல்லப்பட்ட பிறகு, 8 ஆண்டுகள் மறைந்து வாழ்ந்து படை திரட்டினார். ஹைதர் அலியுடன் கூட்டணி அமைத்து, நவீன ஆயுதங்கள் மற்றும் ‘உடையாள்’, ‘குயிலி’ ஆகியோரின் தலைமையில் பெண்கள் படையை உருவாக்கினார்.

1780-ல் ஆங்கிலேயரைத் தோற்கடித்து சிவகங்கையை மீட்டெடுத்தார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் (1760–1799)

இவரின் சிறப்பு ஆங்கிலேயருக்கு வரி (கிஸ்தி) தர மறுத்து வீரமரணம் அடைந்த பாளையக்காரர் ஆவார்.

தூத்துக்குடியில் பாஞ்சாலங்குறிச்சியில் இருந்து நேரடி எதிர்ப்பு குரல் கொடுத்த வீரர் ஆவார்.

“வானம் பொழியுது பூமி விளையுது… உனக்கேன் தர வேண்டும் கிஸ்தி?” என்று ஆங்கிலேய அதிகாரி ஜாக்சன் துரையிடம் நெஞ்சு நிமிர்த்திக் கேட்டவர், என்பது திரைக்கதை பாணி வசனமாக இருக்கலாம் ஆனால் அவரது கர்ஜனையும் வரி மறுப்பு மற்றும் ஆயுதம் ஏந்தி எதிர்ப்பு, தமிழர்களின் வீரத்தை என்றென்றும் பறைசாற்றும்.

ஆட்சியும், உயிரும் போனாலும் அடக்குமுறைக்கு தலைவணங்காத அந்த துணிச்சல்காரர் முடிவில் புதுக்கோட்டை காடுகளில் வைத்து துரோகத்தால் பிடிக்கப்பட்டு, 1799-ல் கயத்தாறு புளிய மரத்தில் தூக்கிலிடப்பட்டார்.

ஆம் நேருக்கு நேர் போர் புரிந்து பெற்றி பெறமுடியாத இயலாமையை உணர்ந்தே அப்படி ஒரு நரித்தன சதியால் வீழ்த்தப்பட்டுள்ளார்.

மொத்தத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்ப அத்தியாயம் தமிழ்நாட்டிலேயே இவ்விரு மாவீர்களால் எழுதப்பட்டது என்பதை நினைத்து பெருமைபட வேண்டிய நாள் இன்று!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *