சிறுகதை

ஆக்கிரமிப்பு! – நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

“யோவ்! எல்லாத்தையும் அள்ளி வேன்ல போடுங்கய்யா! நான் டீ ஒண்ணு அடிச்சுட்டு வரேன்! சப் இன்ஸ்பெக்டர் கூறிவிட்டு அகல கான்ஸ்டபிள்கள் அந்த தெருவுக்குள் அதிரடியாக நுழைந்தார்கள்.

”யோவ்! எடுய்யா! சீக்கிரம் காலி பண்ணு உங்களுக்கு எத்தனை தரம் சொல்றது மக்களுக்கு இடைஞ்சலா கடை போடக்கூடாதுன்னு! சீக்கிரம் காலி பண்ணுங்க ஐயா வந்துட்டே இருக்காரு!” என்று கத்தியபடியே நுழையவும் நடை பாதை வியாபாரிகள் அவசர அவசரமாக மூட்டை கட்ட ஆரம்பித்தார்கள்!

அதற்குள் அந்த சப் – இன்ஸ்பெக்டர் வந்து விட்டார்! ”என்னய்யா பாத்துகிட்டு நிக்கறீங்க! அள்ளுங்கய்யா! ”என்று சத்தம் போடவும் கான்ஸ்டபிள்கள் துரிதமாக நடவடிக்கையில் இறங்கினார்கள்!

”ஐயா! ஐயா! இந்த ஒருதரம் விட்டுடங்கய்யா! இனிமே கடை போட மாட்டோம்! பண்டிகை சமயம் அய்யா! கொஞ்சம் தயவு பண்ணுங்கய்யா! ”என்று ஒரு பெரியவர் கெஞ்ச, “ ஏண்டா! எத்தினி தரம் சொன்னோம்! கேட்டீங்களாடா! இது பொதுமக்கள் நடந்து போற பாதை! உங்களுக்குத்தான் அரசாங்கம் கடை கட்டி கொடுத்திருக்கு இல்லே அங்க போயி வியாபாரம் செய்ய வேண்டியதுதானே!”

” தப்புதான்யா! மன்னிச்சுடுங்கய்யா! இன்னிக்கு ஒரு நாள் விட்டுடுங்க ஐயா! பொருளெல்லாம் போவுதே ஐயா! ஐயா! ”அந்த பெரியவர் கத்த கத்த அள்ளிச்சென்றனர் கான்ஸ்டபிள்கள்.

கடைகள் அவசர அவசரமாக காலி செய்யப்பட்டன. அன்றாடம் காய்ச்சிகளான அந்த நடைபாதை வாசிகள் கண்ணீருடன் புலம்புவதை கேட்டு யாரும் செவி சாய்க்க வில்லை! வாங்க வந்த மக்களும் கூடி நின்று வேடிக்கை பார்த்தனரே தவிர யாரும் எதுவும் கேட்கவில்லை!

அப்போது துணிச்சலாக ஒரு இளைஞன் ” என்ன சார்! வழக்கமா மாமூல் வாங்கிட்டு போவீங்க! இப்ப இப்படி பண்ணறீங்களே மாமூல் வேணும்னா கொஞ்சம் போட்டுதறோம் சார்!” என்றபோது அவன் கன்னத்தில் பளாரென்று அறை விழுந்தது!

” ராஸ்கல்! லஞ்சமா வாங்கச் சொல்றே ! நீ மாமூல் கொடுத்துதான் நான் பிழைக்கிறனா? யோவ் ஏட்டு இவனை ஜீப்புல ஏத்துய்யா? ஸ்டேஷன்ல வச்சி ரெண்டு தட்டு தட்டி அனுப்புனாத்தான் நம்மள பத்தி இவனுக்கு தெரியும்!” என்றார் அந்த எஸ்.ஐ.

ஒரு மணி நேரத்தில் அந்த வீதி முழுவதும் சுத்தமாக இருந்தது. போலீஸ் வேன் நிரம்பி இருந்தது. ”இன்னாயா! எல்லாம் ஏத்தியாச்சா! போலாமா?” என்றார் எஸ்.ஐ

”எல்லாம் கிளியர் பண்ணிட்டோம் சார்; கிளம்ப வேண்டியதுதான்”. ”எங்கேயா அவன்?”

“ஜீப்ல இருக்கான் சார்!”

”கொண்டு வாய்யா!”

அந்த இளைஞனை இழுத்துவந்து நிறுத்தினர்.

”டேய் தம்பி! நியாயம் எப்படி யாருகிட்ட பேசுறதுன்னு தெரிஞ்சு பேசனும். அது சரி மாமூல் வேணும்னா கொஞ்சம் போட்டுதறோம்னியே . இங்க இருக்கிற போலீசிலே யாருக்கு நீ மாமூல் கொடுத்திருக்கே. காட்டு என்றார் எஸ்.ஐ .

சுட்டுவிரல் நீட்டி ஒரு பேலீஸ்காரரைக் காட்டினான் அவன்.

எஸ்.ஐ. , கோபத்தோடு அந்தப் போலீஸ்காரரை அழைத்தார்.

இவர் உங்களுக்கு மாமூல் கொடுத்ததா சொல்றாரே. உண்மையா ? என்றார் எஸ்.ஐ. ,

வேறு வழியில்லை. ஆம் என்றார் அவர்.

‘‘ஏட்டய்யா… அவரை விட்டிருங்க. இவர் மேலே நடவடிக்கை எடுங்க’’ என்றார் எஸ்.ஐ.

பேலீஸ்காரர் அதிர்ச்சி அடைந்து தலைகுனிந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *