சிறுகதை

ஆக்கிரமிப்பு! –இரா.இரவிக்குமார்

“ஐயா, நீங்க சொன்ன மாதிரியே சேகரின் அவன் சொந்தபந்தங்களின் குடிசைகளைத் தீ வெச்சி அவங்களுக்கு உதவுற சாக்கில அவங்க சாமான்களைத் தெருவிலே தூக்கி வீசிட்டோம்!”

“செந்தில், இப்பதாண்டா எனக்கு நிம்மதி! அவங்க வீடுகளால ரோடை ஒட்டின நீளவாட்டில எனக்கு இருக்கும் மூணு ஏக்கர் நிலம் துண்டு துண்டா இருந்திச்சு. இப்ப ஒண்ணாயிடுச்சு! என் அப்பா, சேகரின் வகையறாவுக்கு வாயால் தரேன்னு சொன்ன அந்த இடத்தைப் புடிச்சு வச்சுக்கிட்டுக் காலி செய்யாம அழிச்சாட்டியம் பண்ணிட்டாங்க! இப்ப ரோடை ஒட்டி ஒரு கிலோ மீட்டருக்குக் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டா லட்சம் லட்சமா வரும். இந்தா ஐநூறு ரூபாய், பிரியாணி, சரக்குக்கு வச்சுக்கோ!” என்று நோட்டை நீட்டினார். ஊரில் பெரும் செல்வந்தரும் பிரமுகருமான பரமசிவம்.

“ஐயா, சேகரின் வகையறாவுக்கு ஏதாவது நஷ்ட ஈடு கொடுப்பீங்களா? இப்ப வேற எவனாவது அந்த இடத்தில உக்காந்துட்டானா?”

“அவங்களை இவ்வளவு காலம் அங்க தங்கவிட்டதே பெரிய விஷயம்! நம்மளை மீறி எவண்டா அங்க உக்காருவான்?” என்று மீசையை முறுக்கினார் பரமசிவம்.

“ஐயா, நில உச்ச வரம்புன்னு முனிசிபாலிட்டில உள்ள உங்களுக்கு வேண்டாதவங்க ஏதாவது தொந்தரவு கொடுப்பாங்களா?”

“அதில இருக்கிற முக்கால்வாசிப் பேருங்க என் பக்கம்டா… ஒருத்தனும் என் நிலம்னு தெரிஞ்சா எட்டிக்கூடப் பார்க்கமாட்டான்!”

“விரட்டி விட்டவங்களில் நம்ம ஆட்கள்தான் அதிகம்!… நீங்க பிளாட் போட்டு கடை கட்டும்போது உங்களுக்கு எதிரா அவங்க பிரச்சினை பண்ணா?”

“நம்ம நம்ம ஆட்களைத் தூண்டிவிட்டு அடக்க வேண்டியதுதான்! ஒருத்தனைப் போட்டா மத்தப் பசங்க அடங்கிடுவானுக!”

“ஐயா, எல்லாத்துக்கும் தயாரா இருக்கீங்க!”

“ஆமாண்டா, இல்லைனா சொத்தைக் கட்டி ஆள முடியுமா?”

மறுமாதம் சாலை விரிவாக்கத்தின் கீழ் அவரது நிலம் ஆர்ஜிதப் படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசின் சாலை பேணவும் விரிவாக்கம் செய்யவும் அமைந்துள்ள அமைச்சகத்திலிருந்து அவருக்குக் கடிதம் வந்தது!

அவரது நிலம் சாலையை ஒட்டி நீளவாட்டில் அமைந்திருந்ததால் அந்த மூன்று ஏக்கர் நிலமும் நான்கு வழிச்சாலை விரிவாக்கத்தின் திட்டப்படி மொத்தமும் அரசு விலையில் மத்திய அரசு போக்குவரத்துத் துறையின் கீழ் செயல்படும் கிளைக்கு அவர் விற்க வேண்டிய நிர்ப்பந்தம்!

மாநில அளவில் செல்வாக்கு மிக்க பரமசிவம் மத்திய அரசைப் பொறுத்த வரையில் மிகவும் சாதாரணமானவர். ஏனெனில் மத்திய அரசில் தனக்கு வேண்டிய காரியத்தைச் சாதிப்பது எப்படி என்பது அவருக்கு எள்ளளவும் தெரியாது! யாரைப் பிடித்தால் எப்படிக் காரியத்தை முடிக்கலாம் என்பதும் அவருக்குத் தெரியாது! அப்படித் தெரிந்திருந்தால் சாலை விரிவாக்கத்தை வேறு பக்கம் திருப்பக் கூடிய ஆற்றல் மிக்கவர் அவர்.

சட்டென்று தன் மூளையில் பொறி தட்ட தன் அடியாள் செந்திலைக் கூப்பிட்டுச் சொன்னார், “டேய் செந்தில்… நீயும் உன் உறவுக்காரங்களும் சேகரிடமிருந்து நீ காலி பண்ணிய நிலத்தில் கொஞ்ச காலம் குடிசைகள் போட்டு அங்க தங்குடா! நான் குடிசை போட பணம் தரேன்! உங்களுக்கு வாடகை மிச்சமாகும். நாளைக்கி அங்கே நான் கடைகள் கட்டும்போது நீங்க பாதுகாப்பாகவும் இருப்பீங்க!” என்றார் பரமசிவம்.

அவருக்குத் தெரியும் ஏழை மக்களின் குடிசைகளை அகற்றுவது அவ்வளவு சுலபமல்ல என்பது! அதில் அவருக்கு நல்ல அனுபவம் இருக்கிறதே. மேலும் அரசாங்கத்தின் பிடியிலிருந்து அவரது நிலத்தைக் காப்பாற்ற இதுதான் சிறந்த வழி என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். மீண்டும் அவர் நிலத்தில் ஆக்கிரமிப்பு அவருக்கு இப்போது தேவைப்பட்டது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *