சினிமா

ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணஸ்வாமி

Spread the love

இளைய தலைமுறையினருக்கு அறிமுகம் இல்லாதவள் ‘ஆகாசவாணி’. ஆம், இணைய தலைமுறைக்கு பண்பலையின் மாண்பு பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்.

டிவி, இன்டர்நெட், செல்போன் இல்லாத காலகட்டங்களில் மாபெரும் தலைவர்கள் முதல் பாமர மக்கள் வரை நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள வழிசெய்தது ஆகாசாவாணி.

பல்வேறு பிராந்திய மொழிகளில் செய்திகள் வந்தாலும், அதில் தனிஇடம் பெற்றது தமிழ் செய்தி. காரணம், வாசிப்பின் மகத்துவம்.

“ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது சரோஜ்நாராயணஸ்வாமி”. வானொலியில் வரும் இந்த கம்பீர குரல் வழி செய்திக்காக காலை 7.15 மணிக்கு தவம் கிடந்தது தமிழுலகம்.

அந்த ஆளுமை நிறைந்த குரலை தேடி ‘மக்கள்குரல்’ நாளிதழுக்காக நாம் சென்றபோது, அவரின் முகவரி மும்பை என்று தெரியவந்தது.

போனில் அழைத்ததும், சொல்லுங்கோ.. நான் சரோஜ்–நாராயணஸ்வாமி பேசுகிறேன் என்றார்.

இதோ அவரின் குரல் வழியாக அவரை பற்றி…

முதல் முறையாக வாசித்த வரி?

ஆகாசவாணி

செய்திகள் வாசிப்பது

சரோஜ் நாராயணஸ்வாமி

வாசித்ததில் மகிழ்ந்தது?

கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு முதல் உலக கோப்பை கபில்தேவ் தலைமையில் கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சியுடன் அந்த செய்தியை வாசித்தேன்.

இதே போல், பங்களாதேஷ் போரில் இந்தியா வெற்றி பெற்றதை வாசிக்கும் போதும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

வாசித்ததில் வருந்தியது?

இந்திராகாந்தியின் மறைவு செய்தியை வாசிக்கும் போது மிகவும் வருந்தினேன்.

அப்போது முதன் முறையாக இந்திராவை, ‘அன்னை இந்திரா’ என்று நான் குறிப்பிட்டு வாசித்தது இன்றும் என் நினைவில் நிற்கிறது.

நாட்டுநடப்புகளை அறிந்த விதம்?

நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ள தினசரி நாளிதழ்களை வாசித்துவிடுவேன். வணிகம், விளையாட்டு, அரசியல் என உலக வம்புகளை பலரிடமும் கேட்டு தெரிந்து வைத்துக்கொள்வேன்.

உங்கள் வாய்ஸ் பற்றி?

என்னுடைய குரலை கேட்ட பலர் என்னை ஆண் என்றே நினைத்திருந்தார்கள்.

இத்தனை நாள் என் ‘சாரீரம்’ மாத்திரம் கேட்டிருப்பார்கள். உங்கள் பத்திரிக்கை மூலம் என் சரீரத்தையும் பார்த்துக்கொள்வார்கள்.

டெல்லிக்கு சுற்றுலா வரும் தமிழர்கள் ஆகாசவாணி நிலையத்துக்கு வந்து நான் செய்தி வாசிப்பதை நேரில் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள். 84 வயதாகிறது. இன்றும் என் குரல் மாறவில்லை என பலர் கூறுவதுண்டு. ‘வாய்ஸ்’ மாறவில்லை. ஆனால், ‘வயசு’ மாறிடுச்சு என்று கிண்டலாக அவர்களிடம் நான் சொல்வதுண்டு.

டிவியில் வாசிக்கவில்லையே என்று…?

வருத்தமும் இல்லை. ஆசையும் இல்லை. சரீரம், சாரீரம் இரண்டையும் அவர்கள் பார்க்கிறார்கள். டெல்லி தூர்தர்ஷனில் ஆங்கிலத்தில் வானிலை அறிக்கை வாசித்திருக்கிறேன். அதுவும் கேமரா பின்னால். டிவியில் செய்தி வாசிப்பதற்கு என் உருவம் ஒத்துப்போகாமல் கூட இருந்திருக்கலாம்.

தற்போது செய்திகள் பற்றி?

தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் என அனைத்து மொழி செய்தி மற்றும் தொடர் நாடகங்களை பார்ப்பதுண்டு. அதில் வரும் தவறுகளை கண்டுபிடிக்கிறேன். தொடர்ந்து ஒரு தவறு நடந்து வருகிறது.

ஒருவர் டாக்டரிடம் பேசும்போது, நோயாளிக்கு இன்னும் ‘கான்சியஸ்’ வரவில்லை என்று கூறுகிறார்கள். அது தவறு. ‘கான்ஷியஸ்யனஸ்’ என்று தான் சொல்ல வேண்டும். இதனை, ‘சுயநினைவு’ என்றும் குறிப்பிடலாம்.

தமிழில் அழகு, நாயகி தொடர்களை பார்த்து வருகிறேன்.

செய்தி வாசிக்க வருபவர்களுக்கு…?

எங்கள் காலத்தில் நாங்களே தான் மொழி பெயர்ப்பு செய்து கொள்ள வேண்டும். ஏனோ தானோ என்று என் பணி இருக்காது. கடமை உணர்வுடன் பணியாற்றுவேன். என் வேலைகள் மட்டுமல்லாது, மற்றவர்களின் உச்சரிப்புகளையும் கவனித்து திருத்துவேன். ஸ்டுடியோவுக்குள் சென்று விட்டால் செய்தியில் மட்டுமே என் கவனம் இருக்கும்.

சிந்தனை ஒருமைப்படுத்தப்பட்டு ஈடுபாட்டுடன் இருந்தால் மட்டுமே தவறு நேரிடாமல் தவிர்க்கலாம். செய்தி வாசிப்பவர்கள் வார்த்தைகளை சரியாக உச்சரிக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

 

வானொலியும் நானும்.

மும்பை ராம் நாராயண் ரூயா கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறேன். இருந்தாலும், என் பெற்றோர் காவிரி தண்ணீர் குடித்தவர்கள் என்பதால் எனக்கு தமிழ் உச்சரிப்பு நன்றாக வந்தது.

கல்லூரி காலத்திலிருந்தே நாம் படித்து மற்றவர்கள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. இதனால் வங்கி பணியை உதறிவிட்டு வானொலி வாய்ப்பை பற்றிக்கொண்டேன்.

அதிகாலை மூன்று மணிக்கே அலுவலகம் சென்று விடுவேன். செய்திகள் அனைத்தையும் கைகளால் எழுதி வைத்து தான் வாசித்திருக்கிறேன். செய்தி வாசிப்பில் எனக்கென்று தனி பாணியை உருவாக்கிக்கொண்டேன்.

பிற மொழிப் பெயர்கள் குறித்த உச்சரிப்பைத் தெரிந்து கொள்ள மற்ற மொழிகளின் செய்திப் பிரிவுகளுக்குச் சென்று அங்குள்ளவர்களிடம் உச்சரிப்பைக் கேட்டு வருவோம்.

எனது 35 ஆண்டுகால பணி காலத்தில் குறைந்த எண்ணிக்கையிலான நாட்களே விடுமுறை எடுத்திருக்கிறேன். கலைஞரின் கையால் ‘கலைமாமணி’ விருது வாங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *