செய்திகள்

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர்

புதுடெல்லி, பிப்.7–

அண்ணா தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் இன்று பா.ஜ.க.வில் இணைந்தனர்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தமிழகத்தில் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அண்ணா தி.மு.க. விலகியுள்ளது. இதனால் அண்ணா தி.மு.க., பாரதீய ஜனதா கட்சிகள் இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் உள்ளது. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை தங்களின் கூட்டணிக்கு இழுப்பதற்கான பேச்சுவார்த்தையை அண்ணா தி.மு.கவும், பா.ஜ.க.வும் தொடங்கியுள்ளது.

இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பேட்டி ஒன்றில், “தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணி தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது. தமிழ்நாடு ஒரு முக்கியமான மாநிலம். தேர்தல் அறிக்கையில் தமிழகம் சார்ந்த நிறைய அறிவிப்புகள் இருக்கும்” எனக் கூறியுள்ளார். அமைச்சர் அமித் ஷாவின் இந்தக் கருத்து தமிழக அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது. அண்ணா தி.மு.க. – பாரதீய ஜனதா கூட்டணி இன்னும் பட்டுப்போய்விடவில்லை என்பதை உணர்த்துவதாக இருப்பதாக கருத்து தெரிவிக்கப்பட்டது.

ஆனால் நாங்கள் பாஜகவுக்கு கூட்டணி கதவை சாத்திவிட்டோம் என்று அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர், எல்.முருகன் முன்னிலையில் அண்ணா தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 18 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர். இதில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. தங்கராசும், முன்னாள் எம்.பி. ஒருவரும் அடங்குவர்.

யார், யார்?

பா.ஜ.க.வில் இணைந்த அண்ணா தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விவரம் வருமாறு:-

கு.வடிவேல் – கரூர், பி.எஸ்.கந்தசாமி – அரவக்குறிச்சி, கோமதி சீனிவாசன் – வலங்கைமான், ஆர்.சின்னசாமி – சிங்காநல்லூர், ஆர். துரைசாமி (எ) சேலஞ்சர் துரை– கோவை, எம்.வி.ரத்தினம் – பொள்ளாச்சி, எஸ்.எம். வாசன் – வேடச்சந்தூர், எஸ்.முத்துகிருஷ்ணன் – கன்னியாகுமரி, பி.எஸ். அருள் – புவனகிரி, என்.ஆர்.ராஜேந்திரன் – ஆண்டிமடம், குருநாதன், வி.ஆர். ஜெயராமன் – தேனி, பாலசுப்ரமணியன் – சீர்காழி, சந்திரசேகர் – சோழவந்தான் ஆகியோர் அடங்குவர். இவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து, பாரதீய ஜனதா உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும் இவர்கள் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவையும் சந்திக்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *