செய்திகள்

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் 40 பேர் ஒரே மேடையில் அறிமுகம்

Makkal Kural Official

திருச்சியில் பிரச்சாரத்தை துவக்கினார் எடப்பாடி

திருச்சி, மார்ச் 25–-

அண்ணா தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 40 பேரையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்து எடப்பாடி பழனிசாமி பேசினார்.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-–ந்தேதி முதல் ஜூன் மாதம் 1-–ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக வருகிற 19–-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20–-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அண்ணா தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று திருச்சியில் இருந்து தனது சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கினார். இதற்காக திருச்சி – -திண்டுக்கல் நெடுஞ்சாலையையொட்டி திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அண்ணா தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 40 பேரையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்து எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–-

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க. மற்றும் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பிரசாரத்தை தற்போது தொடங்கி உள்ளோம். இந்த தேர்தலில் தி.மு.க., அண்ணா தி.மு.க., பாரதீய ஜனதா கட்சி தலைமையில் 3 கூட்டணிகள் களத்தில் உள்ளன. ஆனால் தேர்தலில் போட்டி என்று வந்துவிட்டால் தி.மு.க.வுக்கும், அண்ணா தி.மு.க.வுக்கும் தான் என்று மக்கள் அறிவார்கள்.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதியிலும் நமது கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யவேண்டும். கடந்த இரு நாட்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் பேசி வருகிறார். அவர் 2 விஷயங்களை தான் பேசுகிறார். ஒன்று பிரதமரை பற்றி விமர்சிக்கிறார். அதை பற்றி கவலை இல்லை. மற்றொன்று என்னை பற்றி பேசுவார். வேறு எதுவும் பேசமாட்டார். அவரிடம் சரக்கு இருந்தால் தானே அவரால் பேசமுடியும். அவர் பொம்மை முதலமைச்சர். தமிழகத்தில் நாம் எங்கு சென்றாலும் நாம் நடத்திய ஆட்சியை பொற்கால ஆட்சி என்று கூறுகிறார்கள். அவர்கள் 3 ஆண்டுகளில் எதுவுமே செய்யவில்லை.

தமிழகத்துக்கு ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக்கல்லூரியை கொண்டுவந்தோம். எய்ம்ஸ் மருத்துவ மனையை தமிழகத்துக்கு ஜெயலலிதா போராடி பெற்றுக்கொடுத்தார். ஆனால், அதை நிறைவேற்ற வக்கில்லாமல் உதயநிதி ஸ்டாலின் விளம்பரத்துக்காக செங்கலை தூக்கி விமர்சிக்கிறார். இது பழைய கதை. கடந்த தேர்தலில் உங்களில் 38 பேருக்கு தமிழக மக்கள் வாய்ப்பு கொடுத்தார்களே, நீங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டு போய் செங்கலை காட்ட வேண்டியது தானே. நீட் தேர்வை யார் கொண்டு வந்தது? தெம்பு திராணி இருந்தால் என்னுடன் விவாதிக்க தயாரா? என்னிடம் ஆதாரம் உள்ளது. நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க., அப்போது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்.

இதற்கு பரிகாரம் காண்பதற்காக தான் நாங்கள், அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்இடஒதுக்கீடு சட்டம் இயற்றினோம். மேலும் அவர்களது கல்விக்கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்ற திட்டத்தை கொண்டு வந்தேன். நீங்கள் வெற்று அறிவிப்பு மூலம் வெற்றி பெற முடியாது. நாங்கள் இதுபோல் பல சாதனைகளை படைத்துள்ளோம். ஆனால், 10 ஆண்டுகள் தமிழகத்தை அடகுவைத்து விட்டேன் என்று கூறுகிறார். பல்வேறு திட்டங்களை அவர்கள் தான் கிடப்பில் போட்டு விட்டனர்.

நானும் டெல்டா காரன்தான் என்று கடந்த ஆண்டு ஸ்டாலின் வந்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டார். அதை நம்பி 5½ லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்தனர். ஆனால் தண்ணீர் இல்லாமல் 3½ லட்சம் ஏக்கரில் விவசாய பயிர்கள் அழிந்துவிட்டது. மாநில பேரிடர் நிவாரண நிதியாக விவசாயிகளுக்கு பயிர்கள் பாதிக்கப்பட்டபோது ரூ.20 ஆயிரம் கொடுத்தேன். ஆனால் முதலமைச்சர் ரூ.13 ஆயிரம் கொடுக்கிறார்.

விவசாயிகளுக்கு அண்ணா தி.மு.க. ஆட்சியில் நாங்கள் என்ன செய்தோம்? நீங்கள் என்ன செய்தீர்கள் என்று விவாதிக்க தயாரா? டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி கொடுத்தது தி.மு.க. தான். நான் முதலமைச்சராக இருந்தபோது, விவசாயி என்பதால் டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தேன். கர்நாடக மாநிலத்தில் காவிரியில் மேகதாது அணை கட்டுவேன் என்று கூறுகிறார்கள். ஆனால் நமது முதலமைச்சர் வாயே திறக்கவில்லை. விவசாயிகள் வடிக்கும் கண்ணீர் இந்த தேர்தலில் பிரதிபலிக்கும்.

மத்தியில் 12 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த தி.மு.க. தமிழகத்துக்கு என்ன கொண்டுவந்தீர்கள். தமிழகத்துக்கு துரோகம் செய்த கட்சி தி.மு.க. நீங்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது எதுவும் செய்யவில்லை. 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை நீங்கள் கொடுத்தீர்களே, அவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தனர்.

கடந்த முறை எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராடி பல திட்டங்களை கொண்டு வந்தோம். 2ஜி ஊழல் வழக்கு மீண்டும் தூசி தட்டப்பட்டுள்ளது. இப்போது உள்ள அமைச்சர்களும் விரைவில் சிறை செல்வார்கள். தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகி ஜாபர்சாதிக்கை அயலக அணி மாவட்ட பொறுப்பாளராக நியமித்து, வெளிநாட்டுக்கு போதைப்பொருளை கடத்தியுள்ளார். தமிழகத்தை போதைப்பொருள் மாநிலமாக மாற்றுவது தி.மு.க. நிர்வாகிகள்தான்.

தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. 3 ஆண்டுகளில் தேர்தல் பத்திரத்தை ரூ.656 கோடிக்கு தி.மு.க. வாங்கியுள்ளது. இப்போது, ஸ்டாலின் பேசிக்கொண்டு இருக்கிறார். எங்கள் மீது வழக்கு தொடுப்பாராம். எங்களை மிரட்டி பணிய வைக்க முடியாது. உங்கள் மீது உள்ள ஊழல் வழக்குகளை நடத்த தயாரா? 2026-–ம் ஆண்டு அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும்.

எங்கள் தொண்டனுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் நாங்கள் துணைநிற்போம். இந்த மண்ணில் பிறந்த சிறுபான்மை மக்களுக்கு பிரச்சினை என்றால் நாங்கள் உங்களுக்கு துணை நிற்போம். நாங்கள் ஓட்டுக்காக கூறவில்லை. மனிதாபிமானத்துடன் சொல்கிறேன். எங்களுக்கு சாதி, மதம் கிடையாது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் மரண அடி கொடுப்பார்கள். தேர்தல் முடிவுக்கு பிறகு தி.மு.க. காற்றோடு கலந்துவிடும். தி.மு.க.வுக்கு நாம் தக்க பாடம் புகட்ட வேண்டும். அனைவரும் அண்ணா தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு இரட்டை இலை, முரசு சின்னத்தில் வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பேசினார்கள்.

கூட்டத்தில் அண்ணா தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மற்றும் அண்ணா தி.மு.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *