விஜயன் பதவிக் காலத்தில் ஒரு ராஜாவாகவே வலம் வந்தார். மனைவி சாவித்திரியை மணந்து வந்தபிறகு சில காலம் வாழ்க்கை கூட்டுக் குடும்பத்தில் செவ்வனே சென்றது. சாவித்திரிக்கும் அலுவலகத்தில் இருந்து வந்ததும் கவனிக்க ஆட்கள் இருந்ததால் அவளும் மகிழ்வாகவே இருந்தாள். இவர்களுக்கு பிறந்த இரு குழந்தைகளை நன்றாகவே வீட்டில் உள்ளவர்கள் கவனித்ததால் எல்லோர் வாழ்வும் மகிழ்வாகவே நகர்ந்தது.
மற்றவர்கள் போன்று விஜயனும் ஒரு ஆளாகவே குடும்பத்தில்இருந்து வந்தார். குடும்பத்தில் தனிப்பட்ட முக்கியத்துவம் யாவருக்கும் அளிக்கப்படவில்லை. சிற்சில பிரச்னைகள் அவ்வப்போது தோன்றினாலும் அது உடனே அமர்ந்து பேசி தீர்க்கப்படுவது அந்த குடும்பத்தின் வாடிக்கையான செயலாக இருந்தது.
அன்று ஏற்பட்ட ஒரு பிரச்சனை சற்று பூதாகாரமாக மாறி விஜயன் மற்றும் சாவித்திரி நிறையவே பாதிக்கப்பட்டதால் சாவித்திரி எடுத்த முடிவானது அவள் மனதில் ஏற்பட்ட பாதிப்பின் வெளிப்பாடாக இன்று வரை நன்றாக இருந்த உறவையெல்லாம் உதறி விட்டு தனியாக ஒரு வீட்டைப் பார்த்து வந்து இன்றோடு பத்து வருடங்கள் கடந்து உள்ளது. மன அழுத்தத்தின் வெளிப்பாடாக சாவித்திரியின் முகத்தில் புன்னகை மறந்து போய் கடுகடுவென தோற்றம் உண்டாகியது.
வறுமையே அவளைச் சூழ்ந்ததாக உணர்ந்தாள். தனக்குள் இருக்கும் அழுத்தத்தை அவள் சொல்லி பாரத்தை இறக்கி வைக்க அவளுக்கு ஆள் இல்லாத வண்ணம் எல்லாரையும் விட்டு விலகி தனித்து வாழ்வதென முடிவு எடுத்ததன் காரணம் தான் மனதில் வெறுப்பு ஏற்பட காரணம் என கொள்ளலாம். எந்த ஒரு விழாவிற்கும் செல்லாமல் ஒதுங்கியே வாழ்வதும் சாவித்திரியின் இந்த நிலைமைக்குக் காரணம். விதியோ, சதியோ, சாபமோ அல்ல, இவளால் ஏற்பட்ட இந்த வாழ்க்கையை மாற்ற சாவித்திரி முன் வரவில்லை. அவளுக்கு சோகம் உள்ளுக்குள் புதைந்து இருப்பதால் அது அவளுக்கு என்றுமே முடிவு சரியாக எடுக்க விடாமல் மாறாக நோயையே தருமென விஜயன் கூறினால் கத்தி போர்க்களமே உண்டாக்கி விடுவாள். இவளது தவறான முடிவு, சுயநலம் நல்ல வாழ்க்கையை இடியாப்ப சிக்கலாக்கி விட்டதை தெரிந்தும் மாற்றிக் கொள்ள மனம் வராமல் கொக்குக்கு ஒரே மதியென வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருக்கிறாள் சாவித்திரி. பேசித் தீர்க்க வேண்டியதை பேசாமல் தன்னிச்சையில் செயல்பட்டு பிரச்னைகள் வளர்ந்தது தான் மிச்சம். என் மனச்சாட்சிக்கு ஏற்றபடி தான் நடக்கிறேன் என அடிக்கடி கோபமாய் பேசுவது சாவித்திரியின் வாடிக்கையாகி விட்டது. விஜயன் அடிக்கடி உறவினர்கள் மேல் கோபத்தில் இருக்கும் போது அவர்கள் குறைகளை கணக்கிடத் தொடங்கினால் வெறுப்பு மற்றும் இடைவெளியே வளரும் சமாதான நிலை வர வாய்ப்பில்லை, உள்ளத்தில் உணர்ச்சிகளை அடக்கப் பழக வேண்டும் என்றால் என்னிடம் எல்லா வசதிகளும் உள்ளன, என் பிள்ளைகள் நல்ல வேலையில் உள்ளார்கள்,எங்களுக்கு எப்படி வாழணும் என்று தெரியும் எனப் பட்டென்று பேசுவதில் சாவித்திரிக்கு அலாதி ஆனந்தம். பணி ஓய்விற்குப் பின் எல்லா விழாவிற்கும் விஜயனே சென்று வருவது வாடிக்கையாகி விட்டது.
நாளுக்கு நாள் சாவித்திரியின் செயல்பாடுகள் வருத்தம் அளிப்பவையாகவே இருந்தது. எது செய்தாலும் குறை கண்டுபிடித்து திட்டுவதே வேலையாகி விட்டது. என்னதான் செய்தாலும் அது சரியென்று சொல்லக் கூடாது என்ற வைராக்கியமோ என்று எண்ணும் வண்ணம் அவளது செய்கையாக இருந்தது.
விஜயன் பல நேரங்களில் தீச்சுடரில் இட்ட பொருள் போலானார். ஏற்ற இறக்கங்கள் கொண்ட நிலையில்லா வாழ்க்கையில் சுயநலம், தவறான முடிவு என்றுமே நிம்மதியைத் தராது என்பதை சாவித்திரிக்கு எப்படி கூறுவதென யோசனையில் ஆழ்ந்து விடுவார் விஜயன். புரிதலில் தான் உள்ளது எல்லாமே என்று விஜயன் அவள் பதில் எதிர் பாரமால் கூறி விடுவார். செய்த தவறான செயலையே மறுபடியும் சொல்லுவதால் பயன் ஏதுமில்லை. வீணான அழுத்தம் தான் அதன் விளைவு என்று பொதுவாக விஜயன் கூறினாலும் சாவித்திரி மற்றும் பிள்ளைகள் கேளாச் செவியாக இருந்து விடுவார்கள்.
வாழ்க்கை வாழ்ந்து காட்டுவதற்கே, மற்றவர்கள் பாராட்டுவதற்கோ அல்லது விமர்சனம் செய்வதற்கோ அல்ல என்பதை புரிந்து கொண்டாலே நல்லது என்பார் விஜயன். அன்று சந்தித்த நண்பர்கள் ஒவ்வொருவரும் தங்களது நிலைமையைக் கூற விஜயனும் தன் பங்கிற்கு வீட்டில் நடைபெறுவதைக் கூறி அவரவர்களே திருந்தினால் தான் நல்ல சூழல் நிலவும் இல்லையெனில் வந்தாச்சு , பொறுப்புகள் தீர்ந்தது, சீக்கிரம் போய்ச் சேர வேண்டியது தான் என்ற எண்ணம் ஏற்பட்டு அது மனதில் ஒரு தாக்கம் ஏற்படுத்தி எல்லோரிடமும் இருந்து தனிமைப்படுத்தி விடும் என்றார். காட்டில் கடும் புலியுடன் கூட வாழ்ந்து விடலாம் அடிக்கடி சீறும் நாகத்துடன் வாழ முடியாது என்றார் விஜயன்.
காலம் பதில் சொல்லும் என்பது எல்லாம் எழுத்து வடிவில் படிப்பதற்குத் தான் என்றார் விஜயன்.
உடனே நண்பர்களில் ஒருவர், விஜயன் எச்சூழலிலும் வாழக் கற்றுக் கொண்டார் என்பதற்கு அவரது அனுபவமே தான் காரணம். நம் எல்லோர் மனதிலும் எரியும் வெளிக் கொணராத தீ இன்று விஜயன் அனுபவத்தால் குளிரத் தொடங்கியது என்பதே உண்மை என்றதும் எல்லோரது புன்னகையும் விடிவு காலத்தை நோக்கிச் செல்வதை உணர்த்தியது.
அப்போது மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது என்ற பாடல் ஒலித்தது.