சிறுகதை

அவரவர் வாழ்க்கை – ராஜா செல்லமுத்து

Spread the love

ஒவ்வொரு நாளும் குமரன் வயிற்றில் புளியைக்கரைக்கும். அவன் எப்போதும் அவன் வாழ்க்கையை வாழ்வதேயில்லை. அடுத்தவர்களின் வாழ்வோடு ஒப்பிட்டு ஒப்பிட்டு ஓய்ந்து போவான். வழக்கம் போல் அன்றும் அவன் எண்ணத்தில் உடன் வேலைபார்க்கும் அலுவலர்களோடு ஒப்பிட்டு ஓய்ந்து போய் உட்கார்ந்திருந்தான். அவன் எண்ண ஓட்டத்தை செல்வமணி லேசாகச் சிதைத்தான்.
‘‘என்ன குமரா.. ஒரே யோசனையா உட்காந்திருக்கீங்க..?
‘‘இல்லையே..’’
‘‘ஆமா உங்களுக்கு எப்பவும் யோசனை தானே..’’ என்று நக்கலாகக்கேட்டான் செல்வமணி
‘‘அப்பிடியில்ல செல்வமணி’’ என்று மழுப்பினான் குமரன்.
‘‘எல்லாமே இப்பிடித்தான் இருப்பாங்க. அவனவன் சுயநலம் ; அவனவன் வாழ்க்கை; அவனவன் குடும்பம் ;அவனவனகென ஒரு வேலை; அதுல யாரும் விதிவிலக்கில்ல . அதுக்காக உன்னையவே நீ கொழப்பிக்கிறாதே..’’ என்று செல்வமணி சொல்ல அது குமரனுக்கு என்னவோ போலானது.
‘‘இல்ல நீ நினைக்கிற மாதிரி அப்பிடி எதுவும் இல்லையே!’’
‘‘இல்ல குமரா நீ.. எப்பவுமே இன்னொருத்தவங்களோட தான் ஒன்னைய ஒப்பிட்டு பாத்திட்டு இருப்ப. அது வேணாம் ;அவனவன் வாழ்க்கைய அவனவன் பார்த்திட்டு போகட்டுமே . அவன் இப்பிடி இருக்கான் ; இவன் இப்பிடி இருக்கான்; அவன்கிட்ட இது இருக்கு. இவன்கிட்ட அது இருக்கு. நம்மகிட்ட அது ஏன் இல்ல! அவன மாதிரி நம்மாள ஏன் சொத்து சேக்க முடியல! இவன மாதிரி நாம பேச முடியல !அவன மாதிரி நாம ஏன் எழுத முடியல! இப்பிடியே ஏன் பொலம்பிட்டு இருக்கணும். ஒருத்தன் கூட இன்னொருத்தன என்னைக்கும் ஒப்பிட்டு பாக்கவே கூடாது. ஒருத்தனோட பசிக்கு இன்னொருத்தன் சாப்பிடமுடியாது. ஒருத்தனுடைய தூக்கத்த இன்னொருத்தன் தூங்க முடியாது. அடுத்தவனுடைய வாழ்க்கைய இன்னொருத்தன் வாழ முடியாது. இது தான் உலகம் . இது தான் இயற்கை; இது தான் வாழ்க்கை நியதி’’ என்று செல்வமணி சொல்ல குமரனுக்கு ‘‘சுர்’’ என ஏறியது.
‘‘இல்லையே நான் அப்பிடி இல்லையே.. நீ ஏன் அப்பிடி நினைக்கிற..’’ என்று குமரன் கொஞ்சம் தடுமாறிய படியே சொன்னான்
‘‘உன்னைய பத்தி எனக்கு தெரியாதா குமரா..? நீ எப்பவும் இன்னொருத்தவங்க கூட ஓப்பிட்டு பாத்திட்டே இருப்ப . அவன் கார் வாங்கிட்டான். அவன் வீடு வாங்கிட்டான்.. அவன் அவன் கூட பழக்கமாயிருக்கான். அவன் வசதியான எடத்தில தொடர்பு வச்சுசருக்கான். இப்பிடி என்னென்னவோ நினைச்சிட்டு இருப்ப. இதுவே பெரியதப்பு ;ஒன்னே மட்டும் தெரிஞ்சுக்க குமரா… எறும்பு பல்லியப் பார்த்து பொறாமைப்படுறதில்ல! நாயைப்பாத்து புலி பொறாமைப்படுறதில்ல! யானை வானத்தில பறக்கிற சிட்டுக்குருவிய பாத்து அதிர்ச்சியடையுறதில்ல! வானம் மாதிரி இந்த பூமி இல்ல ! காத்து மாதிரி தீ இல்ல ! வேப்பமரம் மாதிரி புளியமரம் இல்ல ! பலாப்பழம் வாழைப்பழமும் ஒரே மாதிரியில்ல ! இவ்வளவு ஏன் ஒன்னைய மாதிரி ஒங்க வீட்டுல யாருமில்ல நீ.. வேற ஒன்னோட அண்ணன் வேற..ஒங்க அக்கா வேற.. ஒன்னோட தங்கச்சி வேற.. ஒங்க அம்மா மாதிரி ஒன்னோட சின்னம்மா இல்ல.. அதுனால இந்த ஒலகத்தில எதுவுமே ஒன்னோட ஒன்னுல்ல. அதுனால ஒன்னோட வாழ்க்கைய நீ வாழு; ஒன்னோட எண்ணங்கள நீ இன்னொருத்தன் மேல ஆதிக்கம் செய்யாதே. இந்த உலகம் எப்பவும் ஒரே மாதிரி தான் இருக்கும். இங்க இருக்கிற நாமதான் ஒவ்வொருத்தரும் ஒவ்வொருமாதிரி இருக்கோம். ஒவ்வொருத்தவங்க கூட ஒப்பிட்டு பாத்து மனச குழப்பிட்டு இருக்கோம் .இனிமே யாரையும் யாரோடயும் ஒப்பிட்டு குழப்பக்கிறாதே. ஒன்னோட வாழ்க்கைய நீ தான் வாழணும். இனிமே யார் கூடவும் ஒன்னைய ஒப்பிட்டு ஒடஞ்சு போகாதே என்று உறுதியாகச் சொன்னான் செல்வமணி.
தன் நண்பன் சொன்னது அத்தனையும் உண்மையென்று நினைத்த குமரனுக்கு இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி அறைவது போலிருந்தது.
ஒன்றோடொன்று ஒப்பிடும் போது தான் உயர்வு தாழ்வு ஏற்படுகிறது
இனிமேல் எவனுடனும் தன்னை ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக இருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *