சிறுகதை

அவரவர் பிரச்சனை! |கி.ரவிக்குமார்

சூரியாவும் மகேஸ்வரியும் ஒவ்வொரு அறையாக பூட்டிக் கொண்டு இருந்தனர். “நகை எல்லாம் இருக்கானு பார்த்துக்கோங்க! தேவைப்பட்டா, ஒரு போட்டோ எடுத்துக்கோங்க!” என்றாள் மகேஸ்வரி.

“எல்லாம் செஞ்சாச்சு! நகைகளை போட்டோ எடுத்து, மெயிலில் கூட அப் லோடு செஞ்சுட்டேன்! நீ போய் காரில் ஏறு! நான் வெளிக்கதவை பூட்டிட்டு வர்றேன்! டோக்கன் வாங்க நேரமாச்சுன்னா, பேங்கில் வைச்சு பணம் வாங்க மதியம் ஆயிரும்!” அவளை அவசரப்படுத்தினான் சூரியா.

கார் வீட்டை விட்டு வெளியே வர, வெளிக்கேட்டையும் பூட்டி விட்டு, கிளம்பினர். தெரு தாண்டி, மெயின் ரோட்டுக்கு வந்ததும் டிராபிக்கில் கடலில் மெதுவாகத்தான் போக முடிந்தது! அப்போது, நடைபாதையில் நடந்து சென்ற, தெரிந்த நபர் போல் இருந்த ஒருவரை காட்டி,

“அதோ பாருங்க! அந்த ஆள் கூட நடந்து போறது, நம்ம பேங்க் அட்டண்டர் முருகன் தானே! அவருக்கு காரில் லிப்ட் கொடுக்கலாமா?” ஆர்வமாக கேட்டாள் மகேஸ்வரி.

“சும்மா வரமாட்டியா? போற வர்றவங்களுக்கு எல்லாம் லிப்ட் கொடுத்தா, நம்ம வேலை என்ன ஆகிறது? அது மட்டுமல்ல! பை நிறைய நகை வேற வைச்சிருக்கோம்!” என்றான் சூரியா கடுப்புடன்.

“அட! நாம நகை கொண்டு போறது அவருக்கு தெரியாதுல்ல! அது மட்டுமல்ல, அவர் நம்ம கூடவே வந்தால், அவரை வைச்சு நமக்கும் பேங்கில் வேலையை சீக்கிரம் முடிச்சிடலாங்க!” என்று சொன்னவளை ஆச்சர்யமாக பார்த்தான்.

காரை மெதுவாக பஸ் ஸ்டாப் ஓரத்தில் முருகனுக்கு அருகில் நிறுத்தி, “சார் ஏறிக்கோங்க! நாங்களும் பேங்க் தான் போறோம்!” என்றான்.

அவனை பார்த்து, தெரிந்த முகமாக இருந்ததால், சற்றே புன்முறுவல் பூத்தபடி, “பரவாயில்லை சார். எனக்கு ஒரு சொந்த வேலை இருக்கு. அதை முடிச்சுட்டு தான் பேங்க் வருவேன்! நீங்க போங்க! உங்களுக்கு ஏன் வீண் சிரமம்!” என்று மறுத்து விட்டு, அடுத்து வந்த பஸ்ஸில் ஏறிக் கொண்டார் முருகன். முருகனோடு உடன் வந்த நண்பர், “என்னப்பா நீ! இப்படி பஸ்ஸில் கஷ்டப்படுறதுக்கு பதில் காரில் ஏறி போயிருக்கலாம்ல!” என்றார்.

“சார்! நான் வேலை பார்ப்பது பேங்க்கில். என்ன தான் தெரிந்தவரா இருந்தாலும் பேங்குக்கு போகும் போது தவிர்த்திடனும். வர்றவங்க என்ன நோக்கத்தில் வர்றாங்கன்னு தெரியாதுல்ல!” என்றார்.

“அட! இப்படி ஒரு கண்ணோட்டம் இருக்கா! பரவாயில்லையே!” என்றார் நண்பர். பேங்கில் நல்ல கூட்டம். நெட் பிராப்ளம் வேறு! சூரியாவுக்கு பொறுமை அலுத்துவிட்டது! ஒரு வழியாக நகையை வைத்து, பணத்தை எடுத்துக் கொண்டு சூரியாவும் மகேஸ்வரியும் வியர்க்க விறுவிறுக்க கிளம்பும் போது மதியம் ஆகி விட்டது! அப்போது அங்கே முருகன் வந்தார். “சார்! நானும் கிளம்புறேன். உங்க ஏரியா பக்கம் தானே! கொஞ்சம் இறக்கி விடுறீங்களா!” என்றார்.

நிமிர்ந்து பார்த்த சூரியா, புன் முறுவலுடன், “சாரி சார். நாங்க ஒரு சொந்த வேலையா, வேற ஒரு இடத்துக்கு போறோம்! வீட்டுக்கு போக நாழியாயிடும்!” என்று தவிர்த்து விட்டு கிளம்பினான்.

“ஏங்க வேணாம்னு சொன்னீங்க! காலையில் கூட வந்து ஹெல்ப் பண்ணாததுக்கு பழியா! பாவங்க!” என்றாள் மகேஸ்வரி.

” சே! சே! அப்படி எல்லாம் கிடையாது! நாம லட்சக்கணக்கில் பணம் எடுத்துட்டு கிளம்புறோம். நம்மிடம் பணம் இருக்குன்னு அவருக்கு தெரியும்! என்ன தான் தெரிஞ்சவராவே இருந்தாலும் என்ன நோக்கத்துல வர்றார்னு தெரியாதுல்ல!” என்றான் சூரியா!

மகேஸ்வரி திகைத்தபடி ஆமாங்க என்று தலையாட்டினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *