உடல் நலம் சரியில்லாத காரணத்தால் தனியார் மருத்துவமனையில் வயது முதிர்ந்த தாய் தனலட்சுமியைச் சிகிச்சைக்காக சேர்த்திருந்தான் மோகன்ராஜ்.
தாயைப் பரிசோதனை செய்த மருத்துவர் வயிற்றுப் பகுதியில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதித் தந்தார். அதை வாங்கிக் கொண்ட மோகன்ராஜ் உடனே தன் தாய்க்கு ஸ்கேன் எடுக்க ஸ்கேன் மையத்துக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் எடுத்தான். அந்த வேலை முடிந்ததும் மீண்டும் தாயை மருத்துவமனைக்கு அழைத்து வந்தான்.
மருத்துவமனையில் ஸ்கேன் அறிக்கையைப் படித்து பார்த்துவிட்டு மருத்துவர் தன்னிடம் சொன்ன விஷயங்களைத் தனது மூத்த அக்கா மல்லிகாவிடமும் அடுத்ததாக இளைய அக்கா இளவரசியிடமும் சொன்னான்.
தம்பி மோகன்ராஜ் சொன்ன விஷயத்தைச் செல்பேசியில் கேட்டதும் அடுத்த 3 மணி நேரத்தில் மூத்த அக்கா மல்லிகா விரைவாக வந்து சேர்ந்து மருத்துவ மனையிலிருந்த அம்மாவிடம் அருகில் சென்று நலம் விசாரித்தார். அதன் பின்னர் தன் தம்பியிடம் பேசத் தொடங்கினாள்.
‘‘தம்பி மோகன்!’’
‘‘சொல்லுங்க அக்கா’’
‘‘டாக்டர் சொன்ன விஷயம் பத்தி போன்லே நீ சொன்னதும் அம்மாவைப் பத்தி எனக்கு ரொம்பக் கலையாப் போச்சுப்பா’’
‘‘அக்கா!’’
‘‘சொல்லு மோகன்!’’
‘‘அம்மாவுக்கு குடல் இறக்க நோயாம், அதுக்காக உடனே ஆபரேஷன் பண்ணனுமாம். அதுக்கு அதிகப் பட்சமா 75 ஆயிரம் ஆகுமாம்’’
‘‘தம்பி மோகன், அதுக்கு மேலே செலவு ஆனாலும் ஆகலாம். இந்தச் செலவுகளுக்குப் பணம் வேணுமே. இது சம்பந்தமாக இளவரசி அக்கா வந்ததும் பேசுவோம்’’
‘‘சரிங்க அக்கா’’
அடுத்த 1 மணி நேரம் கழித்து இளவரசி வந்து அம்மாவைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு வந்து அக்கா மல்லிகாவிடம் பேசினாள்.
‘‘மல்லிகா அக்கா!’’
‘‘சொல்லு இளவரசி’’
‘‘அம்மாவின் ஆபரேஷனுக்கும் மருத்துவச் செலவுகளுக்கம் சேர்த்து மொத்தமா 1 லட்சம் கூட செலவு ஆகலாம். இந்தச் செலவுகளுக்குத் தேவையான பணத்தை யாரு தர்றது?’’
‘‘இளவரசி!’’
‘‘சொல்லுக்கா’’
‘அம்மா பெத்தது 3 குழந்தைங்க. அந்த 3 பேரும் இப்ப அம்மாவைக் காப்பாத்தணும். மொத்தச் செலவுகளை 3 பேரும் சரிசமமா ஏத்துக்கணும். அதுதான் என் யோசைன’’
‘‘மல்லிகா அக்கா’’
‘‘சொல்லு இளவரசி’’
‘‘அது முடியாதுக்கா, ஏன்னா, அம்மாவுக்கு கிடைக்கிற பென்ஷன் பணத்தை தம்பி தான் வாங்கிக்கிறான். அவன் தான் அம்மாவைக் காப்பாத்தற செலவுகளை ஏத்துக்கணும்’’
‘‘இளவரசி! தம்பிக்கு நிரந்தர வேலை இல்லை. அதனாலே அம்மா தன் பென்ஷன் பணத்தைக் கொடுத்துவிட்டு தம்பியோடு தங்கியருந்தாங்க. நம்ம 2 பேரும் ஓரளவு வசதியா வாழறோம். அதையெல்லாம் கொஞ்சம் நெனைச்சுப் பாரு. 3 பேரும் சரிசமமா செலவுகளை ஏத்துக்க உனக்கு விருப்பம் இல்லேன்னா உன்னாலே முடிஞ்ச பணத்தைக் குடு. ஏன்னா, அவரவர் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். வீண் பேச்சுக்கு இது நேரம் அல்ல. அம்மாவைக் காப்பாத்தணும். அது முக்கியம்’’ என்றாள் மல்லிகா.
மேலும் படிக்க:
- ஹவுஸ் வொய்ஃப்-ஜெயச்சந்துரு
- அம்மாவின் வாக்கு- ராஜா செல்லமுத்து
- ஆம்லேட்- ராஜா செல்லமுத்து
- இருமல்- மலர்மதி