சிறுகதை

அவமானம் | ஆவடி ரமேஷ்குமார்

“உன் புருஷன் இன்னிக்கு காலையில தூக்கு போட்டு செத்துட்டானாம். சம்பந்தி எனக்கு போன் பண்ணி சொன்னாரு சித்ரா” என்றார் வேதகிரி.

“என்னது?” என்று அதிர்ந்து கேட்ட சித்ரா அழாமல், “வேற என்ன சொன்னார் என் மாமனாரு” என்று கேட்டாள்.

“கொள்ளி போட என் பேரனை கூட்டிட்டு வாங்க சம்பந்தின்னார்”

சமையல் அறையிலிருந்து வெளியேறி ஹாலுக்கு வந்த சித்ரா சோபாவில் அமர்ந்து ,

“எதுக்கு அவன் தூக்கு போட்டுக்கிட்டு செத்தான்? அந்த சிவப்பு தோல்காரி ஏன் அவனை சாகவிட்டாள்? என்னாச்சு திடீர்னு அவனுக்கு?” என்று புலம்பினாள்.

வேதகிரி தொடர்ந்தார்.

“உன் மேல குத்தம் இல்ல சித்ரா. நீ கருப்பு. தெரிஞ்சுதான அவன் உன்னை கல்யாணம் பண்ணினான். ஒரு பையனுக்கு தகப்பனும் ஆனான். திடீர்னு எவளோ ஒரு சிகப்பு தோல்காரி கூட பழக்கம் ஆச்சு. அவளையே சின்னவீடா வச்சுக்கிட்டான். இது தெரிஞ்ச நீ உடனே அவன்கிட்ட சண்டை போட்டுட்டு மகனை கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு வந்துட்ட. அவனுக்கு ரொம்ப சௌகரியமா போச்சு.

நான் சம்பந்திகிட்ட போய் நியாயம் கேட்டேன். அவர் மகன்னு கூட பார்க்காம செருப்பால அடிச்சார். புத்திமதி சொன்னார். ஆனால் அவன் அந்த செகப்பு தோல்காரியை விடமாட்டேனுட்டான். விதியை நொந்துட்டு வந்திட்டேன். இதோ அதோனு ஆறு மாசமாயிடுச்சு. இப்ப என்னடான்னா… தூக்கு போட்டு செத்துப்போயிட்டான். ஏன்னுதான் தெரியல.

சரி நான் பேரனைக்கூட்டிட்டு போய்ட்டு வரேன். நீ வர்றியா?”

” எனக்கு அந்தாள் முகத்தை பார்க்க விருப்பமில்லப்பா”

” சரி சரி நான் கட்டாயப்படுத்தல”என்றவர்,

பள்ளிக்கு சென்று பேரனை அழைத்து வந்த வேதகிரி, பேரனுக்கு துணியை மாற்றி அணிவித்து அவனுடன் பஸ்ஸில் போகப் புறப்பட்டு போனார்.

இரவு மணி ஏழு.

வேதகிரியிடமிருந்து சித்ராவிற்கு போன் வந்தது.

” ஹலோ சித்ரா.. நான் அப்பா பேசறேன். நீ உன் புருஷனை விட்டு பிரிஞ்சு வந்து மறுபடியும் அவன் வீட்டுக்கு போகாம இருந்தது நல்லதா போச்சும்மா”

” ஏப்பா அப்படி சொல்றீங்க?”

” போஸ்ட்மார்ட்டம் பண்ணி ‘ பாடி’ வந்தது. அந்தாளுக்கு எய்ட்ஸாம்!”

” என்னது எய்ட்ஸா?!”

” ஆமாம்மா. பாடியை நேரா சுடுகாட்டுக்குத்தான் கொண்டு போனாங்க. அந்த செகப்பு தோல்காரிக்கு சில நாட்களுக்கு முன்னால உடம்பு சரியில்லேனு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிருக்கான். அங்க அவளுக்கு ரத்தம் எடுத்து டெஸ்ட் பண்ணினதில எய்ட்ஸ்னு தெரிஞ்சுதாம். ரெண்டு பேருக்கும் ஆஸ்பத்திரியிலேயே சண்டை வந்திடுச்சாம். அவளை அப்படியே விட்டுட்டு வீட்டுக்கு வந்திட்டானாம். அவளும் ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு வராம எங்கயோ வேற ஊருக்கு பஸ் ஏறி போயிட்டாளாம். இதை பார்த்த நம்ம சொந்தக்காரங்க சில பேர் இப்பத்தான் என்கிட்ட சொன்னாங்க.

அவளைப்போய் சின்னவீடா செட்டப் பண்ணிட்டமேங்கிற அவமானத்தில தான் மனசு புழுங்கி புழுங்கி இன்னைக்கு காலைல தூக்கு போட்டுக்கிட்டானாம். பேரன் கொள்ளி வச்சிட்டான். நான் இதோ பேரன் கூட நம்ம வீட்டுக்கு வந்திட்டிருக்கேன்.”

போனை வைத்த சித்ரா அதிர்ச்சியில் அமைதியாகிப் போனாள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *