சிறுகதை

அவன் பறந்து போனானே…! | முகில் தினகரன்

அந்த தனியார் மருத்துவமனையின் வராண்டா பெஞ்சில் தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் தங்கம்மாள்.

அம்மாவையே திகில் முகத்தோடு பார்த்தபடி அருகில் நின்றிருந்தான் அவள் மகன் நான்கு வயது தினேஷ்.

அவளுடன் உதவிக்கு வந்திருந்த வண்டிக்காரன் சற்று தள்ளி நின்று ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆபரேஷன் அறைக்குள்ளிருந்து டாக்டர் வெளியே வர தலையைத் தூக்கிப் பார்த்தாள் தங்கம்மாள். அவளைப் பார்த்து, ‘சாரிம்மா” என்று சொல்லி இரு கைகளையும் மேலே தூக்கிக் காட்டி விட்டு டாக்டர் நகர, விஷயம் புரிந்து கத்தி அழ ஆரம்பித்தாள் தங்கம்மாள்.

கிணறு வெட்டப் போன இடத்தில் வேட்டு வைக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் வெடி வெடித்ததில் தாறுமாறாய் உருக்குலைந்து போன கணவனை மாட்டு வண்டிக்காரனின் உதவியோடு வண்டியிலேற்றி அவசர ஆத்திரத்திற்கென்று ஒரு சாதாரண மருத்துவமனை கூட இல்லாத தன் கிராமத்தை விட்டுக் கிளம்பி, பத்து கிலோமீட்டர் பயணித்து அந்த டவுன் ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்திருந்தாள்.

எப்படியும் பிழைத்து விடுவான் என்ற நம்பிக்கையில் காத்திருந்தவளை இடியாய்த் தாக்கியது அவன் மரணச் செய்தி.

‘ஏம்மா…இப்படிப் பண்ணிட்டே…கொஞ்சம் முன்னாடியே கொண்டாந்து சேர்த்திருந்தா காப்பாத்தியிருக்கலாமே!” உதவி டாக்டர் வந்து சொன்னார்.

‘அய்யா…பத்து கிலோ மீட்டர் தூரத்துல இருக்கற எங்க கிராமத்திலிருந்து கூட்டிட்டு வர்றதுக்குள்ளாற இப்படி ஆயிடுச்சுங்கய்யா” தலையிலடித்துக் கொண்டு அழுதாள் தங்கம்மாள்.

“சரி…அங்கயே ஏதாச்சும் முதலுதவி பண்ணிக் கொண்டு வந்திருக்கலாமல்ல?”

“அய்யா…எங்க ஊர்ல சாதாரண வைத்தியம் பார்க்க ஒரு சின்ன ஆஸ்பத்திரி கூட இல்லையே அய்யா!…

“ஓ” என்றபடி, அந்த உதவி டாக்டர் நகர்ந்ததும் சற்று தள்ளி பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு நின்றிருந்த மகன் தினேஷை அருகில் அழைத்து அவனைக் கட்டிக் கொண்டு கதறினாள்.

சாதி விட்டு சாதி காதலித்து…குடும்பத்தார்களை எதிர்த்துத் திருமணம் செய்து கொண்டு எந்த உறவுக்காரார்களோடும் ஒட்டுமின்றி உறவுமின்றி தன் கணவன் மற்றும் குழந்தையோடு தனித்தே வாழ்ந்து வந்த தங்கம்மாள் திக்குத் தெரியாத காட்டில் சிக்கிக் கொண்ட சிறுமியைப் போல் அச்சத்தில் நடுங்கினாள்.

‘என்னைத் தொட்டுத் தாலி கட்டுன என் ராசாவே போனப்புறம் இந்த உலகத்துல நான் எதுக்கு வாழணும்?…போறேன் என் மவராசன் போன இடத்துக்கே போறேன்!…ராசா…நாங்களும் வந்துடறோம் ராசா”

தற்கொலை முடிவோடு நின்றவளின் காலைச் சுரண்டிய மகன், தங்களுக்கு நேர்ந்த துயரத்தைப் பற்றிச் சிறிதும் அறியாதவனாய், தூரத்தில் வந்து கொண்டிருந்த ஒரு டாக்டரைக் காட்டி, ‘ம்மா..நானும் பெருசாகி…டாக்டராய்டுவேன்.” என்று சொல்ல,

தங்கம்மாளின் மூளைக்குள் ‘பளீர்” என்று அந்த எண்ணம் தோன்றியது.

‘ஆமாம்…இவன் சொல்றதுதான் சரி…என்னோட கிராமத்துல மருத்துவ வசதி இல்லாமப் போனதினாலதான் என் புருஷன் என்னை விட்டுப் போனான்…என் புருஷன் மாதிரி இனி யாரும் அதனால சாகக் கூடாது..அதுக்காக எப்பாடு பட்டாவது என் மகனை டாக்டராக்குவேன்…டாக்டராக்கி என் கிராமத்துல சகல வசதிகளோட கூடிய ஒரு பெரிய ஆஸ்பத்திரியைக் கட்டுவேன்..இது என் புருஷன் மேல் ஆணை”

உழைத்தாள்…உழைத்தாள்..உறுதியோடு உழைத்தாள். வயல் வேலைக்குச் சென்றாள். கட்டிட வேலைக்குச் சென்றாள். காட்டில் சுள்ளி பொறுக்கி விற்றாள்.

அதற்கேற்றாற் போல் தினேஷூம் படிப்பில் திறமையைக் காட்டினான்.

பிளஸ் – டூ தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேறி மருத்துவப் படிப்புக்கான சீட்டை எளிதாய்ப் பெற்றான்.

அவன் தாய் தங்கம்மாள் தன் ரத்தத்தை வியர்வையாகச் சிந்தி முன்னிலும் கடுமையாக உழைத்து மகனின் மருத்துவப் படிப்புச் செலவுகளைத் தாங்கினாள். தன் உழைப்பின் மீது அபார நம்பிக்கை கொண்டிருந்த காரணத்தால் வலிய வந்த சில உதவிகளைக் கூட மறுத்து விட்டிருந்தாள்.

வெளியூர் சென்று மருத்துவப் படிப்பத் தொடர்ந்த அவள் மகன், அதிலும் சாதனை மாணவனாகி தன் தாய்க்கும்…தன் கிராமத்திற்கும் பெருமை சேர்த்தான்.

ஒதுங்கிப் போன உறவுகள் ஒட்டிக் கொள்ள முயற்சிக்க இவர்கள் ஒதுங்கிப் போயினர்.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு சாதாரண தினேஷாக இருந்தவன் டாக்டர்.தினேஷ்.எம்.பி.பி.எஸ். ஆகி நாளை கிராமத்திற்கு வரப் போகின்றான்.

‘என் மகன் வரப் போறான்…இந்தக் கிராமத்து ஜனங்களோட நோய் நொடிகளையெல்லாம் தீர்க்கப் போறான்” ஊர் முழுக்கச் சொல்லித் திரிந்தாள் தங்கமணி.

மறு நாள், தினேஷ் வரவில்லை. மாறாய் தபாலில் அந்தக் கடிதம் வந்தது.

‘அம்மா…எனக்கு அமெரிக்காவில் பெரிய ஆஸ்பத்திரியில் வேலை கிடைத்துவிட்டது…ஆகையால் நான் வரும் புதன் கிழமை புறப்படுகிறேன்…நீ கிராமத்து வீட்டிலேயே இரு…நான் இரண்டு அல்லது மூன்று வருடம் கழித்து வருகிறேன்…கடிதம் எழுதுகிறேன் – தினேஷ்”

மகன் தந்த ஏமாற்றம் அவள் அடிவயிற்றில் “சுரீர்” என்று ஒரு வலியைத் தர, கண்களை மூடி அதைத் தாங்கிக் கொண்டாள்.

ஏமாந்து போனது தாய் மட்டுமல்ல…தாய் நாடும்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *