அன்று அவர்கள் வீடே தடபுடலாக இருந்தது. பஜ்ஜி, கேசரியில் வீடே மணந்து கொண்டிருந்தது. முந்திரி பக்கோடா வேறு வறுபட்டுக் கொண்டிருந்தது. பில்டர் காபி வேறு இறங்கிக் கொண்டிருந்தது. காரணம் அவர்கள் வீட்டில் இன்னும் சிறிது நேரத்தில் பெண்பார்க்கும் படலம் நடைபெற உள்ளது.
இது பலதடவை நடைபெறும் நிகழ்ச்சி என்றாலும் அன்றுதான் புதிதாக நடைபெற உள்ளது போல் செல்லம்மாளும் பலகாரத் தினுசுகளை சுவைபட செய்வாள் அலுப்பு சலிப்பின்றி.
தன் மூத்த மகள் கனகவல்லிக்கு எப்படியாவது மாப்பிள்ளை அமைந்துவிடாதா என்றெண்ணி வேண்டாத தெய்வம் இல்லை; போகாத கோவிலும் இல்லை. ஆனாலும் மாப்பிள்ளை அமையவில்லை. கனகவல்லியும் பி.ஏ., முடித்து விட்டு தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறாள். எனினும் 25 வயதாகியும் வரன் அமையவில்லை. செல்லம்மாளும் அவள் கணவன் வேதாசலமும் என்னென்னவோ முயற்சிகள் அத்தனையும் செய்து விட்டனர். இன்று வரப்போகும் மாப்பிள்ளையின் பெயர் ராகவன் பி.இ., நல்ல குடும்பம்; அமைந்தால் நன்றாக இருக்கும் என்று அப்பா அம்மாவுடன் கனகவல்லியும் நினைத்தாள். ஜாதகமும் மிகவும் ஒத்துப் போயிருந்தது.
மாப்பிள்ளை வீட்டாரும் சிறிது நேரத்தில் வந்து விட்டனர். வழக்கமான சம்பிரதாயங்கள் முடிந்ததும் கனகவல்லியும் வந்து உட்கார்ந்தாள். கண நேரத்திலேயே அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது. நல்ல சுருண்ட கிராப்பும் கம்பீரமான தோற்றமுமாகக் காட்சி அளித்தான். நன்றாகவும் பேசினான். அவனும் கனகவல்லியுடன் சில கேள்விகள் கேட்டான். முடிவை கலந்து பேசி போனில் சொல்லுவதாகவும் அல்லது கடிதம் மூலம் தெரிவிப்பதாகவும் சொல்லி விட்டுச் சென்றார்கள்.
சென்றவர்கள் சென்றவர்கள்தான். எதுவும் கடிதமும் அனுப்பவில்லை. போனும் பேசவில்லை. ஆனால் கனகவல்லி மட்டும் ஒவ்வொரு நாளும் தபாலை எதிர்பார்த்தாள். போனாவது செய்ய மாட்டானா என்று ஏங்கினாள்.
நாட்கள் கடந்ததுதான் மிச்சம்.
நாட்கள் மாதங்கள் ஆனாலும் கனகவல்லி எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்தாள். ஒருநாள் சட்டென்று ஒரு முடிவெடுத்தாள். இனிமேல் இந்த மாதிரி நிகழ்ச்சியில் பொம்மைபோல் உட்காரக் கூடாது என்று தன் அப்பாவிடமும் தன் முடிவைத் தெரிவித்தும் விட்டாள். மேற்படிப்பு படிக்கப் போவதாகச் சொல்லி அப்ளிகேசனும் போட்டு விட்டாள். அப்பாவும் சரி சொல்லிவிட்டார். மேலும் ராகவனுக்கும் திருமணம் முடிந்து விட்டதாக கூறினார்.
படிப்பு முடிந்தவுடனேயே ஒரு காலேஜில் விரிவுரையாளராகச் சேர்ந்தாள். தன் தம்பி தங்கையையும் அவர்கள் விரும்பிய படிப்பை படிக்க வைத்தாள். அவளும் விரிவுரையாளராக பணியாற்றிய கனவல்லிபடிப்படியாக உயர்ந்து பிரின்ஸிபாலாகவும் பதவி ஏற்றார். நல்ல கண்டிப்பான கல்லூரித் தலைவி என்ற பெயரும் பெற்றாள்.
தம்பி, தங்கைக்கும் திருமணம் செய்து வைத்தும் விட்டாள். அப்பா இறந்து விட்டார். அம்மா மட்டும் தம்பி வீட்டில் சுகமற்ற நிலையில் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தாள்.
அன்று புதிய அட்மிஷனுக்காக ஒருவர் பின் ஒருவராக பிரின்சிபால் அறைக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது ராகவன் பெயரும் அறிவித்து உள்ளே வரச் சொன்னார்கள். ராகவன் தன் பேத்தியை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான். கனகவல்லிக்கு அவனைத் தெரிந்து கொண்டாள். ஆனால் ராகவனுக்கு கனகவல்லியைத் தெரியவில்லை.
ராகவன் சற்று முதிய தோற்றத்தில் காட்சி அளித்தான். சரிந்த தொந்தியுடன் சற்று வழுக்கைத் தலையுடன் காட்சி அளித்தான். கஸ்தூரி செராமிக் இன்டஸ்டிரீஸ் என்ற நறுவன எம்டி என்றும் தெரிந்தது. ராகவனை காலேஜில் இரண்டு மூன்று தடவை சந்திக்க நேர்ந்தது.
நேரில் ஒருநாள் உங்கள் வீட்டிற்கு வருவதாகவும் சொன்னாள். சொன்னது போலச் செய்தாள். ஒருநாள் தன்னை ஏன் நிராகரித்தீர்கள் என்றும் கேட்டாள். அவனுக்கு கனகவல்லியின் நினைவேயில்லை. மேலும் நான் நிராகரித்த்ததாலேயா உன் மணம் தடைபட்டது ?என்று அக்கறையுடன் கேட்டான்.
அதுதான் என் மணவாழ்விற்கு முற்றுப் புள்ளியாக அமைந்தது. ஆனால் என் கல்வி வாழ்க்கை மேலும் மேலும் உயர்ந்து கொண்டே சென்றது என்றாள்.
ராகவன் தன் மனைவி இறந்து இரண்டு வருடங்கள் ஆயிற்று என்றான். மேலும் தற்போது ஹார்ட் அட்டாக் வந்து மிகவும் சிரமப்படுவதாகவும் சொன்னான். கம்பெனியை மகன் முரளி நடத்துவதாகச் சொன்னான். ஆனாலும் தனிமையை விரட்டுவது எப்படி என்று யோசிப்பதாகச் சொன்னான்.
கனகவல்லி தான் ஓய்வு பெற்ற பிறகு தன் நிலையும் அப்படித்தான் என்றாள். ஒருநாள் அம்மாவை தன் வீட்டிற்கு அழைத்து வந்தாள்.
அம்மா தன் நடுங்கும் குரலில் கேட்டாள். இவர் யாரம்மா என்று கேட்டாள். ஞாபகமிருக்கா அம்மா நீங்கள் அடிக்கடி கேட்பீர்களே ,அந்த கடைசியாகப் பெண் பார்த்து விட்டு போனாரே அம்மா அந்த அவர்தான் அம்மா இவர் என்றாள் கனகவல்லி.
அடிக்கடி கடற்கரைக்குச் செல்வது அவர்களின் வழக்கமாயிற்று தன் செராமிக் தொழிற்சாலைக்கும் சென்று வந்தார்கள்.
திடீரென ஒருநாள் ராகவன் கேட்டான். ஏன் நாம் நம் நட்புரிமையைத் தொடரக்கூடாது என்றான்.
என்றோ வரவேண்டிய கடிதம் இப்போது இந்த நாளில் வருகிறதோ என்று கனகவல்லி நினைத்தாள். மெதுவாக புன்புறுவலிட்டாள்.
அன்றிலிருந்து ……
அவன் + அவள் = அவர்கள் ஆனார்கள்.
#சிறுகதை