சிறுகதை

அவனவன் வேலை – ராஜா செல்லமுத்து

ஜனா ஒரு நேர்மறையான சிந்தனையாளன்.

ஆனால் செய்யும் வேலைகள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் திருப்தி அற்றதாக இருக்கும்.அவன் செய்வது ஒன்றும் தவறு இல்லை; ஆனால் அது இரண்டாம் இடத்திற்கு தள்ளப்படும்.

ஜனா ரொம்பவே வருத்தப்படுவான்.

என்ன நான் எது செஞ்சாலும் சரியா வரமாட்டேங்குது. இரண்டாவது தடவை வேலை செய்ய வேண்டி இருக்கு என்று நண்பர்களிடம் குறைபட்டுக் கொள்வான்.

நீ எந்த வேலையை யாரு செய்யனுமோ அதை அவங்க கிட்ட தான் குடுக்கணும். அத விட்டுட்டு அந்த வேலையை பத்தி எதுவுமே தெரியாத ஆளுகிட்ட போய் குடுத்தா கடைசியில் இப்படித்தான் இரண்டாவது தடவை வேலை செய்ய வேண்டி வரும் என்று நண்பர்கள் சொல்வார்கள்

ஆனால் தான் பேசுவது சரி என்று தான் ஜனா செல்வான்; அவனுக்கு அவன் செய்வது சரி . ஆனால் அது இரண்டாம் பட்சத்திற்கு தள்ளப்படும் என்பது அவனுக்கு தெரியும். எத்தனையோ வேலைகளை முதல் தடவை செய்துவிட்டு அது திருப்தி இல்லாததால் இரண்டாம் தடவையும் செய்ய ஆயத்தமாவான்.

ஜனாவுக்கு அன்று அவன் கையில் கட்டி இருந்த கைக்கடிகாரம் ஓடாமல் நின்று போனது. நிச்சயமாக தெரியும். இந்தக் கைக்கடிகாரத்திற்கு பேட்டரி தீர்ந்து போய்விட்டது என்று

நேராக ஒரு சிறிய கடைக்குச் சென்று தன்னுடைய கடிகாரத்தை காட்டினான். அந்த கடைக்காரருக்கு கடிகாரத்தை ரிப்பேர் செய்யும் அளவிற்கு அறிவு இல்லை என்றாலும் கடிகாரத்தை திறந்து பார்த்து என்ன பிரச்சனை என்று சொல்லும் அளவிற்கு தெரிந்திருந்தது.

அதனால் விலை உயர்ந்த ஒரு கம்பெனி கடிகாரத்தை கஷ்டப்பட்டு திறந்து பேட்டரி இல்லை என்றான் கடைக்காரன்.

சரி பேட்டரி போடுங்க என்றான் ஜனா.

எவ்வளவு காசில போடட்டும் என்ற கடைக்காரனுக்கு

50 ரூபாய் என்று சொன்னான் ஜனா.

கடைக்காரன் சரி சொல்லவும் பேட்டரியை மாற்றிவிட்டு அந்த கடிகாரத்தின் பின்பக்கத்தை அந்த கடைக்காரனால் சரியாக பொருத்த முடியவில்லை.

எவ்வளவு முயன்றும் அந்த பின் அச்சு ஒட்ட மறுத்தது. வேற வழி இல்லை சார். நீங்க கடிகாரம் சரி பண்ற ஆளுககிட்ட தான் குடுக்கனும் என்றான் கடைக்காரன்.

அப்போது கடிகாரத்தை எடுத்துக்கொண்டு போய் பிரதான சாலையில் இருக்கும் கடிகாரம் பழுது பார்க்கும் நிலையத்தில் கொடுத்தான் ஜனா.

அந்தக் கடிகாரத்தை பார்த்த கடைக்காரன் அதில் ஒட்டி இருந்த பிளாஸ்டிக் பேப்பர்கள் எல்லாம் கிழித்து விட்டு, ஒரு கொரடியை வைத்து வெளியில் வந்து கொண்டிருந்த பின்பக்கத்தை இணைத்தான்.

டக்கென்று அது ஒட்டிக் கொண்டது. எவ்வளவு என்று கேட்டான் ஜனா

ஐம்பது ரூபாய் என்றான் கடிகாரம் சரி செய்பவைன்.

50 ரூபாய மிச்சப்படுத்தணும்ன்ற காரணத்திற்காக ஒரு சாதாரண கடையில் கடிகார செல் வாங்கினோம். ஆனா உண்மையில நாம கடிகார வேல தெரிஞ்ச ஆட்களிடம் தான் கடிகாரத்தின் பேட்டரியை மாற்றி இருக்க வேண்டும்.

ஆனா இப்போ ஒன்னுக்கு ரெண்டு வேல.இப்படித்தான் எந்த வேல செய்யும் போதும் தப்பா நினைச்சுட்டு நம்ம வேலையை தெரியாதவங்ககிட்டு குடுக்கிறோம். அது ரெண்டாம் எடத்துக்கு தள்ளப்படுது . இனிமே நாம அத செய்யக்கூடாது என்று தீர்மானித்தான் ஜனா.

இப்போது ஜனாவிற்கு விளங்கியது. எந்த பொருளை யாரால் சரி செய்ய முடியுமோ? இல்ல, எந்த பொருள் யார் யார் சரி செய்றாங்களோ, அவங்ககிட்ட தான் அந்த வேலையை ஒப்படைக்கணும் என்று தெரிந்து கொண்டான் ஜனா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *