செய்திகள்

அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்த ராகுலின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

குஜராத் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

காந்தி நகர், ஜூலை 7–

‛மோடி’ எனும் சமூகத்தினரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுலின் மேல்முறையீட்டு மனுவை குஜராத் ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

கடந்த 2019ம் ஆண்டு கர்னாடக மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து, அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

தண்டனையை எதிர்த்து சூரத் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த ராகுல் காந்தி, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கவும் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு ஏப்ரல் 20–ந்தேதி ஜாமீன் வழங்கிய செசன்ஸ் கோர்ட், தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து குஜராத் ஐகோர்ட்டை ராகுல் காந்தி நாடினார்.

கடந்த மே மாதம் நடந்த விசாரணையின்போது, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த ஐகோர்ட் நீதிபதி ஹேமந்த் பிரச்சாக், கோடைக்கால விடுமுறைக்குப்பின் இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்த நிலையில் குஜராத் ஐகோர்ட் நேற்று வெளியிட்ட வழக்கு அட்டவணையின்படி, ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் இன்று 11 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முகாந்திரம் இல்லை. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது. அதில் தலையிட முடியாது. ராகுல் மீது குறைந்தது 10 கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதனால் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் ஐகோர்ட்டின் இந்த உத்தரவு காரணமாக ராகுல காந்தி தேர்தலில் போட்டியிட முடியாது. எம்.பி. பதவி சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்யவும் கோர முடியாது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தான் முறையிட முடியும்.

இந்த தீர்ப்பு ராகுல் காந்திக்கும், 2024 தேர்தலுக்கு தயாராகி வரும் காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *