ஆர்.முத்துக்குமார்
திடீரென உடல் நலன் பாதிப்படைந்தாலோ, விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலோ, உடன் இருக்கும் குடும்பத்தாரின் நிலை மிகப் பரிதாபமானது ஆகிவிடும்.
உயிருக்கு போராடும் அவருக்கு உடனடி சிகிச்சைக்கு மருத்துவமனை தரத்துவங்கி விட்டதா? உரிய மருத்துவர் கண்காணிக்கிறாரா? இவற்றுடன் அவசர சிகிச்சை பிரிவு அதிகாரிகள் பொறுப்பு – துறப்பு ஆவணங்களில் கையெழுத்தும் வாங்க அவரது இருதயமும் படபடக்க ஆரம்பித்து விடும்!
அவற்றோடு மருத்துவர்கள் ஏதேதோ புதுப்புது பெயர்களில் நோயின் தன்மையை விவரிக்க புரிந்து கொள்ள முடியாமல் ‘பலி ஆடு’ போல் அமர்ந்து இருக்கவேண்டும்.
இறுதியில் மருத்துவக்காப்பீடு போதுமா? மேலும் முன்பணமாக தர வேண்டிய தொகையையும் கூறும்போது இருதய படபடப்பு எரிமலையாய் வெடித்து விடும் கட்டத்திற்கே வந்துவிடும்.
அச்சமயத்தில் மருத்துவ வசதியை தரும் நிதி ஆதாரம் இருந்தால் மருத்துவமனை அவருக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை தருவதாக கூறிவிட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகே அவர் வாழ்வாரா? என உறுதியாக கூற முடியும் என்று கூறும்போது குடும்பத்தார் நிலை மிக பரிதாபமானதாக மாறிவிடுகிறது.
பணம் செலவழித்து அவரது மரண வேதனையை மேலும் சில நாட்கள் தொடர விடுவதா? அல்லது இப்படி மரமாய் வாழ்ந்து கஷ்டப்படவேண்டாம் என்று முடிவு எடுப்பதா?
இந்த கேள்விகள் நம்மில் ஒரு சிலருக்கு ஏற்படத்தான் செய்கிறது. நிதி வசதி குறைவாக இருப்போர் நம்மால் செலவு செய்ய முடியவில்லையே என்ற கவலை ஏற்படுகிறது.
அல்லது வாழமுடியாத அவருக்கு நமது இறுதி காசு வரை செலவு செய்வதை நிறுத்தினால் நல்லது தான் என்று யோசிப்போரும் உண்டு.
இந்நிலை ஏற்படும்போது கார்ப்பரேட் மருத்துவமனைகள் எப்படி செயல்படவேண்டும்? என்பதற்கு வரையறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி மனைவி, மகன், மகள் சம்மதிக்க மறுத்தால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை தீவிர சிகிச்சைப் பிரிவில்(ஐசியூ) மருத்துவமனைகள் அனுமதிக்கக் கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.மேலும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் தொடர் சிகிச்சையால்அவர் உயிர் வாழ்வதில் சாத்தியமில்லை என்கிற போது அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்திருப்பது பயனற்ற கவனிப்பாக கருதப்படுகிறது. அதேபோல் உயிருக்குப் போராடும் நோயாளியின் மனைவியோ, மகனோ அல்லது மகளோ சம்மதிக்க மறுத்தால் அந்த நோயாளியை ஐசியூ-வில் மருத்துவமனைகள் அனுமதிக்கக் கூடாது.
அதேநேரம் தொற்றுநோய் அல்லது பேரிடர் சூழ்நிலை ஏற்படும்போது அதற்கான வசதிகள் இருந்தால், நோயாளியை ஐசியூ-வில் வைத்திருப்பதற்கு மருத்துவமனைகள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நோயாளிக்கு உறுப்பு செயலிழப்பு அல்லது உறுப்புஆதரவு தேவை அல்லது உடல்நிலை மோசமடையும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில் ஐசியூ-வில் அந்த நோயாளியை அனுமதிக்க மருத்துவமனைகள் முடிவு செய்யலாம்.
தொடர்ந்து மாற்றத்தில் இருக்கும் நோயாளியின் உணர்வில்லாத நிலை, ஹீமோடைனமிக் உறுதியற்ற தன்மை, செயற்கை சுவாச ஆதரவு தேவை, தீவிர கண்காணிப்பு, உறுப்பு ஆதரவு தேவைப்படும் நிலை, கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், உடல்சீரழிவை எதிர்நோக்கும் நோய்த்தன்மை ஆகியவை இருந்தால் அந்த நோயாளியை ஐசியூ-வில் சேர்ப்பதற்கான அளவுகோல்களாக பட்டியலிடலாம்.
மேலும் இதய சிகிச்சை தொடர்பான நோய்களால் ஆபரேஷன் செய்யப்பட்ட நோயாளிகள், செயற்கை சுவாசம் தேவைப்படும் நோயாளிகள், சுவாசம் உறுதியற்ற தன்மை கொண்ட நோயாளிகள், பெரிய அளவிலான அறுவை சிகிச்சை சிக்கலை அனுபவித்த நோயாளிகள், பெரிய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகளையும் ஐசியூவில் சேர்க்கலாம்.
நோயாளிகள் இயல்பான அல்லது அடிப்படை நிலைக்குத் திரும்புதல், நோயாளிகள் அல்லது அவரது குடும்பத்தினர் ஐசியூ-வில் இருந்து வெளியேற்றத்துக்கு ஒப்புக்கொள்ளுதல் ஆகியவை ஐசியூ-வில் இருந்து நோயாளிகள்வெளியேற்றுவதற்கான அளவுகோல்களாக கருதப்படும்.ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட உள்ள நோயாளியின் ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு, சுவாச விகிதம், சுவாச முறை, இதயத் துடிப்பு, ஆக்சிஜன் செறிவு, சிறுநீர் வெளியாதல், நரம்பியல் நிலை ஆகியவை கண்காணிக்கப்பட வேண்டும். அதன் பின்னரே அவர் ஐசியூ-வில் சேர்க்கப்பட வேண்டும்.
இவற்றையெல்லாம் விட உயிருக்கு போராடுபவர் ஏழையோ, பணக்காரரோ, காப்பீடு வைத்து இருந்தாலும் இல்லை என்றாலும் அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சையை தர மருத்துவமனைகள் தயாராக இருக்க வேண்டும். அந்த இரண்டு மணி நேர சிகிச்சைக்கு உரிய தொகைகளை காப்பீடு நிறுவனங்களே தரும் வழிமுறையை ஏற்படுத்தியாக வேண்டும்.
அந்த ஆரம்ப தொகையை ஆயுள் காப்பீடு தந்த நிறுவனம் நூற்றில் மூவரை காப்பாற்றி விட்டால் அவருக்கு தரப்பட வேண்டிய இழப்பீடு தொகை செலவாகாது, மேலும் அத்தொகையே மீதி 97 பேரின் செலவுகளில் பெரும் பகுதியை தந்து விடும்.
அதன் காரணமாக உயிர் தங்காது போனாலும் மன வேதனையில் தவிக்கும் குடும்பத்தாருக்கு மன நிம்மதியை தரும் என்பதை புரிந்து கொண்டு நல்ல செயல்திட்டத்தை உருவாக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.