சிறுகதை

அவசர உதவி – எம்.பாலகிருஷ்ணன்

கோபால் இப்பொழுதெல்லாம் அவன் நண்பன் கண்ணனிடம் பேசுவதில்லை. அவனிடம் அவ்வளவு அன்பாக இருந்தவன், கண்ணனை இப்போது கண்டால் கோபமாக முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்கிறான்.

கண்ணனுக்கு ஒன்னும் புரியவில்லை. கோபாலுக்கு என்ன ஆயிற்று? ஏன் பேசமாட்டேன்கிறான்? விடை தெரியாமல் குழம்பி போய் விட்டான் கண்ணன்.

இதற்கு முன்பு அவர்கள் வேலை முடிந்து இருவரும் எங்கே போனாலும் சேர்ந்தே போவார்கள்; சேர்ந்தே வருவார்கள். அப்படிப்பட்ட நிலையில் இருவருக்கும் என்ன நடந்தது? கண்ணன் அரசுத் துறையில் அவனுடைய அப்பா இறந்ததால் வாரிசு பணியில் கிளார்க்காக பணிபுரிபவன். கோபால் தனியார் துறையில் அலுவலக மேற்பார்வையாளராக பணிபுரிபவன். கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரே வயது தான். ஒரே பள்ளியில் படித்தவர்கள், சிறுவயது முதல் பழகிக்கொண்டு வந்தவர்கள்.

இருவரும் வேலை முடிந்து வந்ததும் பள்ளி மாணவர்கள் போல் ஊர் சுற்றக் கிளம்பி விடுவார்கள். இரவு எட்டு மணி வரை பொழுது போக்கிவிட்டு வீட்டுக்கு வருவார்கள். மறுநாள் வேலைக்குச் செல்வார்கள். திரும்பவும் மாலையில் வழக்கம் போல் வெளியே சென்று விடுவார்கள். அவர்களின் வீட்டிற்கு இது தெரிந்த விசயம் தான். சிறுவயது நட்பு பெரிய வயது வரை வளர்ந்ததால் அவரவர் வீட்டிலும் பெரிதாக கண்டு கொள்வதில்லை. இப்படி நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த நண்பர்களுக்குள் ஏன் இந்த விரிசல்?

ஒருமுறை, கோபால் தன்னுடைய இருசக்கர வாகனத்தை எக்சேஞ்ச் பண்ணி புதுவண்டி வாங்குவதற்கு கண்ணனிடம் பத்தாயிரம் ரூபாய் கேட்டிருந்தான். கண்ணனும் தருவதாக ஒத்துக் கொண்டான். அவனை நம்பி டூ-வீலர் ஷோரூமிற்கு சென்று கண்ணனுக்காக அங்கு காத்திருக்கின்றான். அதற்கு முன்னதாகவே கண்ணனுக்கு போன் செய்த தான் ஷோரூமில் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறான். கண்ணனும் இதோ உடனே வருவதாகவும் சொல்லி இருக்கிறான்.

ஆனால் நடந்தது என்ன? கண்ணன் டூ-வீலர் ஷோரூமிற்கு போகவே இல்லை. கோபால் கண்ணனுக்கு பலமுறை போன் செய்தும் கடைசி வரை கண்ணன் அங்கு போகவில்லை.

கோபாலுக்கு தூக்கி வாரிப்போட்டது போல் ஆனது. கண்ணன் தன்னை நம்பவைத்து பணம் தருவதாகக் கூறி ஏமாற்றி விட்டானே, நம்பிக்கை துரோகி என்று புலம்பி, அந்த டூ-வீலர் ஷோரூமை விடடு கோபத்துடன் புறப்பட்டு விட்டான். அன்றிலிருந்து கோபால் கண்ணனிடம் பேசுவதில்லை. இது தான் நடந்தது.

அன்று ஞாயிற்றுக்கிழமை.

கடை பஜாரில் கோபாலை எதேச்சையாக கண்ணன் பார்த்து விட்டான். டேய், கோபால் நில்லுடா, என்றவாறே கோபால் அருகில் வந்தான். கோபாலுக்கு சினம் தலைக்கேறி,

‘‘ நீ எதுக்குடா என்னை கூப்பிடுறே! எந்த முகத்தை வச்சி என்கிட்ட பேசுறே! ’’ என்று சூடான வார்த்தைகளால் கண்ணனை பொசுக்கி விட்டான்.

‘‘நிறுத்துடா, கோபால்! அன்னைக்கு என்ன நடந்ததுன்னு உனக்குத் தெரியுமா? நீ என்னை டூ-வீலர் ஷோரூமிற்கு கூப்பிட்ட உடனே வீட்ட வாசல் வெளியே வந்தேன். எதிர்தரப்பில் ஒரே கூட்டம். என்ன நடந்தது என்று போய் பாக்குறப்போ என் குலையே நடுங்கி விட்டது. நான் குடியிருக்கிற பக்கத்து வீட்டு அக்கா மகன ஒரு வேன் வண்டிக்காரன் மோதி விபத்தாயிடுச்சி. அந்தக்கா கஷ்டப்படுற பேமிலி. வீடடுக்காரர் வேலைக்கு போயிட்டாரு. யாருமே அவங்களுக்கு ஆதரவு இல்ல. உடனே நான் உதவி செஞ்சி ஆக்சிடென்டான சின்னபிள்ளைய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனேன். தனியார் ஆஸ்பத்திரியானதுனால பணத்துக்கு அந்த அக்கா ரொம்ப கஷ்டப்பட்டாங்க. உனக்காக கொடுக்க வச்சிருந்த பத்தாயிரத்தை அவங்களுக்கு கொடுத்து அவங்க மகள் உயிரைக் காப்பாத்தினேன். இதுனாலதாண்டா நான் அன்னிக்கு வர முடியல, என்னை மன்னிச்சிடுடா ’’என்றான். உண்மையைப் புரிந்துகொண்ட கோபால் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டான். நான் தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும் என்றான்.

நண்பன் மன்னித்து விட்டான் ;

இருவர் முகத்திலும் மகிழ்ச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *