திருமுருகனுக்கு திருமணம் என்று எல்லோருக்கும் அழைப்பிதழ் வைத்துக் கொண்டிருந்தான். வீட்டில் அவன் தான் கடைசி பிள்ளை என்பதால் அந்தத் திருமணத்தை தடபுடலாக நடத்த வேண்டும் என்று பெற்றோர்கள் ஆசைப்பட்டார்கள் . யார் யார் அவனுக்கு தெரிந்திருக்கிறார்களோ அத்தனை பேர்களுக்கும் ஓடி ஓடி அழைப்பிதழ் வைத்துக் கொண்டிருந்தான் திருமுருகன்.
அவன் ஒருவனே அத்தனை பேரையும் தேடித் தேடி சென்று அழைப்பிதழ் வைத்தான்
” என்ன திருமுருகா கல்யாணமா? என்று கேட்க
ஆமா
லவ் மேரேஜா அரேஞ்ச் டு மேரேஜா?
நம்ம மூஞ்சியலாம் யாரு லவ் பண்ணுவா எல்லாம் அரேஞ்சிடு மேரேஜ் தான். வீட்ல பார்த்தாங்க ” என்று கேட்பதற்கு பதில் சொல்லி அவசியம் கல்யாணத்துக்கு வந்துருங்க. உங்கள நான் எதிர்பார்ப்பேன்.
” நிச்சயமா முருகா உன்னுடைய கல்யாணத்துக்கு வராம யாரு கல்யாணத்துக்கு வரப்போறாம்? என்று நண்பர்களும் உறவினர்களும் உறுதி கூறினார்கள். நம் திருமணத்தில் உறவினர்கள் நண்பர்களை எல்லாம் சந்திக்கப் போகிறோம் என்று மட்டற்ற மகிழ்ச்சி அடைந்து கொண்டு இருந்தான் திருமுருகன்.
எல்லா இடங்களிலும் கொடுத்து விட்டு இறுதியாக ஒரு அலுவலகத்திற்குள் நுழைந்தான் அவனைப் பார்த்தவர்களுக்கு திகைப்பாக இருந்தது.
” நான் உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேனே? என்று ஒரு ஊழியர் கேட்க
” நான் இங்கேதான் சார் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வேலை பார்த்தேன். எனக்கு கல்யாணம் இந்தாங்க அழைப்பிதழ் “என்று கொடுத்தான்.
அதை வாங்கிக் கொண்ட அந்த ஊழியர் திருதிருவென வழித்தார். அந்த அலுவலகத்தில் இருக்கும் அத்தனை பேர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வெளியே வந்த போது,
” ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வேலை பார்த்த ஒருத்தன் இங்க வந்து பத்திரிகை கொடுக்கிறான் பாருங்க” என்று சிரித்துக் கொண்டார்கள் அந்த அலுவலக ஊழியர்கள் . அது சிலருக்கு வியப்பாகவும் நகைப்பாகவும் இருந்தது .இதைக் கேட்டுக் கொண்டிருந்த கவின் அவர்கள் பேசுவதை தடுத்து
” ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வேலை பார்த்த ஒருத்தன் நம்மள மறக்காம கல்யாணத்துக்கு வந்துருங்க அப்படின்னு அழைப்பிதழ் கொடுத்துட்டு போயிருக்கான். ஆனா இதே ஆபீஸ்ல வேலை பாக்குற எத்தனை பேரோட வீட்டுக் கல்யாணம் நடந்திருக்கு. யாராவது நம்மை மதிச்சு அழைப்பிதழ் கொடுத்தாங்களா? நாம கல்யாணத்துக்கு போறோமோ இல்லையோ ?ஆனா எவ்வளவு மரியாதையா கொண்டு வந்து பத்திரிகை கொடுத்துட்டு போறான். இவன் தான் சார் மனுஷன் என்று கவின் சொல்ல
திருமுருகனைத் தவறாகப் பேசியவர் வெட்கத்தில், அவமானத்தில் தலை கவிழ்ந்தார்கள்
“சார் அசோக் சார மறந்துட்டேன். இந்த அழைப்பிதழ அவர்ட்ட கொடுத்திருங்க “என்று வெளியே போன திருமுருகன் அசோக் என்று பெயர் எழுதிய அழைப்பிதழை ஒரு ஊழியரின் கையில் திணித்தான். அவன் செய்கை அந்த அலுவலகத்திலிருந்த ஊழியர்களுக்கு வியப்பைத் தந்தது
“சார் மறக்காம கல்யாணத்துக்கு வந்துருங்க சார். நான் உங்களை எல்லாம் எதிர்பார்ப்பேன் ” என்று சொன்ன அவன் வார்த்தையில் ஈரம் அப்பி இருந்தது .இது போன்ற மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று வியப்பு மேலிட திருமுருகனை வெறிக்கப் பார்த்தார்கள் அந்த அலுவலக ஊழியர்கள் .
#சிறுகதை