செய்திகள்

அழைப்பிதழ்கள், ஸ்கிரீன் பிரிண்டிங் நின்று விட்டது

Spread the love

‘கொரோனா ஊரடங்கால்

அழைப்பிதழ்கள், ஸ்கிரீன் பிரிண்டிங் நின்று விட்டது

‘லாக்டவுன் நட்டத்தை சமாளிக்க உதவிக்கரம் நீட்டுங்கள்’:

மத்திய மாநில அரசுகளுக்கு ‘ஒலிம்பிக்ஸ் கார்டு’ கோரி்ககை

 

சென்னை, மே. 22–

கொரோனா –வைரஸ் பரவல், உலகையே உலுக்கிப் போட்டு வருகிறது. உயிர் பலி எண்ணிக்கை ஒரு பக்கம் இருந்தாலும், சிறிய அளவிலான குடிசைத் தொழிலில் ஆரம்பித்து, பெரிய அளவிலான தொழிற்சாலை வரை அனைத்தையும் முடக்கிப் போட்டு விட்டிருக்கிறது.

கொரோனா எதிரொலியாக ஊரடங்கு பாதிக்கப்பட்டு, இப்போது 4–வது கட்டத்தில் இருந்தாலும் ஒரு சில தளர்வுகளுடன் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

‘லாக் டவுன்’ காரணமாக அனைத்து துறைகளிலும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றாலும், குறிப்பிட்டும் சொல்லத்தக்கவற்றில் ஒன்று– பிரிண்டிங், ஸ்கிரீன் பிரிண்டிங்– அச்சுத்துறை.

சென்னை நகரில் மட்டுமே சுமார் 25 ஆயிரம் குடும்பங்கள் இந்த அச்சகத் துறையை நம்பி உள்ளன. நகரில் 4500 பிரிண்டிங் பிரெஸ் (அச்சுக் கூடங்கள்) உள்ளன. இதில் குறைந்தபட்சம் ஊழியர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்திக் கொண்டு 4 கலர் மெஷினைக் கொண்டு அச்சுப் பணிகளை செய்து தரும் நிறுவனத்தில் ஆரம்பித்து, 40–க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியில் அமர்த்தி (ஷிப்ட்டு முறை) மல்டி கலர் பிரிண்டிங் மெஷின்– வெப் ஆப் செட் பிரிண்டிங் பணிகளை செய்து தரும் நிறுவனங்கள் அடங்கும்.

ஸ்கிரீன் பிரிண்டிங் என்பது பரவலாக இருந்த காலம் உண்டு. இப்போது டிஜிட்டல் பிரிண்டிங் ஆக்கிரமித்ததன் காரணமாக ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலை நடத்துபவர்கள் நகரில் அதிகபட்சம் 150 பேர் இருக்கக்கூடும். டிஜிட்டல் பிரிண்டிங் சுமார் 500 நிறுவனங்கள் செயல்படக்கூடும்.

திருமண வைபவங்கள், உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் பிறந்த நாள் விழா, கோவில் திருவிழா ஆகியவற்றுக்கெல்லாம் விதவிதமான டிசைன்களில் அழைப்பிதழை அச்சடித்து வினியோகித்து வந்திருப்பதை கடந்த காலத்தில் பார்த்து வந்திருப்போம். ஆனால் இப்போது இந்நிலை அடியோடு மாறும் நிலை உருவாகி விட்டிருக்கிறது.

திருமணமா… 20 பேருக்கு மேல் (அதிகபட்சம் 50) கூடாது; சமூக விலகலை கடைப்பிடித்தாக வேண்டும். கோவில் திருவிழா கோவிலுக்கு உள்ளேயே. குறிப்பிட்ட எண்ணிக்கை ஊழியர்களை கொண்டு நடத்த வேண்டும். ஆன்லைன் ஒளிபரப்பில் பக்தர்கள் தரிசிக்கலாம்… என்ற கடுமையான நிபந்தனைகள் காரணமாக ஒவ்வொரு துறையிலும் பணிகள் முடங்கின. மார்ச் 3வது வாரத்திலிருந்து அச்சகங்கள் மூடப்பட்டு, அழைப்பிதழ் அச்சடிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டதால்… அச்சக அதிபர்கள் சொல்லொண்ணா சிரமத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

ஓடிக் கொண்டே இருந்த மெஷின்கள் திடீரென்று நிறுத்தப்பட்டதால்… அதன் இயக்கம் பாதிக்கப்பட்டிருக்கும். இத்தகைய நிலைமையில் அச்சக உரிமையாளர்கள் தொழில் கூடத்தை மூடிய காலத்தில் நேர்ந்திருக்கும் மோசமான பாதிப்பு– பொருளாதார நட்டத்தை எப்படி சரிக்கட்டுவது என்பது தெரியாமல் விழி பிதுங்கி இருக்கிறார்கள்.

மத்திய –மாநில அரசுகள் கடன் வாங்கியிருக்கும் வங்கிகள், இந்த நிலைமையை பரிசீலித்து உரிய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டால் தான்… நிம்மதி பெருமூச்சு விட முடியும்… இல்லையென்றால்… அடுத்து என்ன, எப்படி… எப்படியோ… என்று வீண் குழப்பத்தில் நாட்களை நகர்த்தும் வேதனை தான் தொடர் கதையாகும் என்று வேதனையை வெளியிட்டார் பிரிண்டிங் பிரஸ் லித்தோ கிராபர்ஸ் சங்கத்தின் நிர்வாகி கிருஷ்ண குமார்.

‘ஒலிம்பிக்ஸ் கார்டு’

கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் தொழில் நிறுவனங்களில் ஒன்று –திருமண அழைப்பிதழ் அட்டை (இன்விடேஷன்) விற்பனை செய்து மக்கள் மத்தியில் தனி செல்வாக்கை பெற்றிருக்கும் ‘ஒலிம்பிக்ஸ் கார்டு’ நிறுவனம். எதிர்பாராதவிதமாக ஏற்பட்டிருக்கும் இந்த சோதனை நெருக்கடி காலக் கட்டத்தில் நிறுவனத்திற்கு ஒரு மாதத்திற்கு அதிகபட்சம் ரூ.2½ கோடி இழப்பு ஏற்பட்டு நிர்வாகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இந்நிலையில் ஷோரூம்களில் எதிர்பார்த்திருக்கும் வியாபாரம் இல்லாமல் மூடி வைத்திருப்பதைவிட, இருக்கும் இடத்தில் ஸ்டேஷனரி பொருட்களையும் (எழுது பொருள்), வைரஸ் தடுப்பு சானிட்டைசர், முகக் கவசங்களையும் விற்கலாம் என்ற நினைப்பில் நிறுவனம் மாற்றி யோசித்து புதிய முயற்சியில் நுழைந்திருக்கிறது.

மத்திய மாநில அரசுகள் ஒரு சில சலுகைகளை அளித்து உதவிக்கரம் நீட்ட வேண்டும், அப்படி துணை நின்றால் தான் பொருளாதார நஷ்டத்திலிருந்து விடுபட்டு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப முடியும். வியாபாரத்தை தொடர முடியும். அதற்கு அதிகபட்சம் 10 மாதம் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் என்று பாரிமுனையில் உள்ள ‘ஒலிம்பிக்ஸ் கார்டு’ நிறுவனத்தின் பொது மேலாளர் முகமது அலி கூறினார்.

இது சம்பந்தமாக அவர் மக்கள் குரல் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது

‘‘ஒலிம்பிக் கார்ட்ஸ் பாரம்பரியமான ஒரு நிறுவனம். திருமண அழைப்பிதழ்களை விதவிதமான டிசைன்களில் அவரவர்களுக்கு பிடித்தமான வண்ணங்களில் விற்பனை செய்து மக்கள் மத்தியில் தனி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிறுவனம்.

சென்னையில் எங்களுக்கு பாரிமுனையில் 2 ஷோரூம்களும் கோடம்பாக்கத்தில் ஒன்றும் உள்ளன. கோயமுத்தூரில் ஒரு பெரிய ஷோரூம் உள்ளது. பிறந்த நாள், திருமண நாள் மணிவிழா, பவள விழா, நூற்றாண்டு விழா இப்படி ஒரு மாதத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தேவைப்படும் அழைப்பிதழ்களை விற்பனை செய்வது எங்கள் தொழில்.

இப்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டு நாளும் பதைபதைக்க வைத்துக் கொண்டிருக்கும் உயிர்கொல்லி ‘கொரோனா’ வைரஸ் காரணமாக உலக பொருளாதாரமே நிலைகுலைந்து போயிருக்கிறது. தினசரி பத்திரிக்கைகளையும் ஊடகங்களையும் பார்த்தால் ஆயிரக்கணக்கில் உயிர்பலி நம்மை கதிகலங்கச் செய்து வருகிறது.

‘உயிர்க்கொல்லி’ வைரஸ் பரவல் காரணமாக, அதனை அடியோடு கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருவதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவை நான்காம் கட்டமாக இப்போது நீடித்திருக்கிறது.

திருமணத்தில் அதிகபட்சம் 50 பேர் மட்டுமே…

மண்டபங்களில் திருமணங்களை நடத்துவதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது இன்னும் ஆறு மாதத்திற்கு திருமணங்களில் திருமண மண்டபங்களில் இல்லை என்ற ஒரு நிலை தலைதூக்கி இருக்கிறது.

திருமணம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டு இருந்தாலும் இன்றைய ஊரடங்கு சூழ்நிலையில் அதிகபட்சம் 50 பேர் கூடுவதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது சமீபத்தில் மணமகன் வீட்டார் 10 பேரும் மணமகள் வீட்டார் 10 பேரும் திருமணத்தை நடத்தி ஆசி கூறும் நிலை இருந்திருப்பதை ஊடகங்கள் வாயிலாக படித்திருக்கிறோம்,

பார்த்திருக்கிறோம். இதே நிலை தொடர்ந்தால் திருமண அழைப்பிதழ் விற்பனை செய்து வரும் எங்களின் தொழில் எப்படியோ என்று ஒரு கேள்விக்குறி எழுந்திருக்கிறது.

மாற்றி யோசித்தோம்

இந்நிலையில் ஷோரூம்களில் விற்பனை இல்லாமல் இருக்கும் ஒரு நிலையை மாற்றியமைக்க யோசித்தோம். அப்போது எழுந்த ஒரு யோசனை தான்–ஷோரூம்களில் ஸ்டேஷனரி பொருட்களையும் விற்பனை செய்வது அதோடு உயிர்கொல்லி பரவலை தடுக்க தினமும் பயன்படுத்தும் சானிட்டைசர், முகக் கவசம் விற்பனை செய்வது என்று ஒரு முடிவுக்கு வந்தோம். இப்பொழுது அதற்கான விற்பனையை விறுவிறுப்பாக நடத்திக் கொண்டிருக்கிறோம்

எங்கள் நிறுவனங்களில் மொத்தம் 250 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். சிரம நிலையிலும் அவர்களுக்கு மாத சம்பளத்தை கண்டிப்பாய் கொடுத்தாக வேண்டிய நிலையில் அதனையும் கொடுத்து இருக்கிறோம்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து திருமண அழைப்பிதழ் விற்பனை படுத்துவிட்டு இருக்கிறது. ஆயிரமாயிரம் அழைப்பிதழ்கள் (ஒரு நாளைக்கு…) விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கும் கடந்த நாட்களோடு இந்த ஊரடங்கு நாட்களை ஒப்பிட்டு பார்த்தால் அது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும். குறிப்பிட்டுச் சொல்லும் விதத்தில் கூட இல்லாமல் விற்பனை மோசமான அளவிற்கு சரிந்து விட்டிருக்கிறது

ஊழியர்களுக்கு சம்பளம், மின்சாரக்கட்டணம், கட்டிட வாடகை, போக்குவரத்துச் செலவு… எதிர்பாராத இன்னபிற செலவுகள் என்று எதிர்நோக்கியிருக்கும் பிரச்சனைகள் பல. வருமானமே இல்லாமல் இவற்றையெல்லாம் சமாளிப்பது என்பது புரியாத புதிராக எங்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

வங்கியில் வாங்கியிருக்கும் கடன்– அதற்கான வட்டியை முறைப்படி செலுத்த வேண்டும் மத்திய மாநில அரசுகள் விதிக்கும் வரிகளை (ஜி.எஸ்.டி., எஸ்எஸ்டி) செலுத்த வேண்டு. நிர்வாகச் செலவு போக மீதி இருக்கும் தொகையில் லாபத்தை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறபோது அது கதிகலக்குகிறது. நடக்கிற காரியமா…?!

கைதூக்கி விட வேண்டும்

ஷோரூம்கள் மூடப்பட்டிருக்கும் காலத்தில் எங்களைப் போன்ற தொழில் நிறுவனங்களை கைதூக்கிவிட மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

கல்யாண அழைப்பிதழ் மீதான 12 சதவிகித வரியையும், அலுவலக உறைகள் அதாவது ஆபீஸ் என்வலப் மீதான 18% வரியையும் வங்கி கடன்கள் மீதான வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டும். திருப்பி செலுத்தும் தவணை காலத்தை நீட்டித் தர வேண்டும். இப்படி செய்தால் நாங்கள் எல்லாம் மீண்டும் பொருளாதார சரிவு நிலையிலிருந்து தலைதூக்கி பழைய நிலைக்கு திரும்ப முடியும்.

ஷோரூம்களை மூடியிருக்கும் எங்களுக்கு விற்பனை இல்லாமல் இருந்த காலம் நிறுவனத்திற்கு பெருத்த நஷ்டம் தான். பொருளாதார ரீதியில் பார்த்தால் சொல்ல முடியாத பேரிழப்பு. ஒரு மாதத்திற்கு இரண்டரை கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதித்திருக்கும் சூழ்நிலையில் எதிர்காலம் எப்படியோ என்று மீண்டும் எங்களை கவலையோடு சிந்திக்க வைத்திருக்கிறது.

பொருளாதார சரிவில் இருந்து மீண்டு வர, குறைந்தபட்சம் ஒரு வருடமாவது ஆகும். இந்த சோதனைக் காலம் கரைந்து, நெருக்கடி அகன்று, மீண்டும் தலைநிமிர்ந்து நாடும் நாட்டு மக்களும் சகஜ நிலைக்கு திரும்பி நல்வாழ்வு வாழ வழி பிறக்கட்டும்…

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *