சிறுகதை

அளவான ஆசை – மு.வெ.சம்பத்

கண்ணன் பார்வதி இருவருக்கும் திருமணமாகி இன்றுடன் முப்பத்தைந்து வருடங்கள் கடந்த நிலையில் பிள்ளைகள் இருவரும் திருமணம் ஆகி வெவ்வேறு இடத்தில் செட்டிலாகி விட இவர்கள் இருவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு கண்ணன் அந்தக் காலத்தில் வாங்கிய வீட்டில் வசித்து வருகின்றனர்.

கண்ணன் சேர்த்து வைத்த பணம் சற்று மிகுதியாகவே இருந்ததால் இவர்களுக்கு தனது பிள்ளைகள் இடம் ஒண்ட வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.

கண்ணன் தான் ஓய்வு பெற்ற அலுவலகத்தில் பணி செய்து வரும் கோபியை தங்களுக்கு உதவியாக வைத்துக் கொண்டனர். அலுவலக நேரம் முடிந்ததும் கோபி இவர்கள் வீட்டில் வந்து ஆஜராகி விடுவார். நாளாக நாளாக இவர்களுக்கு கோபி வரவில்லையென்றால் வீடே கலையிழந்து விடும் என்ற நிலை வந்தது. மிகவும் நேர்மையாக நடக்கும் கோபி தனக்கென்று எதுவும் கேட்கமாட்டார். அனாவசியமாக உதவி கேட்டு தொந்தரவு செய்ய மாட்டார். அந்த வீட்டில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்து விட்டார் கோபி.

கோபியின் குடும்பம் சிறியதென்றாலும் கோபியின் மனைவிக்கு ஆசைகள் அதிகம். கிடைப்பதைக் கொண்டு நிறைவான வாழ்க்கை வாழ்வதையே விரும்பும் கோபிக்கு அவர் மனைவி இணங்க மாட்டாள். எல்லோரும் எப்படி வாழ்கிறார்கள் பாருங்கள். உங்களை மாதிரி ஒரு ஆசையற்றவரை மணந்தேனே என்று வாய்க்கு வாய் சொல்லுவதையே வழக்கமாக்கிக் கொண்டார் அவர் மனைவி. குறுக்கு வழியில் நடப்பதை விரும்பாத கோபி வீட்டில் இருதலைக் கொள்ளி மேல் எறும்பு போல் தவிப்பார். அலுவலகத்தில் தான் செய்யும் பணிக்கு கிடைக்கும் கௌரவம், மேலதிகாரிகளின் பாராட்டு எல்லாம் அலுவலக வாயிற்கதவோடு விட்டு விடுவார். வீட்டில் தனது சுய புராணமோ அலுவலக நிகழ்வுகளையோ பற்றி பேச்சே எடுக்க மாட்டார். தன் மனைவி முன் எதுவும் எடுபடாதென்பதும் தன் மனைவி காது கொடுத்து கேட்க மாட்டார் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும்.

மறுநாள் கண்ணன் சார் வீட்டிற்குச் சென்ற கோபி முதல் தடவையாக பார்வதியம்மாவிடம் சில நிமிடங்கள் மனம் வருந்தி பேசி விட்டுச் சென்றார். அவன் செல்வதைக் கண்ட பார்வதி ஏதும் பேசத் தோன்றாமல் யோசனையில் ஆழ்ந்தார். கண்ணன் பார்வதி உனக்குப் போன் என்று கூற பார்வதி யாரெனக் கேட்டுக் கொண்டே சென்று அந்தத் தொடர்பில் தன்னை இணைத்துக் கொண்டார். ஹலோ, அம்மாவா நான் தான் பேசுகிறேன் என அவர் மகன் கூற பல விஷயங்கள் சில மணித்துளிகளாக உரையாடலாக நடந்தது. முடிவில் மகன் அம்மா தயவு செய்து நகைகள் வாங்காதே எனக்கும் தங்கைக்கும் மகன்கள் தான் உள்ளனர். நாங்களே நிறைய நகைகள் வாங்கியுள்ளோம். வேணுமானால் கோபி அங்கிளுக்கு ஏதாவது நகை மற்றும் பணம் தந்து உதவி செய் என்று மகன் பேசி தொடர்பைத் துண்டித்தார்.

மறுநாள் வங்கிக்குச் சென்ற பார்வதி லாக்கர் திறக்க வேணுமென வங்கி அதிகாரியிடம் கூற அவர் லாக்கர் ரிஜிஷ்டரில் கையெழுத்துப் போடச் சொல்ல அந்தப் புத்தகத்தில் கடந்த வாரம் இருமுறை லாக்கர் உபயோகித்தற்கான கையெழுத்தைக் கண்டார். தன் மகள் பெயரில் கையொப்பமிட்டு இருந்ததைக் கண்டு அதிர்ந்த பார்வதியிடம் அந்த அதிகாரி ஒரு கடிதத்தைக் காட்டி இது உங்கள் மகள் கொண்டு வந்து கொடுத்தார்களெனக் கூற அதில் இருந்த கையொப்பம் தனது தான் என உறுதி செய்து கொண்ட பார்வதி வேறு ஏதும் பேசாமல் லாக்கர் அறைக்குச் சென்று அங்கு லாக்கரை செக்அப் பண்ணிய போது ஏதும் குறையவில்லை. எல்லாம் சரியாக இருந்தது கண்டு ஒரு புறம் நிம்மதியடைந்தாலும் மறு புறம் இது எப்படி நடந்திருக்குமென ஆராய வேண்டுமென எண்ணினார்.

வீட்டிற்கு வந்த பார்வதியிடம் கண்ணன் ஏன் இவ்வளவு தாமதமெனக் கேட்டார்.

பார்வதி சொல்ல ஆரம்பிக்க…. அப்போது

வருபவரை ஒலியால் உணர்த்தும் நிரந்தர மின் காவலாளி ஒலிக்கவே கண்ணன் அங்கு சென்று பார்த்தான்.

வந்த நபர், ‘‘சார் இந்தக் கடிதத்தை கோபி சார் கொடுக்கச் சொன்னார்’’ என்று சொல்லி அதைத் தந்துவிட்டு நகர்ந்தார்.

அந்தக் கடிதத்தை பார்வதியிடம் கண்ணன் கொடுத்தான்.

பார்வதி அந்தக் கடிதத்தைப் பிரித்தார்.

அதில் கோபி, நான் உங்களை சந்தித்து விட்டு வீட்டிற்குச் சென்ற உடன் எனது மனைவிக்கும் எனக்கும் மிகப் பெரிய போராட்டமே நடந்தது. நீங்கள் நகை வாங்கித் தராவிட்டால் நான் விழாவிற்கு செல்ல முடியாமல் போனால் நான் தற்கொலை செய்து கொள்வேன். நீங்கள் தான் காரணமெனக் கைப்பட எழுதி வைப்பேன் என்றார்.

பின் பெரிய மன உளைச்சலுக்கு ஆளான நான், புத்தி பேதலித்து என்ன செய்வதென்றறியாமல் உங்கள் லாக்கரை நீங்கள் என்றோ நீங்கள் கையெழுத்துப் போட்டுத் தந்த பேப்பரை இதற்கு உபயோகித்தேன். எனது மனைவியை உங்கள் மகளாக அறிமுகப்படுத்தி நகைகள் எடுத்துக் கொண்டு விழாவிற்குச் சென்று விட்டு மறுபடியும் லாக்கரில் வைத்து விட்டோம். மாபெரும் நம்பிக்கை துரோகம் செய்த நான் எத்தனை பிறவியெடுத்தாலும் இந்தப் பாவம் தீராது என்றும் நேற்று என் மனைவி சிறு விஷயத்திற்கு கோபித்துக் கொண்டு தனது வீட்டிற்கு சென்று விட்டார் என்றும் எழுதியிருந்தார். நானும் இன்று அலுவலகத்தில் ராஜினாமா கடிதம் தந்து விட்டேன். எங்கே செல்கிறேன் என்றறியாது செல்கிறேன்; தேடாதீர்கள், நான் இருக்கும் வீட்டைக் காலி செய்து விட்டேன். சாமான்களை என் மனைவி வீட்டிற்கு அனுப்பி விட்டேன். ஏதும் நடவடிக்கை எடுக்காதீர்கள் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று முடித்திருந்தார்.

பார்வதி மனதில் கோபி தன்னிடம் கூறிய வார்த்தைகள், தனது மகன் கூறிய வார்த்தைகள் எண்ண அலைகளாக வலம் வந்தன. போன மாதம் படித்த வாழ்க்கையின் தத்துவம் நூல் வரிகள் பார்வதி கண் முன் நின்று நடனமாடின. அதாவது வாழ்க்கை என்பது தன்னிடம் உபரியாக உள்ளதை தகுதியானவருக்கு தந்து உதவுவது என்ற வரிகள் தான். அநியாயமாக தக்க நேரத்தில் உதவாமல் நல்ல மனிதரை இழந்தோமே.

வாழ்க்கையின் தத்துவம் படித்தென்ன பயன் என்று கண்களை மூடி மானசீகமாக அழுதார். அப்போது கண்ணன் அங்கே வர, அவர் வைத்திருந்த நூலில் கொட்டையெழுத்தில் ‘அளவான ஆசை, நிறைவான இன்பம்’ என எழுதியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published.