தன்னை மறந்து கால்கள் தடுமாற்றத்துடன் தறிகெட்டு அந்தப் பேருந்துநிலையத்திற்கு பைத்தியக்காரர் போல் கண்களில் சோகம் சூழ்ந்து அதே நேரத்தில் வேக நடையுடன் மனம் வெதும்பி நடந்து வந்து கொண்டிருந்தார் நீல மேகம்.
அந்த நீலமேகத்திற்கு என்னவாயிற்று? பொறுப்பாக குடும்பத்தை குலவிளக்காக நினைத்தவருக்கு என்ன வாயிற்று? உடல் பொருள் ஆவியென குடும்பத்துக்காக அல்லும் பகலும் அர்ப்பணித்து வாழ்ந்தவருக்கு இப்போது அவருக்கு என்னவாயிற்று?
கம்பீரமாக மதிப்பும் மரியாதையாக இருந்த இந்தக் கலங்கரைவிளக்கிற்கு வந்த கலக்கம் என்ன?
அமைதியான அழகான கடலில் பயணம் செய்தவர்க்கு கடும்புயல் தாக்கி கரைசேரமுடியாமல் ஏன் தத்தளிக்கிறார்? இன்ப கீதங்களை தேனாக கேட்டவருக்கு துன்ப கீதங்களை பாடும் நிலைக்குக்கொண்டு வந்தவர்கள் யார்?
நீலமேகம் என்ற நியாயவாதிக்கு ஆறாத சோகத்தை ஆலாபனை செய்தவர்கள் யார்?
தன் கையே கண்ணை குத்தியது; தன் குடும்பமே தனக்கு எதிராக தலை தூக்கியது.
ஆம், நீல மேகத்தின் குடும்பமே அவருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்து அவமதித்து விட்டது.
இன்று மனம் வெறுத்து குடும்பத்தை வெறுத்து புத்தி பேதலித்து பைத்தியக்காரர்போல் இரவு வேளையில் தனியாக பேருந்து நிலையத்துக்கு எங்கோ விரக்தியில் செல்கிறார் என்றால் அதற்கு நியாயமான காரணம் இல்லாமல் இருக்க முடியாது.
எல்லாம் பெற்ற மகனே அவரைக் கை நீட்டியல்லவா அடித்து விட்டான். அரும்பாடுபட்டு வளர்த்து படிக்க வைத்து சீராட்டி வளர்த்த செல்லமகனே அவரை கைநீட்டி அடித்து விட்டானே.
நீலமேகம் அரசு அலுவலகத்தில் பணிபார்த்து ஓய்வு பெற்றவர். அவருக்கு இரண்டு பிள்ளைகள். ஆணொன்று பெண்ணொன்று.
மூத்தவளான மகளுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார். இரண்டாம் பிள்ளையான மகனுக்கும் திருமணம் செய்துவிட்டார்.
இங்கே தான் பூகம்பமே வெடித்தது. ஓய்வு பெற்று பணப்பயன்களை இரண்டு பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுத்துவிட்டார்.
மீதத்தொகையில் மனைவி பேருக்கும் அவர் பேருக்கும் வங்கியில் வைப்புதொகையாக சேமித்து விட்டார்.
ஆனால் வங்கியில் போட்ட சேமிப்பு தொகையை தன்னுடைய பேருக்கு மாற்றித் தரும்படி மகன் அரவிந்த் கேட்டு நீல மேகத்துக்கு அடிக்கடி தொந்தரவு கொடுத்தான். ஆனால் அவர் அதற்கு உடன்படவில்லை.
அதனால் கோபமடைந்த நீலமேகம் எல்லா பணத்தையும் உன் பேருல மாத்திட்டா. கடைசி காலத்தில் எங்களுக்கு பணம் வைத்திய செலவுக்கு வேண்டாமா என்று கேட்க அதற்கு மகன் அரவிந்த் சாக போற வயசுல உனக்கு எதுக்கு இவ்வளவு பணம் என்றான்.
எங்களை காட்டிலும் உனக்கு பணம் தான் பெரிசா போச்சா எனக்கேட்க,
‘‘ஆமய்யா உங்களைகாட்டிலும் எனக்கு பணம் தான் பெரிசு. முடிவாக என்னசொல்றேன் எனக்கு பணம் தான் பெரிசு என்றான்.
உனக்கென்னு சேர வேண்டிய பணத்தை கொடுத்துட்டேன். எங்களுக்குன்னு இருக்குற பணத்தை நான் தரமுடியாது என்று பிடிவாதமாக நீலமேகம் சொல்ல சினங்கொண்ட மகன் அரவிந்த், தந்தை என்றும் பாராமல் அவரை கீழே தள்ளிவிட்டு ஓங்கி ஓங்கி அடித்துவிட்டான்.
அந்த நேரத்தில் அவர் மனைவி வீட்டில் இல்லை. வெளியூருக்குச் சென்று விட்டாள்.
மருமகள் இருந்தும் அவளால் ஒன்றும்செய்ய முடியவில்லை. அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து நீல மேகத்தை காப்பாற்றினர்கள். மகன் அடித்ததால் அவருக்கு முகத்தில் சிறு காயங்கள் ஏற்பட்டன.
நிலை தடுமாறிப்போன நீலமேகம், அவரால் மகன் கொடுத்த அடியிலிருந்து தப்பிக்க முடியவில்லை.
ஈன்றெடுத்த கன்றுகுட்டியே தாய் பசுவை முட்டித் தள்ளிய கதையானார்.
கோழிக்குஞ்சு தாய்க்கோழியை நெஞ்சில் மிதித்தது போலானார். அவருடைய தன்மானம் அவரை விடாமல் துரத்த அந்த இரவு வேளையில் திக்குத்தெரியாத காட்டினுள் செல்வது போலானார்.
பேருந்து நிலையத்தை அடைந்த நீல மேகம் அங்கு ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டார். கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டார். கலகலப்பாக இருந்த பஸ் ஸ்டாண்ட் அந்த இரவில் அமைதியாக காட்சிஅளித்தது.
மறுநாள் வெளியூரிலிருந்து வந்த நீலமேகத்தின் மனைவி வடிவு விசயத்தை கேள்விபட்டதும் துடியாய் துடித்து கொதியாய் கொதித்து போனாள். மகன் அரவிந்தை கடுமையாக சத்தம்போட்டாள். அவனை கன்னத்தில் அறைந்தாள்.
அட பாவி மகனே அப்பான்னு பாக்காம அவரையே அடிச்சிட்டியே. நீ நல்லா இருப்பாயா?
வீட்டை விட்டு அவரை அடிச்சி விரட்டிட்டீயே முட்டாள் பையலே.அவரை நான் எங்கே போயித் தேடுவேன்.
காசுக்காக பாசமா வளர்த்த அப்பாவை விரட்டிட்ட உங்கப்பா இல்லாத வீட்டில நானும்இருக்க மாட்டேன்.
இப்பயே நான் போறேன். நீயே இந்த வீட்டை கட்டி ஆண்டுக்க என்று நீலமேகத்தின் மனைவி கூறிக்கொண்டு
வீட்டை விட்டு வெளியேற வீட்டினுள் சென்று தனக்கு தேவையான பழைய துணிமணிகளை எடுத்து ஒரு பையில் திணித்தாள்.
அப்போது மருமகள் அத்தை நானும் உங்களோடு வர்றேன். காசு ஆசை பிடிச்சவர்கிட்ட நானும் இந்த வீட்டில் இருக்க விரும்பல. நீங்க எங்க போறீங்களோ நானும் வர்றேன் என்று மருமகளும் சேர்ந்துகொண்டாள்.
இரண்டு பேர்களும் வீட்டை விட்டு வெளியேறியதை பார்த்த அரவிந்த், அம்மா இப்படி எல்லாரும் வீட்டைவிட்டு போனா நான் மட்டும் எப்படி இருப்பேன். இதை உங்க அப்பாவை அடிக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்டா.
அரவிந்த் பின்னாலே ஓடிச்சென்று அம்மாவையும் மனைவியையும் தடுத்து பார்த்தான் முடியவில்லை. இருவரும் வெளியேறினர்.
அவர்கள் வேகமாக தெருவில் நடக்கும்போது ஒரு இன்ப அதிர்ச்சி அவர்களுக்கு காத்திருந்தது.
ஆம், நீல மேகம் எதிரில் வந்து கொண்டிருந்தார் என்ன ஆச்சரியம்.
நீலமேகத்தின் மனைவியும் மருமகளும் பார்க்க பின்னாலே வந்து கொண்டிருந்த அரவிந்தனும்
பார்த்ததும் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் பெருக்கெடுத்தது. வேகமாக ஓடிப்போய் தந்தையை பிடித்து கதறி அழ ஆரம்பித்தான்.
அப்பா என்னை மன்னிச்சிடுங்கப்பா. காசு தான் பெரிசுனு நினைச்சி உங்கள கை நீட்டி அடிச்சிட்டேன்.
காசு பணங்கள் காட்டிலும் பாசந்தான் முக்கியம்ன்னு இப்பதான் தெரிஞ்சிகிட்டேன்.
அம்மாவும் என்னோட மனைவியும் உங்க மேல வச்ச பாசத்தை நான் உங்க மேல வக்கலை.
காசு என் கண்ணை மறச்சிடிச்சி. அறிவையும் மறைச்சிடிச்சி. என்னை மன்னிச்சிடுங்கப்பா.
இனிமே யாரும் எங்கேயும் போகவேண்டாம்; நாமெல்லாம் ஒன்னா இருப்போம் என்று அவரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.
பொறுமையாக கேட்ட நீலமேகம் பேசத் தொடங்கினார். என்னோட பேர்லையும் உங்கம்மா பேர்லயும் இருக்குற பணத்தை உன் பேர்ல மாத்திகொடுத்திடுறேன்.
நீ அதை வச்சி சந்தோசமா வாழு.
நான் செக்யூரிட்டிவேலைக்கு நாளையிலிருந்து போகப்போறேன். அதில வருகிற வருமானத்தை வச்சி நானும் உங்கம்மாவும் வாழப் போறோம் .
நானும் உங்கம்மாவும் வீட்டு மொட்டை மாடியிலே குடியிருப்போம் என்று தீர்க்கமாக கூறினார்.
மாமா நீங்க வேலைக்கு போகவேண்டாம் ; நான் வேலைக்கு போய் சம்பாதித்துக் கொண்டுவந்து உங்களையும் அத்தையையும் உட்கார வைத்துச்சோறு போடுறேன் என்று மருமகள் புதிய வேகத்தோடு கூறினாள்.
அதைக் கேட்ட அரவிந்தன் வாயடைத்து சிலையாக நின்றான்.
#சிறுகதை