செய்திகள்

அலங்காநல்லூர் ஜல்லிகட்டுப் போட்டி: காளைகளுடன் மல்லுக்கட்டும் காளையர்கள்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்

1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

அலங்காநல்லூர், ஜன.17–

அலங்காநல்லூரில் இன்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

தைப்பொங்கல் தினத்தையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரசித்தி பெற்றது. பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடைபெற்றன.

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா இன்று காலை 7 மணிக்கு காளியம்மன் கோவில் முன்பாக உள்ள வாடிவாசல் திடலில் அரசு வழிகாட்டுதல்படி தொடங்கியது. மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், விழா குழுவினர் ஆகியோர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பச்சை கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.

வனிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியர் மோனிகா ராணா, எம்.எல்.ஏக்கள் வெங்கடேசன், பூமிநாதன், தளபதி, தமிழரசி மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது மாலை 5 மணி வரை 10 சுற்றுகளாக நடக்கிறது. காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் காயம் ஏற்படாதவாறு தென்னை நார் கழிவுகள் பரப்பப்பட்டு இருந்தது. பார்வையாளர்கள் அமர்வதற்காக மிகவும் பாதுகாப்பான முறையில் காலரிகள் அமைக்கப்பட்டிருந்தது.

முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து சுவாமி காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. அதை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. ஆன்லைன் மூலம் பதிவு செய்த தகுதியான 1000 காளைகள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அவிழ்த்துவிடப்பட்டன. தகுதி பெற்ற 600 மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றாக களத்தில் அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு சுற்றிலும் வெவ்வேறு நிறத்திலான, அதாவது மஞ்சள், பிங்க், நீலம், ஆரஞ்சு, பச்சை என சீருடையில் மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு தகுதியான காளைகள் லாரி, வேன்களில் கொண்டு வரப்பட்டு இந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டன. இந்த காளைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது.

அதில் சிறப்பாக விளையாடி அதிக காளைகளை அடக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்தடுத்த சுற்றுக்கு அனுப்பப்பட்டனர். சீறி பாய்ந்து வந்த காளைகளை மல்லுக்கட்டி காளையர்கள் அடிக்கினார்கள். மேலும் வாடிவாசலில் நின்று விளையாடும் சிறந்த காளைகளையும் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வந்தனர். பல காளைகள் சீறிப்பாய்ந்து வாடிவாசலில் இருந்து வெளியேறி பிடிபடாமல் சென்று பரிசுகளை தட்டிச் சென்றது. மாடுபிடி வீரர்களும் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி பரிசுகளைப் பெற்றனர்.

பரிசு பொருட்கள்

ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும், மாட்டு உரிமையாளர்களுக்கும் விழா குழுவினர் தங்கம், வெள்ளி நாணயம், சைக்கிள், கட்டில், பீரோ, மிக்சி, விலை உயர்ந்த டிவி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை பரிசாக வழங்கினர்.

முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உருவம் பொறித்த தங்க மோதிரங்களை ஒவ்வொறு சுற்றிலும் வெற்றி பெறும் வீரருக்கு அமைச்சர் உதயநிதி வழங்கினார்.

விழா முடிவில் சிறந்த மாடுபிடி வீரருக்கு தமிழக முதல்வர் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கார் மற்றும் சிறந்த காளைக்கு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும் சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு இரண்டாம் பரிசாக பைக் வழங்கப்பட இருக்கிறது.

39 பேர் காயம்

மதியம் 1 மணி வரை நடைபெற்ற 5 சுற்றுகளில் மொத்தம் 363 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இதில் 124 காளைகள் பிடிக்கப்பட்டுள்ளன.

அபிசித்தர் மற்றும் திவாகர் ஆகிய 2 மாடுபிடி வீரர்களும் தலா 11 காளைகளை அடக்கி முதல் இடத்தில் உள்ளனர். தலா 7 காளைகளை அடக்கி பாலமுருகன் மற்றும் தமிழரசன் இருவரும் 2-வது இடத்தில் உள்ளனர்.

5வது சுற்றுவரை மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், காவலர்கள் மற்றும் பார்வையாளர்கள் என மொத்தம் 39 பேர் காயமடைந்துள்ளனர்.

காயம்பட்ட வீரர்கள்களை ஏற்றி செல்ல 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வசதி வாடிவாசல் அருகிலேயே தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு சுற்று முடிவிலும் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தயார் நிலையில் இருந்தது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் அலங்காநல்லூர் பேரூராட்சி பணியாளர்கள் வாடிவாசலை தூய்மைப்படுத்தினர்.

ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண நடிகர்கள் அருண் விஜய், சூரி, இயக்குநர் ஏ.எல்.விஜய், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத் ஆகியோர் வந்திருந்தனர். நடிகர் சூரிக்கு சொந்தமான காளை போட்டியில் பங்கேற்றன. ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து போட்டியை பார்த்து ரசித்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

தென்மண்டல ஐ.ஜி.நரேந்திரன் நாயர் மேற்பார்வையில், மதுரை சரக டி.ஐ.ஜி.ரம்யா பாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ், சிவபிரசாத் ஆகியோர் முன்னிலையில் 10 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 55 துணை சூப்பரண்டுகள், 10 கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பரண்டுகள், 80 காவல் ஆய்வாளர்கள்,185 சார்பு ஆய்வாளர்கள் உட்பட 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *