சிறுகதை

அறுபதாம் கல்யாணம்! | வேலூர்.வெ.இராம்குமார்

“என்னங்க!ஏன் இப்படி சோகமா இருக்கீங்க?”

கணவனின் தோளைப் பற்றி ஆதரவாக கேட்டாள் மீனாட்சி.

“இன்னும் இரண்டு நாள்ல எனக்கு அறுபது வயசு முடியுது. நமக்குன்னு வாரிசுகள் இருந்திருந்தா, நமக்கு அறுபதாம் கல்யாண மணிவிழா கொண்டாடியிருப்பாங்கள்லே? “கண் ஆதங்கத்துடன் கூறினார் மணிராஜ்.

முகமலர்ந்த மறுகணமே அமைதியானவள், உண்மைதாங்க. இதுபோன்ற வேளைகளில்தான், நாம ஏன் ஒரு குழந்தையை நமக்கும், நம்ம ஆஸ்திக்கும் வாரிசா. தத்தெடுத்து வளர்த்தெடுத்திருக்க கூடாதுங்கற ஆதங்கம் எனக்கும் வரும்ங்க”

“பைத்தியம்.. நாம ஒரு குழந்தையை தத்தெடுத்திருந்தா, பல அனாதை குழந்தைகளுக்கு உதவி செய்ய மனசு வந்திருக்காது. சரி அதைவிடு. இந்த மணிவிழாவை நாம எங்கேப்போய் கொண்டாடலாம். கோவில்லேயா.. அல்லது வழக்கம் போல அனாதை, முதியோர் இல்லங்களிலா?”

“உங்க இஷ்டம்ங்க!”

“சரி.. காலையில அனாதை ஆசிரமத்துலே.. மாலை கோவில்லே, ஒகேயா?

“கனத்த மனதுடன் தலையாட்டினாள் மீனாட்சி.

அதிகாலை ஐந்து மணி..

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த மணிராஜை அவசர அவசரமாக தட்டியெழுப்பினாள் மணிராஜ்.

“என்ன மீனாட்சி.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேனே?”

“அய்யோ.. முதல்ல வெளியே வந்து பாருங்க” படபடப்புடன் கூறினாள்.

உடனே அவசர அவசரமாக எழுந்தவர், பால்கனிக்கு வந்து பார்த்தார்..

வெளியே நாற்பது வயதினர்கள் பலர் கூடியிருந்ததை பார்த்து அதிர்ந்து போய் கீழே இறங்கி வந்தார்.

கீழே அனாதை ஆசிரம நிர்வாகி பாஸ்கர் நின்றிருந்தார்.

அவரிடம் போய்.. “என்ன சார்,இவ்வளவு கூட்டம். ஏதாவது கட்சி ஆரம்பிக்க போறீங்களா?

“இல்லை சார்! இவங்களெல்லாம் என் ஆசிரமக் குழந்தைகள்.

நீங்க முதன் முதலா இருபத்தைந்தாவது திருமண விழா கொண்டாடியபோது, இவங்களெல்லாம் குழந்தைகள். இவங்களுடைய படிப்பு செலவை நீங்கதான் ஏத்துகிட்டீங்க. உங்களால, அவங்க நல்லா படிச்சு, இன்னைக்கு நல்ல நிலையில இருக்காங்க. வெளிநாடுகளிலும் இருக்காங்க. உங்க பிறந்தநாள், மணநாள் எங்க எல்லோருக்குமே தெரியும். உங்களை வாழ்த்துவதற்காகவே பலர் வெளிநாடுலயிருந்து வந்திருக்காங்க.. அவங்க வாழ்த்தை ஏத்துக்கோங்க சார் என அவர் கூறவும் மணிராஜூம் மீனாட்சியும் கண்கலங்கினர்.

“ஒரு குழந்தையை தத்தெடுத்திருந்தா, நாம சுயநலவதிகளாயிருப்போம். இப்போ பாரு.. நமக்கு எத்தனை குழந்தைகள்ன்னு.. ’’மணிராஜ் மனைவியிடம் கூற,

“மீனாட்சி ஆனந்த கண்ணீருடன் மாணவர்களை பெறாத பிள்ளைகளை கையெடுத்து கும்பிட்டாள் இப்போது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *