அறிவியல் அறிவோம்
அறிவியலில் எட்ட சாத்தியமில்லாததாக கருதப்பட்ட உச்சத்தையும் பெண்கள் எட்டியுள்ளனர். நோபல் பரிசு வென்றது முதல் நாசாவிற்கு செல்வது வரையிலும் பெண் விஞ்ஞானிகள் வரலாற்றில் தங்களது பெயர்களை இடம்பெறச் செய்துள்ளனர்.
உலகின் பல்வேறு பகுதிகளைப் போன்றே இந்தியாவிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு ஆணாதிக்கம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. இருப்பினும் ரிது கரிதால், சந்திரிமா சாஹா போன்றோர் இஸ்ரோ, INSA போன்ற நிறுவனங்களில் உயர் பதவி வகித்து புதிய திட்டங்களைச் செயல்படுத்தி சாதனை படைத்து வருகின்றனர்.
அவ்வாறு அறிவியலில் சாதனைப் படைக்கும் பெண்களில்
டெசி தாமஸ் முக்கியமானவர்.
இந்தியாவின் ‘ஏவுகணைப் பெண்’ என்றழைக்கப்படும் டெசி தாமஸ் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வானூர்தி அமைப்புகள் இயக்குநர் ஜெனரல் ஆவார். டிஆர்டிஓ-வின் அக்னி-4 ஏவுகணை திட்டத்தில் திட்ட இயக்குநராக பதவி வகித்தவர். நாட்டின் ஏவுகணைத் திட்டத்திற்கு தலைமை வகித்த முதல் பெண் விஞ்ஞானி என்கிற பெருமைக்குரியவர்.
56 வயதான இவர் ஏவுகணை வழிகாட்டுதல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இந்தத் துறையில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். அக்னி ரக ஏவுகணை வடிவமைப்பில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். பல்வேறு ஃபெலோஷிப்களும் கௌரவ டாக்டர் பட்டங்களும் பெற்றுள்ளார்.