சிறுகதை

அறிமுகம் – ராஜா செல்லமுத்து


விரிந்து பரந்து கிடந்த நூலகத்தில் இருந்த ஒருகிரானைட் சேரில் அமர்ந்திருந்தான் தனசேகர். வெயில் வெப்பக்காற்று அடித்துக்கொண்டிருந்தது.

அதில் அவனுக்கு உடம்பு முழுவதும் தெப்பமாக வேர்வை ஊற்றியது . அது மதிய உணவு இடைவேளை என்பதால் அந்த நூலகத்தில் இருந்த ஆட்கள் வெளியே வருவதும் போவதுமாய் இருந்தார்கள்.

தனசேகர் ஹோட்டலில் சாப்பிட்டு வந்து அமர்ந்திருந்தான். அவன் அமர்ந்திருந்த அந்தக் கிரானைட் இருக்கை இரண்டு பேர் தாராளமாக அமரலாம் என்பது போல் இருந்தது. அவனுக்கு வந்த செல்போன் அழைப்பை பேசிக்கொண்டே அங்கு நடந்து செல்பவர்களை பார்த்துக் கொண்டே இருந்தான் தனசேகர் .

அங்கே ஒரு பெண்மணி தோளில் தொங்கிய பையுடன் நடந்து வந்தாள் .அவள் தனசேகர் அமர்ந்திருந்த அந்த கிரானைட் சேரை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்தப் பெண் சாப்பிடத்தான் அந்த சேரைப் பார்க்கிறாள் என்பது தனசேகருக்கு சொல்லாமலே புரிந்தது. நல்ல உயரமாக இருந்தாள். மூக்கில் வளையம். கண்ணில் எழுதிய கண் மை இமையை விட்டு வெளியே வரத் துடிக்கும் கருவிழிகள். இடுப்பை விட்டு கீழே இறங்கிய கூந்தல் என்று கருப்பில் நெய்த கவின் துகில் போலிருந்தது. அழகாக இருந்தாள் அந்தப் பெண்.

உட்காருங்க… சாப்பிடுங்க. என்றான் தனசேகர்.

நன்றி என்றாள் அந்தப் பெண்.

உங்களுக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லையே ?இங்கே சாப்பிடுவதற்கு? என்று தனசேகர் கேட்க

எனக்கு ஒன்னும் இல்ல உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா நீங்க உட்காரலாம் என்று சொன்னாள்.

தனசேகர் ஓகே நீங்க சாப்பிடுங்க என்று இடது மூலையில் ஓர் அமர்ந்தான்

அந்த பெண் தான் கொண்டு வந்த டிபன் பாக்ஸ் இலாவகமாக எடுத்து திறந்தாள். ரசம்… சாப்பாடு… பீட்ரூட் கூட்டு என்று அத்தனையையும் அத்தனை வாசனையும் மொத்தமாக வீசியது.

டிபன் பாக்சை திறந்து அதில் ரசத்தை ஊற்றி சாப்பிட ஆரம்பித்தாள். அப்போது அந்தப் பெண்ணிடம் பேசினான் தனசேகர் .

போட்டித் தேர்வுக்கு படிக்கிறீங்களா என்று கேட்டான்.

ஆமா என்று தலையாட்டினாள், அந்தப் பெண் நானும் நிறைய தடவை எழுதிட்டேன் பாஸ் பண்ணல.இதுதான் என்னோட கடைசி சான்ஸ். இதுல நான் பாஸ் பண்ணலேன்னா என்னோட வயசு போயிடும் என்றாள் அந்த பெண்.

அப்படியா? அப்படின்னா நீங்க கண்டிப்பா படிச்சு பாஸ் பண்ணி தான் ஆகணும் என்றான்.

என்ன படிக்கிறீங்க? என்று கேட்டான்.

எஞ்சினீரிங். வேஸ்ட் பல லட்ச ரூபா கொடுத்து படிச்ச படிப்பு சுத்தமா இப்போ ஒன்னும் இல்லாம போச்சு. என்ஜினியரிங் அப்படிங்கறதுக்கு மரியாதை இல்லாம போச்சு என்றாள் அந்த பெண்.

ஆமாங்க நானும் பாத்திருக்கேன் இன்ஜினியரிங் படித்தவர்கள் எல்லாம் இப்போ உணவு சப்ளை பண்ற வேலைதான் பண்ணிட்டு இருக்காங்க என்று தனசேகர் சொல்ல ,

ஆமா என்று தலையாட்டிய அந்தப்பெண். என் தம்பி கூட அப்படித்தாங்க எஞ்சினியரிங் முடிச்சிட்டு அந்த வேல.தான் வேலை செய்றான் என்று சொன்னாள்.

நீங்க அதுக்கு மேல படிக்கலையா? என்று கேட்க எம்பிஏ பண்ணியிருக்கேன் என்று சொன்னாள் .

ஏன் நீங்க லெக்சர் வேலைக்கு ட்ரை பண்ணலாமே? என்று சொல்ல

அது எப்படி என்றாள் அந்தப் பெண்.

ஒரு மாஸ்டர் டிகிரி இருந்தா போதும் .சிலட் இல்ல யுஜிசி இதில ஏதாவது ஒன்றை படிச்சுட்டு நீங்க லெக்ஸ்ர் ஆகலாம் .மாதம் 1 லட்ச ரூபாய் சம்பளம். ஒரு கோடி ரூபாய் வரைக்கும் லோன் போட்டு வீடு கட்டலாம் என்று சொன்னபோது அந்த பெண்ணுக்கு ஆச்சரியமான இருந்தது .

அப்படியா அதுக்கு ஏதாவது ஏஜ் லிமிட் இருக்கா? என்று கேட்டாள்

முதல்ல இல்ல. இப்போ இந்த கவர்மெண்ட் ஏஜ் லிமிட் கொண்டு வந்து இருக்காங்க என்று தனசேகர் சொல்ல

அதுக்கு முன்னாடி லிமிட் கொண்டு வந்துட்டாங்களா? அப்படின்னா இந்த வருசம் டிஎன்பிசி எழுதிட்டு அடுத்த வருஷம் லெக்சர் படிக்க ட்ரை பண்றேன் என்றாள். அந்தப் பெண்.

பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தாள்.

சரி நான் போலாமா? என்றாள் அந்த பெண் .

உங்கள் குட் நேம்? என்று தனசேகர் கேட்க எதுக்கு? வேண்டாம். ஏதாவது பிரச்சனையாயிடும் என்றாள்.

ஓகே பரவாயில்ல என்றான் தனசேகர்

நான் பேர் சொன்னா உங்க கூட நிறைய பேச வேண்டியது இருக்கும். பெண்களுக்கு அவ்வளவு காயம் இருக்கு. யார்கிட்டயாவது ஆறுதலா பேச முடியாதா அப்படின்னு இருப்பாங்க. நான் உன்கிட்ட நிறைய சொன்னே. அது என்னோட பலவீனம் ஆயிரும் என்று சொல்லி அந்த இடத்தை விட்டு சென்றாள்.

தனசேகருக்கு என்னவோ போல் ஆனது. என்ன இது? நாம பேர தான கேட்டோம். வேறு ஏதும் கேட்கலையே ?என்றவன் சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து விட்டு படிக்க உள்ளே போனான். அவனுக்கு நேர் எதிரே தான் அந்தப் பெண் அமர்ந்திருந்தாள்.

தனசேகர் பார்த்ததும் அந்த பெண்ணுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது போல .சிறிது நேரம் அமர்ந்திருந்த தனசேகர் படிக்கும் அறையை விட்டு வெளியே வந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்தான்.

அப்போது வெளியே வந்த அந்தப் பெண் தனசேகரைத் தேடினாள்.

ஒரு நிமிஷம். நான் உங்கள வேதனைப்படுத்தி இருந்தா சாரி என்றாள்.

ஏன் எதுக்கு? என்றான் தனசேகரன்

நீங்க என்னோட பேர கேட்டீங்க நான் சொல்லல .நான் யாரையும்இந்த மாதிரி பேசினது இல்ல .நானும் திருமணமான பெண்ணை உங்க கூட நான் பேசினா நாளைக்கு என்னுடைய வீட்டுக்காரருக்கு தெரிஞ்சா தப்பாயிடுமே .அது என்ன பற்றிய சந்தேகம் இல்லை. ஒரு பொசசிவ்னஸ் .அப்புறம் அவரை பார்க்கதான் நீ லைப்ரரி போறியா? அப்படின்னு ஒரு கேட்பார். எதுக்கு இந்த வேண்டாம் என்று அந்தப்பெண் சொன்னபோது.

ஓகே நோ ப்ராப்ளம். அதனால என்னங்க இருக்கு .சும்மா ஜஸ்ட் தெரிஞ்சுக்கலாம்னு தான்.ஒரே கேம்பஸில் தான் இருக்கம் .அதான் கேட்டேன். உங்களுக்கு தாேணலன்னா சொல்ல வேண்டாம் என்றான் தனசேகர்

என்னுடைய பெயர் தனசேகர் என்று சொன்னபோது அந்தப்பெண் சிரித்தாள்.

ஓகே பாய் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

உள்ளே அமர்ந்து படித்துக் கொண்டிருந்த தனசேகரன் மேலும் அவனால் படிக்க முடியவில்லை.

அந்த பெண்ணிடம் நான் போய் வருகிறேன் என்று சொல்லிவிட்டு படிக்கும் அறையை விட்டு வெளியேறினான் தனசேகர். பாய் என்று கையைக் காண்பித்தாள் .

அந்த பெண் இந்த அறிமுகம் என்பது அந்த அறிமுகத்தோடு முடிந்து விடப் போகிறதா ?இல்லை தொடரப் போகிறதா? என்பது அந்த அறிமுகத்திற்கு தான் தெரியும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *