சிறுகதை

அறவழி – ராஜா செல்லமுத்து

நான்காம் நிலைக் காவலரான காமராசு தான் ஒரு காவலர் என்பதை மறந்து இருப்பார். அவர் இந்த வேலைக்கு வர வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டெல்லாம் வந்தவர் அல்ல. ஏதோ ஒரு அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த நான்காம் நிலைக் காவலராக காவல் நிலையத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்.

இவர் கைதிகளை பிடிப்பதோ? அடிப்பதோ? இல்லை. விரசமான வார்த்தைகளைப் பேசுவது என்பதெல்லாம் அவரிடம் கிடையவே கிடையாது. அவர் ஒரு காவலர் என்ற நிலையைத் தாண்டி மனிதநேயத்துடன் தான் இருந்தார். காக்கி சட்டை போட்ட அகிம்சை காந்தியாக வாழ்ந்து வந்தார்.

அவரைப் பார்ப்பவர்களுக்கு ஒரு காமெடியனாகத்தான் காவலர் காமராசு தோன்றுவார். ஆனால் அவர் உள்ளத்துக்குள் அன்பு மட்டுமே குடி கொண்டிருந்தது.

‘நீ எல்லாம் போலீஸ் வேலைக்கு ஏன் வந்தே? போலீஸ் வேலைன்னா ஒரு கம்பீரம் இருக்கணும். ஒரு கெத்து இருக்கணும். தப்பு இருக்காே? இல்லையோ ? அரட்டி பேசணும். அப்படி தப்பு செஞ்சிருந்தா நாலு போடு போட்டா தான் தப்பு செய்றவன் செய்ய மாட்டான். இப்படி பல வகையில நாம நம்மோட கோபத்தைக் காட்டுனா தான், தப்பு செய்ய பயப்படுவான். நீ என்னடான்னா புள்ளப் பூச்சி மாதிரி இருக்கியே’ என்று காமராசுவை நிறைய போலீஸ்காரர்கள் திட்டுவார்கள்..

அதையெல்லாம் அவர் பொருட்படுத்த மாட்டார்.

‘இல்ல சார் ஏதோ மனுஷன் ஏதோ ஒரு தேவைக்காக தப்பு பண்றான். போலீஸ் ஸ்டேஷன் ஜெயில்னு வரும்போது அந்தத் தப்ப மறந்துடுவாங்க. அதுக்கப்புறம் அவன் வாழ்நாள் பூரா அந்த தப்பு மனசை உறுத்திக் கொண்டே இருக்கும். இது நியதி தான். எனக்கு என்னமோ இந்த மாதிரி ஆளுகளைப் பார்த்தா பாவமாத்தான் இருக்கு. என்னால அவங்கள அடிக்கவோ? பேசவோ? முடியல சார். எனக்கு அவங்க மேலே இரக்கம் தான் வருது’ என்று காமராசு சொல்ல…..

‘‘என்ன காமராசு நீ பாட்டுக்குப் பேசிட்டு இருக்க. போலீஸ் வேலை என்றாலே மத்தவங்கள போட்டுத்தள்ள தானே. நீ இப்படி பேசிட்டு இருந்தே என்னைக்காவது ஒரு கைதி, ஒன் ஜோலியை முடிச்சுட்டு தான் உன்ன தாண்டி ஜெயில் தாண்டி போகப் போறான். இப்படி வெள்ளந்தியா இருக்காத’’ என்று காமராசுவைத் திட்டினார் ஒரு போலீஸ்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த காமராசு மெல்ல சிரித்தார். பதில் ஏதும் பேசவில்லை.

‘நீ எல்லாம் எதுக்குய்யா போலீஸ் வேலைக்கு வந்தே. ஏதோ ஒரு ஆசிரமம். அது இதுன்னு வச்சு புத்தி சொல்லிட்டு இருக்க வேண்டியதுதானே? போலீஸ் வேலைக்குனு வந்திட்டால் தப்பு செய்தவனைப் புரட்டி எடுக்கணும். அப்பதான் தப்பு செய்யப் போறவன் பயப்படுவான். அப்பத்தான் நம்ம போலீஸுக்கு ஒரு கெத்து’ என்று உடன் பணி புரியும் போலீஸ்காரர்கள் உசுப்பேற்றினார்கள்.

காமராசு இதுக்கெல்லாம் அசையவே இல்லை.

‘உண்மைதான் சார்…. நான் போலீஸ் வேலைக்கு லாயக்கில்லை தான். எனக்கே தெரியுது. போலீஸ் வேலைன்னா மத்தவங்கள அடிக்கணும். தப்பு தப்பா பேசணும். மரியாதை கொடுக்கக் கூடாது. இதுதானே நம்ம போலீஸ் வேலையோட ஆதார சுருதி. இது எதுவுமே இல்லாம நான் இந்த வேலையில் இருப்பது கஷ்டம் தான். பாப்பம் சார். நான் இந்த வேலையில அமைதியா அன்பு காட்டிப் பணி செய்யமுடியம்னு செய்யிறேன். அது எவ்வளவு நாளைக்குத்தான் நான் செய்யப் போறேன்னு பாப்பம் சார்’ என்று காமராசு சொல்லியபடி வேலை செய்து கொண்டிருந்தார் .

காமராசு போலீஸ் வேலைக்கு தகுதி இல்லை என்று அந்தக் காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் எல்லாம் புகார் கடிதம் எழுதி மேலிடத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாத காமராசு அவருடைய வேலைகளில் மூழ்கி அதையே கொண்டிருந்தார்.

வரும் குற்றவாளிகளைத் தன்னுடைய போக்கில் பேசி திருத்துவது, தவறு செய்யக் கூடாது என்று சொல்வது என்று அறவழியில் அன்பு வழியில் அத்தனை பேரையும் திருத்தி அனுப்பினார். ஒரு தடவை தவறு செய்து வந்தவர்கள் காமராசிடம் பேசி போன பிறகு மறுபடியும் அவர்கள் தவறு செய்து காவல் நிலையத்திற்கு வருவதில்லை. இது மற்ற காவலர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை தான்.

ஆனால் காமராசர் பற்றியான பேச்சுக்கள் காவல் நிலையத்திலும் அதற்கு வெளியேயும் பரவத் தொடங்கின.

ஆனால் காவல் நிலையத்தில் இருந்த போலீஸ்காரர்கள் மட்டும் எப்படியாவது காமராசுவை காவல் நிலையத்தில் இருந்து துரத்தி விடவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருந்தார்கள்.

அதற்கான ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது.

ஆனால் இவர்கள் எதிர்பார்த்ததற்கு எதிர்மாறாக ஒன்று நடந்தது.

அந்த ஆண்டு சிறந்த காவலர் என்ற ஜனாதிபதி விருதை காமராசுவுக்கு ஜனாதிபதி வழங்குவதாக செய்தி வந்தது.

அப்போதுதான் அந்தக் காவல் நிலையத்தில் இருந்தவர்கள் அறிந்து கொண்டார்கள். லத்தியும் துப்பாக்கியும் அடியும் ஒரு மனிதனை மாற்றுவதை விட அன்பும் நேசமும் பாசமும் பண்பான பேச்சும் ஒரு மனிதனை வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் என்பதை உறுதிப்படுத்தினார்கள்.

அன்று முதல் அந்தக் காவல் நிலையத்தில் காமராசுவைப் பின்பற்றத் தாெடங்கினார்கள் காவலர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *