செய்திகள்

அறப் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பதா? தி.மு.க. அரசிற்கு ஓ.பி.எஸ். கடும் கண்டனம்

Makkal Kural Official

சென்னை, ஜன. 5–

அறப்போராட்டம் நடத்த அனுமதி மறுப்பதா? என தி.மு.க. அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

அண்ணா வழியில் ஆட்சித் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, அவருடைய கருத்துகளுக்கு முரணான வழியில், மக்களாட்சிக்கு புறம்பாக தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் அறப் போரட்டங்களை நடத்தி வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் மதுரையில் இருந்து சென்னைக்கு நீதி கேட்டு பேரணி மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்பு, மாநில மகளிர் அணித் தலைவி உமாரதி மற்றும் நிர்வாகிகள் மதுரை, சிம்மக்கல், செல்லத்தம்மன் கோவில் அருகே பேரணி செல்ல திரண்டபோது, அவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. இது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல்.

அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் துன்புறுத்தலில், துணை முதலமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட, தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்ற நிலையில், அதுகுறித்து முதலமைச்சர் மவுனம் சாதிப்பதும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்று அங்கு பயிலும் மாணவிகளுக்கு ஆறுதல் கூறாததும், குற்றவாளிக்கு ஆதரவாக தி.மு.க. அரசு செயல்படுகிறதோ, குற்றவாளியின் பின்னணியில் உள்ளவர்களை மூடி மறைக்கப் பார்க்கிறதோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், அறப் போராட்டங்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்து வருகிறது.

பா.ஜ.க. மற்றும் பிற அரசியல் கட்சிகளின் அறப்போராட்டத்தை தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி அடக்க நினைக்கிறது தி.மு.க. அரசு. அடக்குமுறை என்றுமே வெற்றி பெற்றதில்லை.

ஆட்சியினால் ஏற்படும் நன்மை, தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கேற்ப செயல்படாதவர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டை இழப்பார் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க, தி.மு.க. ஆட்சி வீழும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை அண்ணா தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *