செய்திகள்

அறந்தாங்கியில் தொழிலதிபர் கழுத்தை அறுத்துக் கொலை; மனைவியிடம் 75 பவுன் நகைக் கொள்ளை

மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை வீச்சு

அறந்தாங்கி, ஏப். 25–

அறந்தாங்கியில் தொழிலதிபரின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு மனைவியிடம் கத்தி முனையில் 175 சவரன் நகை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவுடையார்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது நிஜாம். இவர் ஆப்டிகல்ஸ் கடை (கண் கண்ணாடி கடை), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஆயிஷா பேபி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளது. மகள் திருமணமாகி தனியாக உள்ளார். மகன்கள் இருவரும் வெளியூரில் உள்ள ஆப்டிகல்ஸ் கடையை நிர்வகித்து வருகின்றனர். கணவன் – மனைவி இருவர் மட்டுமே ஆவுடையார்பட்டினத்தில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு 11 மணி அளவில் வீட்டின் எதிர்புறம் உள்ள பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நிஜாம் வாசலில் நின்று செல்போனை பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது, வீட்டின் சுற்றுச் சுவரை தாண்டி உள்ளே குதித்த 3 மர்ம நபர்கள் நிஜாமின் கழுத்தை அறுத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதில் நிஜாம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

175 பவுன் நகை கொள்ளை

பின்னர் வீட்டிற்குள் நுழைந்த அந்த கும்பல் நிஜாமின் மனைவி ஆயிஷா பேபியிடம் கத்தியை காட்டி மிரட்டி பீரோ சாவியை கேட்டுள்ளனர். அவர் தர மறுக்கவே, ஆத்திரமடைந்த கும்பல், ஆயிஷா பேபியை கத்தியைக் காட்டி மிரட்டினர். இதனால், உயிருக்கு பயந்த ஆயிஷா பேபி பீரோ சாவியை கொடுத்துள்ளார். ஆயிஷா பேபி கட்டிப்போட்ட அந்த கும்பல் பீரோவில் இருந்த 175 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினர்.

இது குறித்து தகவலறிந்த நிஜாமின் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த நிஜாம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொழில் போட்டி காரணமாக தொழில் அதிபர் நிஜாம் கொல்லப்பட்டாரா? அல்லது கொள்ளை சம்பவத்தின்போது கொல்லப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலதிபரை கொலை செய்துவிட்டு 175 சவரன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அறந்தாங்கியில் தொழிலதிபரின் கழுத்தை அறுத்து வீட்டில் இருந்த 175 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.