நல்வாழ்வுச் சிந்தனைகள்
ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு முறை மூன்று நிமிட நடைப்பயிற்சி செய்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.
பிரிட்டனில் ஒரு சிறு குழு மீது நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.
ஏழு மணி நேரத்திற்குள், ஒவ்வொரு அரை மணி நேர இடைவெளியில் மூன்று நிமிட நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவு குறைகிறது என்று நீரிழிவு அறக்கட்டளை மாநாட்டில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மொத்தம் 32 நோயாளிகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ‘ஆக்டிவிடி ஸ்நாக்’ எந்த செலவும் இல்லாமல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பிரிட்டனைச் சேர்ந்த நீரிழிவு அமைப்பு கூறுகிறது.
பிரிட்டனில் சுமார் நான்கு லட்சம் பேர் டைப்-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது.
உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு, கணையத்தின் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களைத் தாக்கும் போது அது இன்சுலினை உற்பத்தி செய்ய முடிவதில்லை. இந்த நிலையில் உடலானது வகை 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறது.
இன்சுலின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இன்சுலின் பற்றாக்குறையால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் இந்த நிலையைத் தவிர்க்க சீரான இடைவெளியில் செயற்கை இன்சுலின் எடுக்க வேண்டிவருகிறது.ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நீண்ட காலம் அதிகமாக இருந்தால் நோயாளிக்கு பல கடுமையான நோய்கள் ஏற்படலாம். இதில் சிறுநீரக செயலிழப்பு, கண்பார்வை இழப்பு மற்றும் மாரடைப்பு ஆகியவை அடங்கும்.
டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினசரி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது ஒரு சோர்வான பணியாக உள்ளது என்று பிரிட்டன் நீரிழிவு ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் டாக்டர் எலிசபெத் ராபர்ட்சன் கூறுகிறார்.