செய்திகள்

அரையாண்டு தேர்வுக்கு மாநில அளவில் பொது வினாத்தாள்: பள்ளிக்கல்வித்துறை தகவல்

சென்னை, நவ.20-

6 முதல் பிளஸ்–2 வகுப்பு வரையிலான மாணவ–மாணவிகளுக்கு காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளுக்கு பொது வினாத்தாள் நடைமுறை கொண்டு வரப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வும் இதேபோல், பொது வினாத்தாள் நடைமுறையே பின்பற்றப்பட்டது.

அதன்படி, 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ–மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு அடுத்த மாதம் (டிசம்பர்) 11ந்தேதி முதல் 22ந்தேதி வரையிலும், பிளஸ்–1, பிளஸ்–2 மாணவ–மாணவிகளுக்கு அடுத்த மாதம் 7ந்தேதி முதல் 22ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

தேர்வுக்கு முந்தைய நாளில் அந்தந்த பாடங்களுக்கான வினாத்தாளை ‘எமிஸ்’ என்ற தளத்தில் இருந்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் 14417 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டு அதுபற்றி பதிவு செய்யவேண்டும் என்றும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரையாண்டு தேர்வுகள் முடிந்து, டிசம்பர் மாதம் 23ந்தேதி முதல் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 1ந்தேதி வரை தொடர் விடுமுறை விடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பிளஸ்–1, பிளஸ்–2 மாணவ–மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு தொடங்குவதற்குள் அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *