சிறுகதை

அரைநெல்லி – மு.வெ.சம்பத்

ராமையா சென்னையில் கொப்புடையாள் ஸ்டோர்ஸ் என்ற பல பொருள் அங்காடி வைத்து வியாபாரம் செய்து வருகிறார். சமூக சிந்தனையாளர். அங்காடியில் பணி புரியும் இரண்டு பணியார்களிடமும் நல்ல விதமாகப் பழகுபவர்.

ராமையா தனது அப்பா காலமான பின் தனது சித்தப்பா மணி வீட்டிற்கு வந்தார்.

சித்தப்பா தான் இவரை வளர்த்து ஆளாக்கி இந்த வியாபாரத்தையே ராமையாவிற்கு வைத்துக் கொடுத்தார். பின்பு ராமையாவிற்கு தெரிந்தவர்கள் மூலம் ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்தார். ராமையா தனது பையன் கல்லூரிப் படிப்பை முடித்ததும் சித்தப்பா அழைத்ததின் பேரில் காரைக்குடியில் உள்ள அவர் வியாபாரக் கணக்குகளை பார்க்க அவர் இடத்திற்கு அனுப்பி வைத்தார். அந்த வேலை ராமையா பையனுக்குப் பிடித்துப் போகவே அவன் அவர் சின்னத் தாத்தாவிற்கு மிகவும் ஒத்தாசையாக இருந்தான்.

நல்ல சம்பளம், தங்குவதற்கு நல்ல இடம், சுவையான உணவு என்று ராமையாவின் பையன் சௌகரியம் குறையாமல் பார்த்துக் கொண்டார் சித்தப்பா மணி.

ராமையா கடைக்கு இரவு சுமார் 8.30 மணியளவில் தினமும் கோபாலும் சீனுவும் வருவார்கள். இவர்கள் வந்ததும் தொழிலாளர்கள் தங்களது பணியிலிருந்து விடுவிக்கப் பட்டு வீடு செல்ல அனுமதி கிடைத்து விடும். மூவரும் இணை பிரியா நண்பர்கள். ஒருவருக்கு ஒருவர் நேசமாக இருப்பர். அரசியல் பற்றிக் கடையில் பேச மாட்டார்கள். நேர்மையான வழியில் பணம் ஈட்டுவதும் வியாபார மேம்பாடு பற்றித் தான் பெரும் பாலும் இவர்கள் பேசுவார்கள். இவர்கள் உறவு நாளுக்கு நாள் மேம்பட்டுக் கொண்டிருந்தது.

சீனு கடைக்கு வந்ததும் அந்தக் கடைக்கு எதிர் காம்பவுண்டிலுள்ள அரைநெல்லி மரத்தைப் பார்த்து அந்த மரத்தின் வளர்ச்சி பற்றியும் அதன் ஆயுட் காலம் பற்றியும் அதில் காய்த்து இருக்கும் காய்களைப் பற்றியும் விவரமாகக் கூறினார். அப்போது அந்த மரத்தில் நிறைய காய்கள் காத்திருந்ததால் சீனு ராமையாவிடம் நாளை கொஞ்சம் காய்களைப் பறித்து வைக்கும் படி சொன்னார். நாளை எல்லோரும் சாப்பிடலாம் என்றும் கூறினார்.

மாதம் ஒரு தடவை மூன்று பேரும் குடும்பத்துடன் கூட்டாக ஏதாவது ஒரு கோயில் அல்லது கடற்கரை சென்று வருவது வாடிக்கை. அந்தப் பயணத்தின் போது அவர்கள் பெரும்பாலும் குடும்ப மேம்பாடு பற்றியே பேசுவார்கள்.

அன்று வழக்கமாக மூவரும் கடையில் சந்தித்த போது, கோபால் தனக்கு திருப்பெரும்புதூரில் நிறைய வேலைகளுக்கான ஆர்டர் வந்துள்ளதாகவும் அங்கு தான் கட்டியுள்ள தனது புது வீட்டிலியே குடியேறப் போகதாகவும் கூறினார். சில காலம் அங்கு தங்கி விட்டு பிறகு சென்னை வந்து விடுவேன் என்றார்.

அடுத்து ராமையா தனது சித்தப்பா எழுதிய கடிதத்தைக் காண்பித்தார். அதில் அவர் சிறிது காலம் காரைக்குடிக்கு வந்து தங்குமாறு கூறியிருந்தார். உனது பையனுக்கு திருமணம் நடத்திவிடலாம் என்று கூறியிருந்தார். ராமையா நானும் சில காலம் அங்கே செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றார். கடையைப் பார்த்துக் கொள்ள ஒருவரை சொல்லியுள்ளேன் என்றார்.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டேயிருக்க, நிமிடங்கள் நகர, சீனு இது ஒரு தற்காலிக பிரிவு தானே , நமக்குள் ஒரு இடைவெளி உண்டாகிறதே, எப்படியும் சமாளித்துத் தானே ஆக வேண்டும். சூரியனை கரும் மேகங்கள் மறைப்பது போன்ற சில கால அளவே என்று கூற அப்போது காற்றலையில் ‘ உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம், உலகத்தில் எது தான் சொந்தமடா என்ற பாடல் ஒலிக்க, மூவரும் திகைப்பில் ஆழ்ந்தனர்.

இதற்கிடையில் சீனு எதிர் காம்பவுண்டைப் பார்க்க அதிர்ச்சியுடன் ராமையாவைப் பார்த்து எங்கே அந்த அரை நெல்லி மரம் என வினவ நெல்லிக்காய்க்காக சிலர் கற்கள் வீசுவதாகவும் அதில் வீட்டிலுள்ள கண்ணாடி மற்றும் பல்புகள் உடைவதால் அந்த மரம் வெட்டப்பட்டதாக கூறினார். சீனு அடைந்த வேதனைக்கு எல்லையே இல்லையெனலாம்.

பின் சீனு கோபால் மற்றும் ராமையாவைப் பார்த்து இனி இந்த பக்கம் வருவதையே தவிர்க்க வேண்டியது தான், ஏனெனில் உங்கள் பிரிவையும் அந்த வெற்றிடத்தையும் காண என்னால் இயலாது, நான் வருகிறேன் என்று கனத்த மனதுடன் விடைபெற்றுச் சென்றார்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த எதிர் வீட்டுக்காரரிடம் ராமையா என்ன அரை நெல்லி மரத்தை வெட்டி விட்டீர்களே என வினவ அவர் எங்களுக்கே மனது கஷ்டமாகத்தானிருக்கிறது. தற்போது ஜன்னல் மற்றும் வாசல் விளக்குகளுக்கு கம்பி வலை போட்டு விட்டோம், இனிப் பயமில்லை என்றும் நாளை அரை நெல்லி கன்று ஒன்று வருகிறது. அதை அந்த இடத்தில் நட்டு விடுவோம். மீண்டும் நீங்கள் அந்த இடத்தில் அரை நெல்லி மரத்தைக் காணலாம் என்றார்.

உடனே ராமையா இந்த செய்தியை சீனுவிடம் தெரிவித்தால் மகிழ்வார் என்று கூறினார். பிறகு இருவரும் சிறிது நேரம் பேசி விட்டு தங்களது பயணத்தைத் தொடர விடைபெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *