செய்திகள்

அருள் கொடுக்க சிவன் அனுப்பியதாக கூறி பணம் பறிப்பு: போலி சாமியார், 4 பேர் கைது

வடலூர், ஆக. 24–

வடலுாரில் சிப்ஸ் கடைக்காரரை ஏமாற்றி பணம் பறித்த போலி சாமியார் உட்பட 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், வடலுார் கலைஞர் நகர், முத்துகன்னி தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் ஜோதிமணி (வயது 30). வடலுாரில் சிப்ஸ் கடை வைத்துள்ளார். நேற்று இவரது வீட்டுக்கு காரில் 5 பேர் வந்தனர். அதில் ஒருவர் சாமியார் தோற்றத்தில் இருந்தார். அவர்கள், நாங்கள் திருவண்ணாமலையில் இருந்து வரும் சிவனடியார்கள். உங்கள் வீட்டிற்கு சிவன் நேரடியாக அருள் கொடுக்க எங்களை அனுப்பி உள்ளார். இதற்கு கைமாறாக திருவண்ணாமலையில் உள்ள சிவன் கோவிலில் நீங்கள் அன்னதானம் செய்ய வேண்டும். அதற்கு ரூ.45 ஆயிரம் தர வேண்டும் என கூறினர்.

5 பேர் கைது

இதை நம்பிய ஜோதிமணி, தன்னிடம் தற்போது ரூ. 3 ஆயிரம் மட்டும் உள்ளது என்று கூறி பணம் கொடுத்துள்ளார். பணத்தை சாமியார் பெற்றுக்கொண்டு, மீதியை சிறிது நேரம் கழித்து வந்து வாங்கிகொள்வதாக கூறி, சென்றனர். இந்நிலையில் ஜோதிமணியின் 8 வயது மகன், ‘நமது வீட்டிற்கு வந்தவர்கள் நான் ரோட்டில் விளையாடிய போது தன்னிடம் நமது குடும்பத்தை பற்றி விசாரித்தனர்’ என கூறியுள்ளான். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜோதிமணி, வடலுார் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் அவர்களை தேடினர். அவர்கள் அனைவரும் வடலுார், ராகவேந்திரா சிட்டி போகும் வழியில் உள்ள டீக்கடை அருகில் காரில் இருந்தனர். அவர்களை, போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில் சாமியார் போல இருந்தவர் திருவண்ணாமலை மாவட்டம், போலுார் வட்டம் குருவிமலையை சேர்ந்த சேகர் (வயது 65), வெண்மணி சந்திரசேகரன் (வயது 65), கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுார் வட்டம், திருப்பாலபந்தல் முருகன் (வயது 43), துரிஞ்சிப்பட்டை ஜெகதீஷ் (வயது 23), குருவிமலை டிரைவர் ரகுநாத் (வயது 26) என்பதும், இவர்கள் பல இடங்களில் இது போல் பலரை ஏமாற்றி பணம் பறித்ததும் தெரிய வந்தது. இது குறித்து வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து அவர்கள் ஐந்து பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து டி.என் 05 ஏ.டி 9891 என்ற பதிவெண் கொண்ட ஸ்கார்பியோ காரை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *