புதுடெல்லி, ஆக. 1–
எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்ற தீர்ப்பை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட், அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம் செல்லும் என தீர்ப்பளித்தது.
தமிழ்நாட்டில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கான உள் ஒதுக்கீட்டிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”இட ஒதுக்கீட்டின் நோக்கத்தை, உள்ஒதுக்கீடு அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்கிறது. நூற்றாண்டுகளாக ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு வரும் சமூகங்களுக்கு சம வாய்ப்பை அளிக்க உள் ஒதுக்கீடு வகை செய்கிறது” எனக் கூறினார்.
இதனையடுத்து 2005ல் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், அரசியல் சட்டத்தின் 14வது பிரிவை உள் ஒதுக்கீடு மீறவில்லை. பட்டியலின உட்பிரிவுகள் எதுவும் ‘பட்டியல் வகுப்பினர்’ என்ற வரையறையில் இருந்து விலக்கப்படாத காரணத்தால் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்றும் 7 நீதிபதிகள் அமர்வில் 6 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு வழங்கினர். நீதிபதி பேலா திரிவேதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்.
பட்டியலின, பழங்குடியினருக்கான உள்ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும் என்று அருந்ததியர் உள் இடஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
மேலும் அரசு வேலைவாய்ப்புகளில் பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் வால்மீகி மற்றும் மழாபி சீக்கிய சமூகத்தினருக்கு 50% உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் விதமாக பஞ்சாப் மாநில அரசு கொண்டு வந்த சட்டமும் செல்லும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.