பாங்காக், மார்ச் 02–
உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக அரிசி கொள்முதல் குறித்து கருத்து தெரிவித்த, தங்கள் நாட்டு தூதரை அப்பதவியில் இருந்து நீக்கி, தாய்லாந்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ) அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் அபுதாபியில் கடந்த பிப்ரவரி 26 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் கடந்தவாரம் பேசிய உலக வர்த்தக அமைப்புக்கான தாய்லாந்து நாட்டின் பெண் தூதர் பிம்சனாக் வோன்கொபோன், ‘இந்தியாவில் குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற பெயரில் விவசாயிகளிடம் இருந்து ஒன்றிய அரசு அரிசியை கொள்முதல் செய்வது, பொது விநியோகத் திட்டத்தில் அந்நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு அல்ல. மாறாக, அரிசி ஏற்றுமதி சந்தையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம்’ என்று கூறி இருந்தார்.
தாய்லாந்து நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து, இந்தியா தனது எதிர்ப்பை, தாய்லாந்து அரசு மற்றும் உலக வர்த்தக அமைப்பின் தலைவர் மற்றும் வேளாண் குழு தலைவராக உள்ள கென்யா, ஐக்கிய அரபு அமீரகத்திடம் தெவித்தது. மேலும், உலக வர்த்தக அமைப்பு பேச்சுவார்த்தையில் தாய்லாந்து பிரதிநிதிகள் பங்கேற்ற அமர்விலும் இந்தியா பங்கேற்காமல் தவிர்த்தது.
இந்நிலையில், உலக வர்த்தக அமைப்புக்கான தாய்லாந்தின் தூதர் பிம்சனாக்கை அப்பொறுப்பில் இருந்து நீக்குவதாக தாய்லாந்து அரசு அறிவித்ததுள்ளது. இந்தியாவின் அரிசி கொள்முதல் திட்டம் குறித்து பேசியதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அவரது பேச்சும், செயல்பாடுகளும் முறையாக இல்லை’ என்றும் கூறப்பட்டுள்ளது.