டெல்லி, ஜூன் 21–
டெல்லி முதலைமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், தற்காலிகமாக வழங்கப்பட்ட ஜாமீனை நிறுத்தி வைத்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டின் கடந்த மார்ச்-21 ம் தேதி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், டெல்லி சிறப்பு நீதிமன்றம் நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது . இன்றைய நாளில் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து வெளியேறுவதாக இருந்த நிலையில் தற்போது அவரது ஜாமீனை நிறுத்தி வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுனிதா குற்றச்சாட்டு
நேற்று விசாரணை நீதிமன்றம் அளித்த ஜாமீன் உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை 48 மணி நேரம் அவகாசம் கேட்டிருந்தனர். அதனை நீதிபதி மறுத்து, ஜாமீன் வழங்க உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து அமலாக்கத்துறை, கேஜ்ரிவாலின் ஜாமீனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கினை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம், விசாரணை நடைபெற உள்ளதால், விசாரணை முடியும் வரையில் கெஜ்ரிவாலுக்கு அளித்த ஜாமீனை நிறுத்தி வைப்பதாக தற்போது உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் அமலாக்கத்துறையை குற்றம்சாட்டியுள்ளார். விசாரணை நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவு பதிவேற்றப்படுவதற்கு முன்பே, ஜாமீனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தை அமலாக்கத்துறை எவ்வாறு அணுகியது? பாரதீய ஜனதா அரசாங்கம் மற்றும் அதன் மத்திய அமைப்புகளால் தனது கணவர் தேடப்படும் பயங்கரவாதியாக நடத்தப்படுவதாகவும் சுனிதா குற்றம் சாட்டி உள்ளார்.