செய்திகள்

அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் வழக்கு: விசாரணை ஏப்ரல் 22–ந்தேதி ஒத்திவைப்பு

சென்னை, மார்ச் 15–

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 22ம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் தள்ளிவைத்தது.

கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் தமிழக சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகார் காரணமாக அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, அந்தத் தொகுதிக்கு 2016ம் ஆண்டு நவம்பரில் மீண்டும் தேர்தல் நடைபெற்றது. இதில் அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். இந்த நிலையில், இவரது வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர் கீதா சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு காரணமாக இருந்த செந்தில் பாலாஜியின் வேட்பு மனுவை நிராகரிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தேன். இருப்பினும், எனது புகார் மனுவை ஏற்காமல் செந்தில் பாலாஜியின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டனர். எனவே, அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி தொடர்ந்த மனுவை ஏற்கனவே நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த மனுவை ஐகோர்ட் நிராகரித்த உத்தரவை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட் சென்றுள்ளார். அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அரவக்குறிச்சி தேர்தல் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு ஏற்கனவே தடை விதிக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கின் விசாரணை ஏப்ரல் 22–ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *