ஆர். முத்துக்குமார்
பிரதமர் மோடி பல வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாடுகளுடன் ராஜாங்க உறவுகளை வளர்த்துக் கொள்ளக் காட்டிய ஆர்வம் மிகவும் பாராட்டப்பட்ட ஒன்று என்பதை அறிவோம்.
தற்சமயம் வளைகுடா நாடுகளுடன் உறவுகளை பலப்படுத்திக் கொள்ள சென்றிருக்கிறார். 5–வது முறையாக அப்பகுதிக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு தலைவர்களை சந்திப்பது பிராந்தியத்திற்கு நமது வெளியுறவு அமைச்சகம் தரும் முக்கியத்துவத்தை புரிய வைக்கிறது.
பிரதமர் மோடி சென்றுள்ளது போல் கடந்த 4 ஆண்டுகளில் இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் ஒவ்வொரு ஆண்டும் நான்குக்கும் மேலாக, 2019ல் ஒரே ஆண்டில் 8 முறையும் சந்தித்துப் பேசி உள்ளனர்.
இம்முறை பிரதமர் சென்று இருப்பது அபுதாபியில் மிகப்பெரிய இந்துக் கோயிலை திறந்து வைக்கத் தான். அரபு நாடுகள் இஸ்லாமிய மதவாதிகள், அதில் கறாராக இருப்பவர்கள் என்பதை அறிவோம்.
சவுதி அரேபியா செல்லும் இந்துக்கள் தங்கள் கைவசம் இருக்கும் திருநீற்றையும் தெய்வப் படங்களையும் விமான நிலையத்தில் வைத்து விட்டு சென்ற நாட்களும் உண்டு.
ஆனால் துபாய், சார்ஜா, அபுதாபி போன்ற நாடுகள் மெல்ல ஐக்கிய அரபு நாடுகளின் மரபுகளில் இருந்து வெளிவந்து மதக்கொள்கை கோட்பாடுகளில் தளர்வுகளை அறிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.
மத காரணங்களால் சவுதி அரேபிய மகளிர் வாகனம் ஓட்டக்கூட தடை இருந்தது. மாலை நேரத்திற்குப் பிறகு வெளியே செல்ல அனுமதிகூட கிடையாது என்பதெல்லாம் மாறி மெல்ல உலக வழக்கங்களை ஏற்க ஆரம்பித்து வருகிறார்கள்.
ஐரோப்பிய நாடுகளில் படிக்கச் செல்லும் அரபு பகுதி இளைஞர்கள் வெளிநாடுகளிலேயே தங்கி சம்பாதித்து வாழத் துவங்கிய கட்டத்தில் இப்படியே போனால் பணக்கார நாடாக இருந்தும், பணக்காரர்கள் எங்கும் வாழாமல் அயல்நாடுகளில் வாழ்வதால் பல பொருளாதார சிக்கல்கள் ஏற்படலாம் என்று உணர்ந்தே துபாயில் பல்வேறு மாற்றங்கள் துவங்கியது.
அந்த புரட்சிகர மாற்றங்கள் துவங்கியதும் துபாய் சுற்றுலா பயணி அவர்களின் சொர்க்க பூமியாகவே உயர்ந்துள்ளது. அதன் எதிரொலியாய் அருகாமை நாடுகள் எல்லாம் இன்று நவநாகரீக நகரங்களாக மாறி விட்டது.
2022ல் கத்தாரில் மிகப் பிரம்மாண்ட கால்பந்தாட்ட ஸ்டேடியத்தை உருவாக்க, அது ஓர் அழகிய நகராக உருவானது. இன்று எழில் மிகு அப்பகுதியும் துபாய்க்கு இணையான சுற்றுலாப் பிரதேசமாக உயர்ந்து வருகிறது.
எண்ணெய் வளம் மற்றும் நீண்ட நெடிய பாலைவனமாக இருந்த இப்பகுதியே சர்வதேச அளவில் மிக பிரம்மாண்ட கட்டுமானங்களும், சாப்ட்வேர் வளர்ச்சிகளும் காணப்படும் பகுதியாக மாறி விட்டது. இத்தருணத்தில் அமெரிக்காவும், சீனாவும் இதர வளர்ந்த பொருளாதாரங்கள் எல்லாம் கச்சா எண்ணெய் வளத்திற்காக மட்டுமே வளைகுடா நாடுகளுடன் ஒப்பந்தங்கள் மற்றும் உறவுகளை வளர்த்து வந்த நிலையில் இந்தியா அவற்றையெல்லாம் தாண்டி கலாச்சார ரீதியாகவும் இணைந்து செயல்படவும் களமிறங்கி இருப்பது பாராட்டுக்குரியது.
அப்பகுதி தலைவர்கள் மறைந்த முன்னாள் சபாநாயகர் சுஷ்மா சுவராஜ் சர்மா, அயல் விவகாரத்துறை அமைச்சராக இருந்தபோது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் 46–வது மாநாட்டில் விசேஷ விருந்தினராக பங்கேற்றுப் பேச அழைப்பு விடுத்தனர். ஒரு பெண்ணுக்கு அத்தகைய சிறப்பைத் தர முன் வந்ததும் முன் மாதிரியான முடிவாகும், மேலும் ஒரு இந்திய அமைச்சருக்கு முதல் முறையாக கொடுக்கப்பட்ட கவுரவமும் ஆகும்.
பிறகு நமது தலைவர்கள் அங்கு நடைபெறும் பேச்சு வார்த்தைகள், முக்கிய சர்வதேச திட்டங்கள் மற்றும் முடிவுகளின் போதும் அழைத்துக் கொண்டனர். நாமும் அந்நாட்டு அரசர்களையும், முக்கிய தலைவர்களையும் குடியரசு தின சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவப்படுத்தியது முதல் பல நேரங்களில் நட்பு ரீதியாக சோதனையான நேரத்தில் உதவிக்கரமும் நீட்டி வருகிறோம்.
இப்படியாக உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளப் பகுதியில் அன்பை பெற்று அவர்களுடன் கைகோர்த்து நடை போட வைத்து வருகிறார் பிரதமர் மோடி.
இம்முறை இஸ்லாமிய நாடுகளின் உச்சமாக இருக்கும் மண்ணில் இந்துக்களும் வணங்கி வழிபட ஏதுவாக ஒரு பிரம்மாண்ட கோவிலை கட்டி முடிக்க வழி கண்டதுடன் அதை தற்போது திறந்து வைத்திருப்பது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும்.