டுவிட்டர் முன்னாள் சிஇஓ குற்றச்சாட்டு
நியூயார்க், ஜூன் 13–
பாஜக அரசை விமர்சித்த டுவிட்டர் கணக்குகளை முடக்கவில்லை என்றால் டுவிட்டர் அலுவலகம் மூடப்படும் என மோடி அரசு மிரட்டியதாக முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி குற்றம் சாட்டி உள்ளார்.
2020–21 ஆம் ஆண்டில் பாரதீய ஜனதா அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடுங்கோடையையும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் உறுதியான போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகள் போராட்டத்தை சுற்றியும், அப்போது அரசை விமர்சிக்கும் குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களை சுற்றியும் எங்களுக்கு நிறைய கோரிக்கைகள் வந்தன.
விவசாயிகள் போராட்டம் நடந்த போது அது தொடர்பாக பதிவான டுவிட்டர் கணக்குகளை முடக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் இந்தியாவிலுள்ள டுவிட்டர் ஊழியர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தப்படும் எனக்கூறி மிரட்டியதுடன், அதனை நிறைவேற்றவும் செய்தார்கள். அத்துடன் டுவிட்டர் அலுவலகங்களே மூடப்படும் என்றெல்லாம் மிரட்டல்கள் வந்தன.
மோடி அரசு மிரட்டல்
இந்தியாவில் டுவிட்டரை கட்டுப்படுத்துவோம் என்று சொல்லப்பட்டது. இவையெல்லாம் நடந்தது இந்தியா எனும் ஜனநாயக நாட்டில் தான் என்று கூறி உள்ளார். விவசாயிகள் போராட்டம் முடிந்து ஓராண்டுக்கு பிறகு இந்திய அரசின் மீது டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி, இந்த குற்றச்சாட்டை கூறி இருப்பது சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
ஏற்கனவே டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.) செயல்பட்டு வந்த ஜாக் டோர்சி, 2021-ம் ஆண்டு நவம்பர் 29-ந்தேதி பதவி விலகினார். இதனை தொடர்ந்து, டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டார். இதற்கிடையில் எலான் மஸ்க், டுவிட்டரை வாங்கியதைத்தொடர்ந்து பராக் அகர்வால் நீக்கப்பட்டார். இதையடுத்து அமெரிக்காவை சேர்ந்த லிண்டா யாக்கரினோவை அதிகாரபூர்வமாக டுவிட்டர் சிஇஓவாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.