சென்னை, மே 10–
சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் தானமாகப் பெறப்பட்டதில் 7 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, மணலி புதுநகர் எழில் நகரைச் சேர்ந்த மகேஷ் (வயது 33) என்பவர், மின் ஆற்றல் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 5ந் தேதி தனது நண்பரை அவரது வீட்டில் இறக்கி விட்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். பின்னர் அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அவர் கடந்த 7ந் தேதி மூளைச் சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் கொடுக்க குடும்பத்தினர் முன் வந்தனர். இவ்வாறு தானம் செய்யப்பட்ட உறுப்புகள், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்காக பதிவு செய்து காத்திருந்த நோயாளிகளுக்கு அரசு விதிகளின்படி வழங்கப்பட்டது.
அவரது உடலிலிருந்து எடுக்கப்பட்ட கல்லீரல், 2 சிறுநீரகம், இருதய வால்வு, தோல், 2 கண்கள் என மொத்தம் 7 உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
ஒரு சிறுநீரகம் அரசு ஸ்டான்லி மருத்துவமனை நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை நோயாளிக்கும், கல்லீரல் மியாட் மருத்துவமனை நோயாளிக்கும், இருதய வால்வுகள் எம்எம்எம் மருத்துவமனை நோயாளிக்கும், தோல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கும், கண்கள் எழும்பூர் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
விபத்தில் இருதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்ததால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
ஆழ்ந்த சோகத்திலும் தானம் கொடுக்க முன்வந்த குடும்பத்தினருக்கு நன்றியும், ஆறுதலும் அரசு ஸ்டான்லி மருத்துவமனை சார்பாக வழங்கப்பட்டது.
மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மகேஷின் உடலுக்கு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி தலைமையில் மருத்துவமனை கண்காணிப்பாளர், மருத்துவ அதிகாரி, துறைத் தலைவர்கள், அமைச்சுப் பணியாளர்கள் உள்ளிட்டோர் அஞ்சலியும், மரியாதையும் செலுத்தினார்கள்.
#உடலுறுப்பு தானம்