செய்திகள்

அரசு விருந்தினர் மாளிகையை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது

சென்னை, மார்ச் 16

அரசு விருந்தினர் மாளிகையை எதிர்க்கட்சியினரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து பல்வேறு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

மத்தியிலும்- மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள கட்சியினர் தங்கள் அலுவலக அதிகாரத்தை தேர்தல் களப்பணிகளுக்காக பயன்டுத்துவது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு எந்த வகையிலும் இடம் அளிக்க கூடாது.

அமைச்சர்கள் தங்கள் அலுவலக பார்வையிடலையும், தேர்தல் பணிகளையும் இணைத்து ஒரே நேரத்தில் மேற்கொள்ளக்கூடாது. அரசு இயந்திரத்தையும் ஊழியர்களையும் தங்களது தேர்தல் பணிக்காக பயன் படுத்தக் கூடாது.

தேர்தல் பொதுக் கூட்டங்களை நடத்தும் திடல்கள் போன்ற பொது இடங்கள் ஹெலிபேடு தளம் போன்றவைகளை ஆளும் கட்சியினர் மட்டும் பயன்படுத்த கூடாது. மற்ற கட்சியினரும் வேட்பாளர்களும் கேட்கும் போது அவர்களுக்கும் வசதிகள் வழங்கப்பட வேண்டும்.

அரசு விருந்தினர் மாளிகை, ஓய்வு இல்லங்கள், மற்றும் பிற தங்கும் இடங்களை ஆளும் கட்சியினர் அதன் வேட்பாளர்கள் மட்டுமே பயன்படுத்துவது கூடாது. பிற கட்சிகளும், வேட்பாளர்களும், முறையாக பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்.

ஆனால் எந்த ஒரு கட்சியும், வேட்பாளரும் அவற்றை தேர்தல் அலுவலகமாக பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள தால் அமைச்சர்களும், அதிகாரிகளும் எந்த வடிவத்திலும் நிதி உதவியோ, வாக்குறுதிகளையோ வழங்கக்கூடாது.

எந்த ஒரு திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டக்கூடாது. சாலை அமைத்தல், குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தருவது குறித்த வாக்குறுதிகளை அளிக்க கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *