திருநெல்வேலி, ஜன. 25–
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த தாயின் உடலை அவரது மகன் 15 கி.மீ. தூரம் சைக்கிளில் கட்டி எடுத்துச் சென்ற சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வடக்கு மீனவன்குளம் மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெபமாலை. இவரது மனைவி சிவகாமியம்மாள் (60). இவர்களது மகன் பாலன் (38). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். சிவகாமியம்மாளுக்கு கடந்த 11–ந் தேதி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை கிராமத்திலிருந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சைக்கிளில் 15 கி.மீ. தூரம் பாலன் அழைத்து வந்து சேர்த்துள்ளார்.
சைக்கிளில் உடலை கட்டி
உருட்டி சென்றார்
அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப்பின் சிவகாமியம்மாள் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்குமுன் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிவகாமியம்மாள் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மருத்துவர்கள் ஆலோசனையின்பேரில் மீண்டும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை அவரது உடல்நிலை மீண்டும் மோசமானது. எனவே உதவிக்கு வேறு நபரை அழைத்து வரும்படி மருத்துவமனை சார்பில் பாலனிடம் கூறியுள்ளனர். உதவிக்கு யாரும் இல்லாததால் அவர் தவித்தார். உடனே சாகும் தருவாயில் தமது தாயாரை மருத்துவமனையில் இருந்து வெளியே அழைத்துச் சென்றார். மருத்துவமனைக்கு அருகே உள்ள ஒரு கோவில் வளாகத்தில் தாயாருக்கு காபி வாங்கி கொடுத்தார். அப்போதே காபி உட்கொள்ள முடியவில்லை. சிறிது நேரத்தில் அவர் இறந்தார். நேற்று காலை 11 மணியளவில் இறந்த தாயின் உடலை என்ன செய்வதென்று தெரியாத பாலன் மாலையில் தமது சைக்கிளில் கட்டி சைக்கிளை உருட்டிக்கொண்டு தமது ஊருக்கு புறப்பட்டார்.
இதற்கிடையில் மருத்துவமனையில் காலை உணவு அருந்திய சிவாகமியம்மாளை, சிறிது நேரத்தில் காணவில்லை. இதைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் நாங்குநேரி உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் விசாரணை நடத்தி தேடம் பணியில் ஈடுபட்டனர். திருநெல்வேலி நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில் நாங்குநேரிக்கு முன்னதாக மூன்றடைப்பு பகுதியில் இரவு 10 மணி அளவில் அவர் ஒரு சடலத்துடன் செல்வதை பார்த்த மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் பாலனை தடுத்து நிறுத்தி பார்த்தபோது, சிவகாமியம்மாள் உயிரிழந்திருந்தார். ஆனால், தாயார் இறந்தது பாலனுக்கு தெரியவில்லை. திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உணவு கொடுத்தபோது அவர் சாப்பிடவில்லை என்பதால் வீட்டுக்கு அழைத்துவந்து விட்டதாக பாலன் போலீஸில் தெரிவித்துள்ளார்.
போலீசார் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இன்று பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல் பாலன் மற்றும் அவரது அண்ணன் சவரிமுத்துவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்புமணி ராமதாஸ்,
டிடிவி தினகரன் கண்டனம்
திருநெல்வேலியில் உயிரிழந்த தாயாரின் உடலை அவரது மகன் சில கிலோமீட்டர் தொலைவுக்கு மிதிவண்டியில் கட்டி எடுத்துச் சென்ற சம்பவத்துக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அன்புமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்த அவல நிலைக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தின் மனிதநேயமற்ற நடத்தை தான் காரணமாகும். மருத்துவமனை நிர்வாகத்தின் செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. இனிவரும் காலங்களில் உயிரிழக்கும் நிலையில் உள்ளவர்களை வீட்டிற்கு அனுப்பி வைப்பதை தவிர்க்க வேண்டும். சிலர் சென்டிமெண்ட் காரணமாக ஆபத்தான நிலையில் உள்ளவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று உறவினர்கள் விரும்பினால், மருத்துவப் பணியாளர்களின் கண்காணிப்பில், உரிய வசதிகள் கொண்ட அவசர ஊர்தி வாயிலாக மட்டுமே அவர்கள் அனுப்பி வைக்கப்படுவதை மருத்துவமனை நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். என்று கூறியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில், “இறந்த தாயின் உடலை சைக்கிளில் 18 கி.மீ எடுத்துச் சென்ற மகன் – திருநெல்வேலி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் மனிதநேயமற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது. மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்ற செயல்கள் இனியும் தொடராத வகையில் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் போதுமான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.