செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் புதிதாக 551 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள்

புதுடெல்லி, ஏப்.26–-

பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து அரசு மருத்துவமனைகளில் 551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலையால் தினந்தோறும் 3.50 லட்சத்துக்கு அதிகமானோர் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து, ஆக்சிஜன் விநியோகத்தை அதிகப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜனை இறக்குமதி செய்யவும், உள்நாட்டில் உற்பத்தியை அதிகப்படுத்தி தேவையான இடங்களுக்கு விரைந்து கொண்டு சேர்க்கவும் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக விமானம் மூலம் ஆக்சிஜன் லாரிகள் கொண்டு செல்லப்பட்டு தேவையான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் பிஎம் கேர்ஸ் மூலம் புதிதாக 551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அரசு மருத்துவமனைகளில் அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் மூலம் மாவட்ட அளவில் ஆக்சிஜன் தடையின்றி கிடைக்கச் செய்ய முடியும். பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும்.

இதற்கான கொள்முதல் பணிகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கவனிக்கும்.

இதற்கு முன் ரூ.201.58 கோடி மதிப்பில் 162 பிஎஸ்ஏ மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிஎம் கேர்ஸ் நிதி ஒதுக்கீடு செய்தது. இதேபோன்ற மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிலையத்தைத்தான் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தியும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *