செய்திகள்

அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: மும்பையில் ரத்தன் டாடா உடல் தகனம்

Makkal Kural Official

மும்பை, அக். 11–

பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு மத்திய மந்திரி அமித்ஷா, தொழில் அதிபர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மும்பையில் அரசு மரியாதை யுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு, உடல் தகனம் செய்யப்பட்டது.

பிரபல தொழில் அதிபரான டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 86. ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் பார்சி மதத்தை சேர்ந்தவர்.

நேற்று காலை அவரது உடல் வெள்ளை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட காரில் போலீஸ் பேண்டு வாத்திய மரியாதையுடன் கொலபாவில் உள்ள வீட்டில் இருந்து அஞ்சலிக்காக தென்மும்பையில் உள்ள என்.சி.பி.ஏ. அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தேசிய கொடியை போர்த்தியபடி அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.

ரத்தன் டாடாவின் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) தலைவர் சரத்பவார், சுப்ரியா சுலே எம்.பி. நவநிர்மாண்சேனா தலைவர் ராஜ் தாக்கரே, கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், ஆதித்ய பிர்லா குழும சேர்மன் குமார் மங்கலம் பிர்லா, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், தொழில் அதிபர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீட்டா அம்பானி, டாடா நிறுவன அதிகாரிகள் மற்றும் பல நிறுவனங்களின் தொழில் அதிபர்கள், ஊழியர்கள் மற்றும் பலர் ரத்தன் டாடா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மாலை 4 மணியளவில் என்.சி.பி.ஏ. அரங்கில் இருந்து ஒர்லியில் உள்ள தகன மையத்துக்கு உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ரத்தன் டாடா உடல் மெரின் டிரைவ், கடற்கரை சாலை வழியாக கொண்டு செல்லப்பட்டது.

அங்கு மராட்டிய அரசு முழு மரியாதையுடன் அவரது உடலுக்கு இறுதி சடங்கு நடந்தது. மும்பை போலீசார் துப்பாக்கி குண்டுகளை முழங்கி மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் இறுதி சடங்கிலும் கலந்து கொண்டனர். இதேபோல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.

ரத்தன் டாடா மறைவை யொட்டி நாடு முழுவதும் வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் ஊழியர்கள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ-–மாணவிகள் அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *