செய்திகள்

அரசு பேருந்து–கார் மோதல்: 5 பேர் பலி

Makkal Kural Official

கரூர், பிப். 26–

கரூர் அருகே குளித்தலையில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

கரூரில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை அருகே இன்று அதிகாலை அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார் பேருந்தின் முன்புறம் அடியில் பெரும் சேதத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இரண்டு பெண்கள், மூன்று ஆண்கள் என 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது பஸ்ஸின் அடியில் கார் சிக்கி உடல் நசுங்கி இருப்பதைக் கண்டு, முசிறி தீயணைப்பு துறையிருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்குப்பின் காரின் இடிபாடுகளுடையே சிக்கிய 5 பேரின் உடல்களையும் மீட்டனர்.

5 பேர் பலி

5 பேரின் உடல்களை குளித்தலை போலீசார் கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்தவர்களின் விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில், கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 52), அவரது மனைவி கலையரசி, மகள் அகல்யா, மகன் அருண் ஆகியோருடன் ஒரத்தநாடு அருகே கீழையூரில் உள்ள அக்னி வீரனார் கோயிலுக்கு சாமி கும்பிட காரில் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் உயிரிழந்தாக தெரியவந்தது.

மேலும் காரை ஓட்டி வந்த ஈரோடு மாவட்டம் வில்லரசன்பட்டியைச் சேர்ந்த விஷ்ணு என்பவரும் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து கரூர் எஸ்பி ஆர்.பெரோஸ்கான் அப்துல்லா, கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார், குளித்தலை வட்டாட்சியர் இந்துமதி, குளித்தலை காவல் ஆய்வாளர் உதயகுமார் மற்றும் குளித்தலை வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் மீனாட்சி ஆகியோர்கள் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *