4 ஆண்டுகளில் தொழில்நுட்ப படிப்புகளில் 82 ஆயிரம் மாணவர்கள் பலன்
சென்னை, ஏப்.25-–
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் கடந்த 4 ஆண்டுகளில் தொழில்நுட்ப படிப்புகளில் 82 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கிலும், உயர்கல்விக்கான வாய்ப்பு களை ஏற்படுத்தவும் அரசு பள்ளி மாணவர்களுக்காக முதலில் மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வழங்கியது.
அதன் தொடர்ச்சியாக இளநிலை தொழிற்கல்வி படிப்பு களுக்கான சேர்க்கையிலும் அதே முன்னுரிமையை வழங்க அரசு முடிவு செய்தது. அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படித்து இந்த திட்டத்தின்கீழ் உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு கல்வி, விடுதி, போக்குவரத்து போன்றவற்றுக்கான முழு கட்டணத்தையும் அரசே ஏற்கும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அந்த வகையில் 2021-–22-ம் கல்வியாண்டு முதல் 2024-–25-ம் கல்வியாண்டு வரையிலான கடந்த 4 ஆண்டுகளில் தொழில்நுட்ப படிப்புகளில் இந்த திட்டத்தின் கீழ் 81 ஆயிரத்து 95 மாணவ-ர்கள் பயன் பெற்று இருப்பதாகவும், அதற்காக ரூ.695 கோடியே 87 லட்சம் செலவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அரசு தெரிவித்து இருக்கிறது. இந்த விவரங்களை உயர்கல்வித் துறை வழங்கிய கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவித்துள்ளது.