செய்திகள்

‘‘அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும்’’: வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் அறிவுறுத்தல்

Spread the love

சென்னை, ஜூன் 12–

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் அறிவுறுத்தினார்.

வி.ஐ.டி.யில் வேலூர் மாவட்ட அரசு பள்ளி பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு உயர் மற்றும் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு, விருது மற்றும் பள்ளிகளுக்கு மேஜை வழங்கும் விழா வி.ஐ.டி. சென்னா ரெட்டி அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் வி.ஐ.டி. வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் பேசுகையில் இவ்வாறு கூறினார். தொடர்ந்து அவர் பேசுகையில் கூறியதாவது:–

‘‘வி.ஐ.டி. 16–ம் ஆண்டாக வேலூர் மாவட்ட அரசு பள்ளிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த பாராட்டு மற்றும் விருது வழங்கும் விழாவை நடத்தி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் அதிகமான அரசு பள்ளிகள் உள்ளன. வி.ஐ.டி. ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்கள் முற்றிலும் கட்டணம் ஏதுமின்றி கல்வி பயில்கிறார்கள். தற்போது இந்தமாணவர்கள் அமேசான் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களில் வேலை பார்க்கிறார்கள்.

ஒரு நாடு கல்வியில் முன்னேறினால் தான் பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் முன்னேற முடியும். வளர்ந்த நாடுகளான ஜப்பான் மற்றும் கொரியாவுடன் நாம் போட்டி போடவேண்டும். கல்வியில் முன்னேறிய நாடுகளில் குற்ற விகிதங்கள் மிக குறைந்த அளவில் தான் உள்ளன. அதே போல் கல்வியில் பின் தங்கினால் நாம் அனைத்து துறைகளிலும் பின் தங்கிவிடுவோம்.

அரசு மற்றும் தனியார் துறைகளில் மாதம் சம்பளம் வாங்கி வேலை செய்கிறார்கள், ஆனால் மருத்துவம் மற்றும் கல்வி துறையில் இருப்பவர்கள் வேலைக்கு பதிலாக சேவை செய்து வருகிறார்கள். பொதுவாகவே அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து கொண்டு தான் வருகிறது. இந்த நிலைமை மாற வேண்டுமானால் அரசு பள்ளிகளிலும் தரத்தை நாம் உயர்த்த வேண்டும்.

அரசு பள்ளிகளில் படிக்கும் 65% பேர்

இந்தியாவில் 65% பேர் அரசு பள்ளிகளில் தான் படிக்கிறார்கள். தற்போது ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது, பள்ளி கல்வியில் அக்கறை கொண்டுள்ள அமைச்சர் செங்கோட்டையன் இந்த பற்றாக்குறையை களைய வேண்டும் என்றார். அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்க போதிய முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும் கல்வியல் கல்லுரிகளில் முறையாக கல்வி பயிலாமல் சான்றிதழ் பெறுகிறார்கள். இதனை தடுக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர வேண்டும். 4 ஆண்டு பயிற்சிக்கு பிறகு தான் ஆசிரியர் ஆக முடியும் என கஸ்தூரி ரங்கன் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும் ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் காலம் தவறாமை எங்கு இருக்கிறதோ அங்கு தானாகவே கல்வி உயர்ந்து விடும்’’.

இவ்வாறு அவர் பேசினார்.

டாக்டர். சேகர் விசுவநாதன்

வி.ஐ.டி. துணைத்தலைவர் டாக்டர். சேகர் விசுவநாதன் பேசியதாவது:–

தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்களை ஊக்குவிக்கவேண்டும், ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். அப்போது தான் 100 சதவீதம் தேர்ச்சியை நாம் எளிதில் அடையளாம்.

ஆசிரியர்கள் கடினமாக உழைப்பதோடு பெற்றோர்கள் உடன் தொடர்பில் இருக்க வேண்டும். மாணவர்கள் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து படிக்க வருகிறார்கள். அதனால் அவர்களுக்கு புரியும் வகையில் ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும். வி.ஐ.டி. அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த போதிய வசதிகளை செய்து தருகிறது. இதனை கருத்தில் கொண்டு பள்ளி கல்வியில் வேலூர் மாவட்டத்தை முதன்மையாக ஆசிரியர்களான தாங்கள் முழு ஈடுபாட்டுடன் செயல் பட வேண்டும் எனக் கூறினார்.

மாவட்ட கலெக்டர் ராமன் பேசியதாவது:–

தமிழ்நாடு உலகளவில் கல்வியில் போட்டி போடவேண்டும். வேலூர் மாவட்டம் பள்ளி கல்வியில் முன்னேற வி.ஐ.டி. போதிய அளவில் உதவி வருகிறது. மருத்துவம் மற்றும் பள்ளி கல்வி துறையை இலங்கையில் அரசே தான் ஏற்றி நடத்திவருகிறது. மாணவர்களுக்கு எளிமையான வகையில் ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும். பாடம் சொல்லி கொடுப்பதை கடமையாக எண்ணாமல் தெய்வப்பணியாக எண்ண வேண்டும். எதிர் வரும் காலங்களில் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் போதிய பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றார்.

கல்வி அலுவலர் மார்ஸ்

விழாவில் வாழ்த்துரை வழங்கி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் பேசியதாவது:–

எதிர்வரும் காலங்களில் வேலூர் மாவட்டம் கல்வியில் முதன்மையாக வர போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக கூறினார்.

விழாவில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 69 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு விருதுடன் ரூ.5000 ரொக்க பரிசு வழங்கப்பட்டது. இது கடந்தஆண்டை காட்டிலும் 10 பள்ளிகள் அதிகம். மேலும் ரூ. 22 லட்சம் மதிப்பில் அரசு பள்ளிகளுக்கு மேஜை மற்றும் நாற்காலிகள் வழங்கப்பட்டது.

முன்னதாக வி.ஐ.டி. இணைத் துணை வேந்தர் எஸ். நாராயணன் வரவேற்பரை வழங்கினார். சி.எஸ்.ஆர்.டி. அண்ட் ஆர்.எஸ் ( பேராசிரியர் பொறுப்பு ) முனைவர் சி.ஆர். சுந்தரராஜன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *